Monday, 30 September 2013

ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”



சிலநாட்களுக்கு முன் வீட்டுத் திண்ணையிலிருந்து நாங்கள் வளர்த்த ஜாக்கி( JACKIE ) (வயது 10) விழுந்து விட்டது. அதற்கு காய்ச்சல் ஏற்பட மருந்து கொடுக்க சரியானது. (சின்ன குட்டி நாயாக இருந்தபோது எனது மகன் அதனை எடுத்து வந்தான்.) அதற்கு அடுத்து சிலதினம் சென்று, வீட்டு படிக்கட்டில் நான் கால் வழுக்கி விழுந்து விட்டேன்.முதுகில் அடிபட்டதால் வலி வந்து இப்போது குறைந்து விட்டது. அப்போதிலிருந்து  மனது சரியில்லை. மேலும் சின்னச் சின்ன பிரச்சினைகளால் குழப்பம். இந்தச் சூழ்நிலையில் ஜாக்கிக்கு மறுபடியும் உடம்பு நலமில்லை. திடமான உணவை ஜாக்கியினால். சாப்பிட இயலவில்லை. சென்ற வாரம் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். சரியாக சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். ஆனாலும் பால், தண்ணீர்  தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை.

மனது சரியில்லாததால் படிப்பது, எழுதுவது, வலைப் பதிவுகள் பக்கம் செல்வது என்று இருந்தேன். வெள்ளிக் கிழமை (27.09.2013) காலை வலையில் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்  (http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post_26.html) என்ற ஜோதிஜியின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க “ என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை வீடியோ இணைப்பாகக் கொடுத்து இருந்தார்.அந்த பாடலைக்  கேட்ட போது மனதில் இனம் புரியாத விளக்கம். இந்த பாடலை எங்கோ கேட்டது போல் இருந்தது. (பின்னர் எங்கு என்பதற்கு விடை கிடைத்தது )அப்போது அவர் பதிவில் கருத்துரைப் பெட்டியில் நான் எழுதியது

// தாங்கள் இறுதியில் இணைத்து இருந்த பிறப்பு இறப்பு தத்துவத்தை உணர்த்தும் பாடல், நெருடலானது. தனிமையில் இருக்கும் போது மீண்டும் இந்த பாடலை நிதானமாக கேட்டு அசை போட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!  //
  
அடுத்தநாள் நேற்று முன்தினம் சனிக்கிழமை  காலை முதல் இனம் புரியாத உணர்வு. ஏதோ ஒன்று நடக்கப் போவதாய் உள்ளுணர்வு. இன்னதென்று சொல்ல இயலவில்லை ஷேக்ஸ்பியர் நாடகத்தில், போரில் வெற்றி பெற்ற மாக்பெத்(MACBETH) தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம். மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் நிறைந்த இது போன்ற ஒருநாளை இதுவரை நான்  கண்டதில்லை.

So foul and fair a day I have not seen. (MACBETH -  1.3.38)


மாக்பெத் மன நிலைமையில் நான் இருந்தேன். மனதில் ஆறுதல் தேடி மீண்டும் ஜோதிஜியின் கட்டுரையிலுள்ள  இணைப்பை சென்று பார்க்கச் சென்ற போது, எனக்கான மறுமொழியில் அவர் 

//  இரவு நேரத்தில் கேட்காதீர்கள். தூக்கம் வராது // 

என்று எழுதியிருந்தார். இருந்தாலும் நேற்று முன்தினம்  இரவு (சனிக் கிழமை) அந்த பாடலைக் கேட்டேன். மேலும் GOOGLE இல் தமிழில் ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” - என்று பாடலின் முதல் வரியைக் கொடுத்து அதில் வந்த கட்டுரைகளைப் படித்தேன். படுக்க இரவு மணி 12 ஆகிவிட்டது.

