Saturday, 31 December 2016

ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய பழைய குப்பைகள் – எனது பார்வை




காணாமலே நட்பு என்ற வகையில், வலையுலகில் எனக்கு அறிமுகமானவர் நண்பர் திரு ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள். அவருடைய எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவருடைய தேவியர் இல்லம் என்ற வலைத்தளத்தில் வெளியாகும் அருமையான கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். புதுக்கோட்டையில் (2015) மிகவும் சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டில் ஒருமுறை நேரில் அவரை சந்தித்ததுதான். 

ஜோதிஜியின் படைப்புகள்:

அவருடைய மின்நூல்களான ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள், ஈழம் வந்தார்கள் வென்றார்கள், தமிழர் தேசம், வெள்ளை அடிமைகள், காரைக்குடி உணவகம் ஆகியவற்றை எங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மின்நூலகத்தில் தரவிறக்கம் செய்ததோடு, ரசித்து படித்தும் இருக்கிறேன். அச்சு நூல் வடிவில் வெளியான அவருடைய ‘டாலர் நகரம்’ - திருப்பூர் வரலாற்றில் ஒரு முக்கியமான நூல் ஆகும். எனது வலைப்பதிவினில் இந்த நூலினுக்கு ஒரு விமர்சனக் கட்டுரையும் எழுதி இருக்கிறேன். 

பழைய குப்பைகள்:

ஜோதிஜி (திருப்பூர்) அவர்களின் கட்டுரைகள் யாவும் எதார்த்தமானவை; வாழ்வியல் சிந்தனைகளை அனுபவ வரிகளாகக் கொண்டவை. அந்த வகையில் இப்போது வெளிவந்துள்ள ’பழைய குப்பைகள்’ என்ற நூலும் சிறப்பான ஒன்று. நான் என்ற முன்னுரைப் பக்கம் தொடங்கி, அங்கீகாரமும் அவஸ்தைகளும் என்ற ஆறாவது கட்டுரை வரை, எழுத்தாளர் ஜோதிஜி அவர்களின் எழுத்துலக, குறிப்பாக வலைப்பக்க அனுபவங்களைக் காண முடிகிறது. 

// மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது. //

என்று தான் இன்னமும் எழுதி வருவதன் சூட்சுமத்தைச் சொல்லுகிறார் ஆசிரியர்.

ஆசை மரம் – என்ற தலைப்பில், படிக்கப் படிக்க கூடவே எனது பழைய நினைவுகளும் பின்னோக்கி சென்றன. அவர் இந்தக் கட்டுரையில் சொல்வது போல ‘வெறுமைதான்’ மனதில் வந்து, ஏதோ ஒன்றை இழந்ததை, ஆனால் இன்னதென்று உணர முடியாமல், நெருடலைத் தந்தது.

பெரும்பாலும் புத்தகக் காதலர்கள் யாவரும் செய்யும் ஒரு காரியம், தாங்கள் படிக்கும் புத்தகங்களை வாங்கி வாங்கி சேர்ப்பதுதான். ஆனால் மற்றவர்களுக்கு இவை பழைய குப்பைகள். இந்த புத்தகக் காதல் பற்றி ’பழைய குப்பைகள்’ என்ற தலைப்பினில் ஆசிரியர் சொல்லி, இருக்கிறார்.

// ஆறாவது படிக்கும் போது வாசிக்கத் தொடங்கிய வாழ்க்கையில் கல்லூரி படிப்பு படித்து முடித்த போது தான் காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கும் பழக்கம் உருவானது,  காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவது என்பது காசை பிடித்த கேடு என்பது வீட்டில் உள்ளவர்களின் தராக மந்திரம்,  ஆனால் புத்தக காதல் என்பது இன்று வரை மாறவில்லை,  என்ன கற்றுக் கொண்டோம்? இதனால் என்ன பிரயோஜனம்? என்று எதைப்பற்றியும் யோசிப்பதில்லை, வாசிக்க வேண்டும் என்பது மட்டும் கொள்கையாக இருந்தது,  ஒவ்வொரு காலகட்டத்திலும் வைத்திருந்த கொள்கைகள் மாறியிருக்கிறது, ஆனால் இந்த புத்தக வாசிப்பு என்ற கொள்கை மட்டும் தான் இன்று வரை மாறாமல் அப்படியே இருக்கிறது //

என்பது ஆசிரியரின் கருத்து. 

