போகின்ற போக்கைப் பார்த்தால் வருகின்ற தலை முறையினருக்கு சர்க்கஸ் என்றால் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே போய்விடும் போல் இருக்கிறது. விலங்குகள வதை தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம் போன்றவற்றை எதிர்கொள்ள முடியவில்லை என்று, பல சர்க்கஸ் கூடாரங்கள் காலியாகி விட்டன.
ஊருக்குள் சர்க்கஸ்:
ஊருக்குள் சர்க்கஸ் வந்து விட்டதன் அடையாளம். ” டும் டும் “ என்று பேண்ட் வாத்திய சத்தம். யானை, ஒட்டகம் என்று சில மிருகங்களோடு ஒரு சின்ன ஊர்வலம். கூடவே கோமாளி வேடம் அணிந்த ஒருவர் விளம்பர நோட்டீஸ்களை கொடுத்துக் கொண்டே செல்வார். வேடிக்கை பார்த்துக் கொண்டே நாங்களும் (சின்ன வயதில்தான்) கொஞ்ச தூரம் செல்வோம். திருச்சியில் அப்போது பெரும்பாலும் சர்க்கஸ் கீழபுலிவார்டு (முருகன் டாக்கீஸ் ) சாலையில் உள்ள டாக்டர் மதுரம் விளையாட்டு மைதானத்தில்தான் நடைபெறும். (இப்போது சர்க்கஸ் போலவே அந்த மைதானமும் பழைய நிலைமையில் இல்லை. அது மார்க்கெட் லாரிகள் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.) மேலும் அந்த மைதானம், காவிரி ஆற்றுக்கு அருகாமையில் இருந்தபடியானால் யானைகள், ஒட்டகம் போன்றவற்றை குளிப்பாட்ட அழைத்து வருவார்கள். அவைகள் ஆற்றில் குளிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கும்பல் நின்று கொண்டே இருக்கும்.
சர்க்கஸ் கூடாரம்:
சர்க்கஸ் கூடாரம் நன்கு பெரிதாக அடைக்கப்பட்டு இருக்கும். கூடாரத்தின் பல இடங்கள் கிழிந்துபோய் ஒட்டு போட்டு இருப்பார்கள். உள்ளேயிருந்து மேலே கூடாரத்தைப் பார்த்தால் சில இடங்களில் பெரிதாக இருக்கும் ஓட்டை வழியே ஆகாயம் தெரியும்.. வாசலில் பல்வேறு வண்ணக் கொடிக் கம்பங்களைக் காணலாம். கூடாரத்தின் பக்கவாட்டில், கூண்டு வண்டிகளில் அடைககப் பட்டிருக்கும் சிங்கங்களின் உறுமல், வெளியே கட்டப்பட்டு இருக்கும். குதிரைகளின் கனைப்பொலி இவைகளைக் கேட்கலாம். ஒட்டகங்கள் நின்று கொண்டு அல்லது படுத்துக் கொண்டு அசைபோட்ட வண்ணம் இருக்கும். யானைகள் தும்பிககையை ஆட்டியபடி அசைந்து கொண்டே நின்று கொண்டு இருக்கும். எல்லா விலங்குகளும் கட்டிப் போட்டுதான் இருக்கும். அந்த இடத்திலிருந்து மிரு்கங்களின் சாண வாடை வந்து கொண்டே இருக்கும். எங்களைப் போன்ற சிறுவர்கள் உள்ளே வந்து விடாதபடி காவலாளி ஒருவன் வாசலிலேயே விரட்டிக் கொண்டு இருப்பான்
சர்க்கஸ் காட்சிகள்:
பாம்பே சர்க்கஸ், இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ் என்று பிரபலமான யாவும் திருச்சியில் சர்க்கஸ் காட்சிகளை நடத்தி உள்ளனர். திருச்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கிய புள்ளியை வைத்து சர்க்கஸ் நிகழ்ச்சியின் முதல்நாளை தொடங்குவார்கள். பெரும்பாலும் மாலை நேரம்தான் சர்க்கஸ் காட்சிகள் தொடங்கும். விடுமுறை நாட்களில் மட்டும் பிற்பகல் காட்சியோடு இரண்டு காட்சிகள். வெளியூர்க்காரர்களுக்கு வசதி. என்ன இருந்தாலும் மாலை நேரம் தொடங்கி இருட்டில் பிரகாசமான விளக்குகள் மத்தியில் நடைபெறும் சர்க்கஸ் காட்சிகள்தான் ரசிக்க நன்றாக இருக்கும்.
சர்க்கஸ் கூடாரத்தில் உள்ளே குறைந்த கட்டணத்தில் காலரிகளும், அதிக கட்டணத்தில் சர்க்கஸ் அரங்கத்தை ஒட்டி நாற்காலிகளும் இருக்கும். சர்க்கஸ் சாகசக் காட்சிகளை சொல்லுவதைவிட நேரில் பார்த்தால்தான் அதன் அருமை தெரியும். வண்ண வண்ண கொடிகளுடன் குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள், அழகு மங்கையர், சித்திரக் குள்ளர்கள் என்று அணிவகுப்பு. அதன் பின்னர் காட்சிகள் தொடங்கும்.
சில நினைவுகள்:
சிறுவயதில் கார்லோ கல்லோடி (Carlo Callodi) எழுதிய பினாச்சியோ ( Pinocchio ) ஒரு மரப்பாவையின் கதை என்ற நூலை தமிழில் படித்து இருக்கிறேன். அதில் வரும் சர்க்கஸ் சம்பவங்கள் மறக்க முடியாதவை. எம்ஜிஆரும் சரோஜாதேவியும் நடித்த “ பறக்கும் பாவை “ என்ற படம் முழுக்க முழுக்க சர்க்கஸ் கலைஞர்கள் கதைதான். நாகேஷ் செய்யும் காமெடி வயிறு குலுங்க வைக்கும். அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சர்க்கஸ் கோமாளியாக குள்ளக் கமல் வேடத்தில் ( தந்திரக் காட்சி) நடித்துள்ளார்
( ALL PICTURES : THANKS TO “ GOOGLE ” )
குலமகள் ராதை என்று ஒரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது. அதில் சர்க்கஸ் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒரு பாடல். கருத்தாழம் மிக்க பாடல். இதோ ..... ...
( ALL PICTURES : THANKS TO “ GOOGLE ” )
குலமகள் ராதை என்று ஒரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது. அதில் சர்க்கஸ் ஊஞ்சல் ஆட்டத்துடன் ஒரு பாடல். கருத்தாழம் மிக்க பாடல். இதோ ..... ...
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று (2)
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று (2) (இரவுக்கு)
கணக்கினில் கண்கள் இரண்டு
கணக்கினில் கண்கள் இரண்டு
அவை காட்சியில் ஒன்றே ஒன்று (2)
பெண்மையின் பார்வை ஒரு கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி
அவை பேசிடும் வார்த்தை பல கோடி (2) (இரவுக்கு)
அங்கும் இங்கும் அலைபோலே
அங்கும் இங்கும் அலைபோலே
தினம் ஆடிடும் மானிட வாழ்விலே (2)
எங்கே நடக்கும் எது நடக்கும்
எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரரிவார் (2) (இரவுக்கு)
- பாடல்: கண்ணதாசன் (படம்: குலமகள் ராதை)