சில மாதங்களாக, வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாமல்
இருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று விலகியதால், இப்போது அடிக்கடி வெளியூர் பயணம். சென்றமுறை
புதுக்கோட்டை. இந்த தடவை பெரம்பலூர்.
முதல்நாள்:
ஏற்கனவே பத்திரிகைகளில் பெரம்பலூரில் நடக்கவிருக்கும் புத்தகத்
திருவிழா பற்றிய செய்திகள் வெளியாகி இருந்ததால் அங்கு போக வேண்டும் முடிவு செய்து இருந்தேன்.
நேற்று (30.01.16 சனிக் கிழமை) மாலை சென்றேன். பஸ் பயணம். புத்தகக் கண்காட்சி தொடங்கிய
இரண்டாம் நாள் என்பதால் மக்கள் வருகை குறைவு. ஆனாலும் மாணவர்கள் அதிகம் தென்பட்டனர்.
BAPASI ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம், பெரம்பலூர் மக்கள் சிந்தனைப்
பேரவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா இது.
வாங்கிய நூல்கள்:
பெரம்பலூர் போவதற்கு முன்னர் இண்டர்நெட்டில் ‘நூலுலகம்’ சென்று,
வாங்க வேண்டிய இரண்டு நூல்களைத் தெரிவு செய்து கொண்டேன். ஒன்று தஞ்சை ராமையாதாஸ் பாடல்கள்;
இன்னொன்று முகில் எழுதிய ஹிட்லர் –ஏனெனில் இப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் வாங்குவதில்லை;
வாங்கியவரை போதும் என்ற எண்ணம்தான். அப்படியும் கூடுதலாகவே சில புத்தகங்கள் (பழக்க
தோஷம்) வாங்கும்படி ஆகி விட்டது. இரத்தின நாயகர் & சன்ஸ் ஸ்டாலில் சில பழைய கதை
நூல்கள் வாங்கினேன் ; முன்புபோல் அவர்கள் வெளியிட்ட பெரிய எழுத்து நூல்கள் இல்லை. அப்புறம்
பிரேமா பிரசுரம் வெளியிட்ட பெரிய எழுத்து விக்கிரமாதித்தன்
கதைகள். (ஏற்கனவே வாங்கி இருந்த இந்த கதைநூல், பலரிடம் படிக்க கொடுத்ததில் சிதைந்து
விட்டது.
(படங்கள் மேலே) கவிஞர் வைகறை (புதுக்கோட்டை) அடிக்கடி ”வரலாறு முக்கியம் நண்பரே” என்று நம்மையும்
நிகழ்ச்சிகளில் போட்டோ எடுத்துக் கொள்ளச் சொல்லுவார். அதற்காக வேண்டி, நான் இருக்கும்
படங்கள்.
எனக்கு சமூக வரலாறு, மக்கள் பண்பாடு நூல்களைப் படிப்பதில் அதிக
ஆர்வம். மேலே வாங்கியவற்றுள், த.தனஞ்செயன் எழுதிய ‘தமிழகத்தில் புரத வண்ணார்கள்’ என்ற
நூலினைப் பற்றி தி இந்து (தமிழ்) நல்ல விமர்சனம் வந்து இருந்தது. எனவே அந்த நூல். எனக்கு
பழக்கமான, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தினரும் வழக்கம்போல் ஸ்டால் போட்டு
இருந்தனர். அங்கு இருந்த தெரிந்த தோழரிடம் பெரம்பலூர் ஆசிரியர் இரா.எட்வின் வந்தாரா
என்று விசாரித்தேன். எட்வின் எனக்கு அறிமுகம் கிடையாது. (இவரும் ஒரு சிறந்த வலைப்பதிவர்
மற்றும் ஆசிரியர் என்ற முறையில் சந்திக்க விருப்பம்); அவர் காலையிலேயே வந்து விட்டு
சென்றதாகச் சொன்னார்.