சுருக்கமாகப் பேசு என்ற கட்டுரையைப் படித்த போது, நான் எனது சின்ன வயதினில், ரெயில் பயணமாக திருச்சியிலிருந்து சென்றபோது, இடைப்பட்ட செங்கல்பட்டு தொடங்கி மதுராந்தகம் ஏரியைத் தாண்டும் வரை உண்டான அந்த குளிர்ச்சியை, முதன் முதலாக அந்தக் கால மெட்ராஸுக்குள் ’பட்டணப் பிரவேசம்’ செய்த அந்த நாளை நினைத்து, எனக்குள் மனம் பரிதவித்தது. இவற்றுள் வரும் அவரது நடைமேடை (ரெயில் நிலையம்) அவருக்கென்று அமைந்த அருமையான சிந்தனை மேடை.  

’சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை’ – என்ற கட்டுரையில் களம்.1 களம்.2 களம்.3 என்று அமைத்து போலியான சாதி ஒழிப்பாளர்களைப் பற்றியும், குழந்தைகள் மனதில் ஜாதி, மதம் உண்டாக்கும் நெருடல்களைப் பற்றியும், இசுலாமியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப் படுவது பற்றியும் வெளிப்படையாக நடுவுநிலையோடு சொல்லி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

இன்னும் பயணம் பற்றியும், விழா தரும் போதை பற்றியும், விளம்பரம் படுத்தும் பாடு பற்றியும், ஆன்மீகத் தேடலில் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றியும்., தமிழ் தேசியம் பற்றியும், மதம் மற்றும் சாதீயம் பற்றிய தனது பார்வையையும் -  இந்த நூலில் சொல்லி இருக்கிறார்.

குப்பை என்பதற்கு தமிழில் செல்வம் என்ற பொருளும் உண்டு. ( ’கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை’ – சிலப்பதிகாரம்) ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய இந்த ’பழைய குப்பைகள்’ என்ற நூல், வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். 

(நூலினைத் தரவிறக்கம் செய்ய http://freetamilebooks.com/ebooks/pazhaiya-kuppaigal )





Tuesday, 20 December 2016

புதுக்கோட்டை – இணையத்தமிழ் பயிற்சி முகாம் 2016 – பகுதி.2



சென்ற பதிவின் ( http://tthamizhelango.blogspot.com/2016/12/2016-1.html ) தொடர்ச்சி …… …
இணையத் தமிழ் பயிற்சி முகாம்:

ஒரு சிறிய தேநீர் இடைவேளை (TEA TIME ) முடிந்ததும், கல்லூரி வளாகத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த ’கம்ப்யூட்டர் லேப்’ – இல்  இணையத் தமிழ் பயிற்சி முகாம் தொடங்கியது. 

(படம் மேலே) பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் புதிய பயனர்களுக்கு ஜிமெயில் தொடங்குவது, வலைப்பக்கம் தொடங்குவது என்று பாடம் எடுத்தார். 

(படம் மேலே) திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தனது வலைத்தளத்தினில் உள்ள, தொழில் நுட்பம் சார்ந்த பதிவுகளை எடுத்துக் காட்டி விளக்கினார்.

(படம் மேலே) பிரின்சு என்னாரெசுப் பெரியார், (சென்னை) அவர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதுவது குறித்து விளக்கம் அளித்தார்.

மதிய உணவு இடைவேளை:

காலையும் மாலையும் கல்லூரி நிர்வாகம் சார்பாக தேநீரோடு பிஸ்கட்டுகளும் மற்றும் மதிய உணவும் (சைவம் அசைவம்) வழங்கப் பட்டன. மதிய உணவின்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே.









மதிய உணவிற்குப் பிறகு மீண்டும் பயிற்சி முகாம் தொடங்கியது.