ஹிட்லர் கொடுத்த அலைச்சல்:
வீடு திரும்பியதும், நேற்று வாங்கிய நூல்களை எனது மனைவியும் . மகனும்
வாங்கி பார்த்தனர். எனது மகன் ( எம்.ஏ..,ஆங்கில இலக்கியம், இரண்டாம் ஆண்டு மாணவர்)
முகில் எழுதிய ஹிட்லர் என்ற நூலை மேலெழுந்த வாரியாக படித்தவர், “ அப்பா, அப்பா இந்த
புத்தகத்தில் 20 பக்கங்கள் இல்லை; ஹிட்லர் வாழ்க்கையில் நடந்த அந்த முக்கியமான நாட்களைப்
பார்ப்பதற்காக புரட்டியதில் இவை இல்லை” என்று சொன்னார். ’மர்மயோகி’ சினிமாவில் வரும் “பீம்சிங் இதென்ன புதுக்
குழப்பம்” வசனத்தை நினைத்துக் கொண்டு அந்த நூலை வாங்கிப் பார்த்தேன். அதில் 336 ஆம்
பக்கத்திற்குப் பிறகு 357 ஆம் பக்கம் தொடங்கியது – 20 பக்கங்கள் அதில் இல்லை. புத்தகம்
விற்பனை செய்த ’விழிகள் பதிப்பகம், சென்னை’ கொடுத்த ரசீது புத்தகதின் உள்ளேயே இருந்தது.
இரண்டாம் நாள்:
(படம் மேலே ) இரண்டு நாட்களுக்கும் வழங்கப்பட்ட இரண்டு இலவச அனுமதிச் சீட்டுகள்.
எனவே, இன்று காலை (31.01.16 ஞாயிறு) மீண்டும் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி செல்ல வேண்டியதாயிற்று. முதல் வேலையாக, அரங்கத்தினுள் நேரே ’விழிகள் பதிப்பகம்’ ஸ்டாலுக்கு சென்று, விவரத்தைச் சொல்லி புத்தகத்தை மாற்றிக் கொண்டேன். இன்று நேற்றைய தினத்தை விட கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அதிகம். ஒரு சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களே மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
எனவே, இன்று காலை (31.01.16 ஞாயிறு) மீண்டும் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி செல்ல வேண்டியதாயிற்று. முதல் வேலையாக, அரங்கத்தினுள் நேரே ’விழிகள் பதிப்பகம்’ ஸ்டாலுக்கு சென்று, விவரத்தைச் சொல்லி புத்தகத்தை மாற்றிக் கொண்டேன். இன்று நேற்றைய தினத்தை விட கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் அதிகம். ஒரு சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களே மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி ஸ்டால்களுக்கு வெளியே, கலைஅரங்கம், மற்றும்
சிறிய ஸ்நாக்ஸ்’ கடைகளோடு ’உலகத் தமிழர்கள் அரங்கம்’ என்று ஒரு சிறிய காட்சிக் கூடத்தையும்
வைத்து இருந்தனர். அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)
வாங்கிய நூல்கள் விவரம்:
நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்களில் நான் வாங்கிய நூல்கள் இவை.
பவளக் கொடி மாலை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
சித்திராபுத்திர நாயனார் கதை – B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்
மாடுபிடி சண்டை – B.இரத்தின
நாயக்கர் & சன்ஸ்
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.1
தஞ்சை ராமையாதாஸ் திரை இசைப் பாடல்கள் தொகுதி.2
இலக்கண வினா-விடை (சாரதா பதிப்பகம்)
தமிழகத்தில் புரத வண்ணார்கள் – த.தனஞ்செயன் எழுதியது
விக்கிரமாதித்தன் கதைகள் – பிரேமா பிரசுரம்
THE COUNT OF MONTE CRISTO (Abridged Classics)
ஹிட்லர் – முகில் எழுதியது
எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை – முகில் எழுதியது
சாண்டோ சின்னப்பா தேவர் – பா.தீனதயாளன் எழுதியது