(படம் மேலே) NM.கோபிநாத் (G Tech Education புதுக்கோட்டை) அவர்கள் தொழில்நுட்ப பயன்பாடுகளை விளக்கினார்.

(படம் மேலே) ரமேஷ் டி.கொடி (CODESS TECHNOLOGY, திருச்சி) அவர்கள் யூடியூப்பைப் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.

(படம் மேலே) வீ.உதயகுமார்

கில்லர்ஜி – எஸ்.பி.செந்தில்குமார் – கவிஞர் மீரா செல்வகுமார் – புதுகை கேமரா செல்வா – ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

(படம் மேலே) முனைவர் பா.ஜம்புலிங்கம் (தஞ்சை) அவர்கள், தமிழ் விக்கிபீடியாவில் எழுதும்போது எவையெவற்றை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்பதனை, தனது அநுபவங்களோடு விளக்கினார். 

(படம் மேலே) செல்போன் ஆப்ஸ் பற்றி –  ராஜ்மோகன் (ஆசிரியர், புதுக்கோட்டை) அவர்கள் விளக்கினார்.
(படம் மேலே) பயிற்சி முகாமின் போது, ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள், ஒவ்வொரு பயிற்சியாளரையும் அறிமுகப்படுத்தி பேசினார்.

(படம் மேலே) கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல் (ஆங்கிலத் துறை) அவர்கள் நன்றியுரை நவில பயிற்சி முகாம் இனிதே நிறைவுற்றது.

பயிற்சி முகாமில் எடுக்கப்பட்ட மற்ற படங்கள் கீழே






காலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு வருவதற்கும், மாலை திரும்பி செல்வதற்கும், மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் தங்களது கல்லூரி பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் அவர்கள் வரும் 2017 ஆம் ஆண்டிற்கான, தங்களது  கல்லூரியின் மாதக் காலண்டரையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர்.

கீழே உள்ள படங்கள் புதுகை செல்வா அவர்களது வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவருக்கு மனமார்ந்த நன்றி. மேலும் பல படங்களத் தெளிவாகப் பார்க்க அவரது வலைத்தளம் அல்லது ஃபேஸ்புக் சென்று பார்க்கவும்.
 அனைவருக்கும் நன்றி! வணக்கம்!



புதுக்கோட்டை – இணையத்தமிழ் பயிற்சி முகாம் 2016 – பகுதி.1



புதுக்கோட்டையில். இணையத் தமிழ் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, புதுக்கோட்டை கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாமானது, மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) வளாகத்தில் சென்ற 18.12.2016 – ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. 

அறிவிப்பு வந்ததிலிருந்து அதில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலோங்கியே இருந்தது. நல்லவேளையாக அன்றைக்கு திருமணம் போன்ற வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. திருச்சியிலிருந்து  பஸ்சில் புறப்பட்டு புதுக்கோட்டைக்கு காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விட்டேன். புதுக்கோட்டையில் எப்போதும் சாப்பிடும் ஹோட்டலுக்கு சென்று விசாரித்தால் டிபன் இன்னும் ரெடியாகவில்லை, இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள்.

எனவே பஸ் ஸ்டாண்ட் பக்கம் சென்று பொழுதைப் போக்கினேன். தஞ்சையிலிருந்து வரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு போன் செய்ததில் அவர் நேரே பயிற்சி முகாம் நடக்கும் கல்லூரிக்கு வந்து விடுவதாகச் சொன்னார். எனவே அரைமணி நேரம் சென்று அதே ஹோட்டலில் காலை டிபனை முடித்துக் கொண்டேன். பின்னர் ஆசிரியர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு போன் செய்தேன். அவர் கல்லூரியின் தனிப் பேருந்து ஒன்பது மணிக்கு புறப்பட இருப்பதாகச் சொன்னார்.. மறுபடியும் பஸ் ஸ்டாண்டில் பொழுதைப் போக்க இஷ்டப் படாததால்  தேவகோட்டை செல்லும் பஸ்சில் ஏறி, லேனா விளக்கு என்ற இடத்தில் இறங்கிக் கொண்டேன். நான்கு சாலைகள் சந்திக்கும் அந்த கூட்டுரோட்டில் பயிற்சி முகாம் பற்றிய ப்ளக்ஸ் பேனர் அன்புடன் வரவேற்றது. மிதமான பனி; ’சுள்’ என்ற இதமான வெயில் என்று, நான் பயிற்சி நடக்கும் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) நோக்கி நடந்தேன். கல்லூரி வாசலிலிலும் ஒரு ப்ளக்ஸ் பேனர் அன்புடன் வரவேற்றது..

(படம் மேலே) லேனா விளக்கு சாலை முக்கில் ப்ளக்ஸ் பேனர்

(படம் மேலே) கல்லூரி வாசலில் ப்ளக்ஸ் பேனர்

விழா தொடங்குவதற்கு முன்னர்:

கல்லூரியில் நுழைந்தவுடன், முன்னதாகவே வந்துவிட்ட, முனைவர் B.ஜம்புலிங்கம் அய்யா மற்றும் நண்பர் கில்லர்ஜி இருவரும் என்னை வரவேற்றனர். அதுசமயம் நண்பர் கில்லர்ஜி தான் எழுதிய ‘தேவகோட்டை தேவதை தேவகி’ நூலினை எங்களுக்கு அன்பாக வழங்கினார்.அப்போது அங்கு வந்த, அந்த கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல் (ஆங்கிலத் துறை) அவர்கள் எங்களை வரவேற்று, கல்லூரியின் முதல் தளத்தில் இருந்த அரங்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

(படம் மேலே) கில்லர்ஜி, முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் நான்

விழா தொடங்கியது:

ஒவ்வொருவராக வர அரங்கம் நிரம்பியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் புதுக்கோட்டை, கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய இணையத் தமிழ் பயிற்சி முகாம் இனிதே துவங்கியது. திரு ராசி.பன்னீர் செல்வன் அவர்கள் எல்லோரையும் வரவேற்று பேசினார். மவுண்ட் சீயோன் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு ஜெய்சன் K.ஜெயபாரதன் அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். கவிஞர் திரு.தங்கம் மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை செய்தார்..கல்லூரி முதல்வர் திரு பி. பாலமுருகன் அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.

விழாவில் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, கவிஞர் வைகறை மற்றும் ஆசிரியர் குருநாத சுந்தரம் ஆகியோருக்கு மவுன.அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேடையில் இருந்தவர்களையும், மூத்த வலைப்பதிவர்களையும் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சி முகாம் சார்பாக ‘கணிணித் தமிழ்க் கையேடு’ வெளியிடப்பட்டது. கல்லூரி ஆசிரியர் பா.சக்திவேல் (ஆங்கிலத் துறை) அவர்களது உரைக்குப் பிறகு ஆசிரியை மு.கீதா அவர்கள் நன்றி கூறினார். மேடை நிகழ்ச்சிகளை ஆசிரியர் - முனைவர் மகா சுந்தர் அவர்கள் சிறப்பாகத் தொகுத்துத் தந்தார்.

(படம் மேலே) திரு ஜெய்சன் K.ஜெயபாரதன் அவர்கள் தலைமை ஏற்று உரை – (மேடையில் இடமிருந்து வலம் கல்லூரி முதல்வர் திரு பி. பாலமுருகன், கவிஞர் தங்கம் மூர்த்தி, ஆசிரியர் நா.முத்துநிலவன், ஆசிரியர் முனைவர் மகா.சுந்தர் மற்றும் ராசி.பன்னீர் செல்வன்) 

(படம் மேலே) ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் உரை

(படம் மேலே) ‘கணிணித் தமிழ்க் கையேடு’ என்ற கையேட்டினை கவிஞர் திரு.தங்கம் மூர்த்தி அவர்கள் வெளியிட ஆசிரியை மு.கீதா அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.

(படம் மேலே) ஆசிரியை மு.கீதா அவர்கள் நன்றி தெரிவிக்கிறார்.

விழா அரங்கில் எடுக்கப்பட்ட மற்ற படங்கள் கீழே









சிறிது இடைவேளைக்குப் பிறகு இதன் தொடர்ச்சி (பகுதி.2) வெளிவரும்.