அன்று இரவு 1.30 மணி அளவில் வீட்டினுள்ளே வராண்டாவில் இருந்த ஜாக்கி வெளியே விடச் சொல்லி முனகியது. வெளியே சென்ற ஜாக்கி தண்ணீர் குடித்துவிட்டு மாடிப்படிகளின் மேல் சென்று படுத்துக் கொண்டது. (வீட்டின் நான்கு பக்கமும் சுற்றுச் சுவர்) நான் கதவைப் பூட்டிவிட்டு  வீட்டினுள் படுத்து விட்டேன். நேற்று (29.09.2013) ஞாயிறு காலை 6.30 மணி அளவில் ஜாக்கி ஜாக்கி “ என்று அழைத்தேன். வரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கிரில் கேட்டைத் திறந்து வெளியில் பார்த்தபோது வீட்டு வாசலில் இறந்து கிடந்தது (மாடிப்படிகளில் இருந்து கீழே ஓடிவந்து இருக்கிறது). வீட்டினுள் நான், எனது மனைவி மற்றும் எனது மகன் (கல்லூரி மாணவர்) என மூவர் மட்டுமே. எல்லோரும் அழுதோம். விஷயம் கேள்விப் பட்டு எனது பெற்றோர் வந்து பார்த்தனர். அடுத்த வீட்டிலும் விசாரித்தனர்.

இறந்து போன் ஜாக்கியை வீட்டின் கொல்லைப் பக்கம் புதைக்கலாம் என்றால், அந்த இடத்தைப் பார்க்கும் எனது மகன் எப்போதும் அழுது கொண்டே இருப்பான். மேலும் அதன் நினைவுகள் அடிக்கடி எல்லோரது மனதிலும் வந்து மனதை அலைகழிக்கும். எனவே வெளியில் எங்காவது புதைக்க முடிவாயிற்று. ஞாயிற்றுக் கிழமை என்பதால் கார்ப்பரேசன் ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. அருகில் இருந்த ஒரு சில ஊழியர்கள் புதைக்க மாட்டோம். சாக்கில் கட்டி வெளியே தொலைவிற்கு சென்று காட்டில் வீசி விடுவோம்என்றார்கள். நாங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. காலையிலிருந்து எனது டிவிஎஸ் 50 XL ஐ எடுத்துக் கொண்டு அலைந்தேன். கடைசியாக 11.30 அளவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் இடுகாடுகளில் சவக்குழி தோண்டும் கான் என்ற முஸ்லிம் சகோதரரைச் சொன்னார்கள். அவரும் முன்வந்தார். இவர் ஒரு தட்டு ரிக்‌ஷாக்காரர். அவரது தட்டு ரிக்‌ஷாவிலேயே  ஜாக்கியை ஒரு சாக்குப் பையில் நானும் எனது மகனும் எடுத்துச் சென்று, இடுகாட்டின் ஒரு மூலையில் காம்பவுண்டு சுவர் அருகே அடக்கம் செய்தோம்.


எங்கள் ஜாக்கியைப் பற்றியும் அதன் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு பதிவாக எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகி விட்டது. நாங்கள் நேசித்த அந்த ஜாக்கியின் ஆன்மா சாந்தியடையட்டும்


(மண்ணில் தோன்றிய எல்லா உயிரினமும்  இறைவன் படைப்புதான். சுயநலம் காரணமாக சில உயிர்களை நேசிக்கிறோம்; சில உயிர்களை வெறுக்கிறோம்.. கவிஞர் வைரமுத்து மனித உயிரின் பயணத்திற்காக மட்டும் இந்த கவிதையை எழுதியதாக நான் நினைக்கவில்லை. மண்ணுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்குமாகவே எழுதியதாக நினைக்கிறேன் )
  
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! கவிதை இங்கே.

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன! 


மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

-                     கவிஞர் வைரமுத்து



இந்த பாடலை வீடியோவில் கேட்க கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள்.

VIDEO THANKS TO GOOGLE  ( YOUTUBE )

ஒரு சிறிய குறிப்பு :
 ஒரு நாயின் ஆயுட்காலம் சராசரியாக 12 ஆண்டுகள் என்று ஜாக்கி இறந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன் எங்கள் ஜாக்கியின் வயது 10. DOG AGE CALCULATOR – துணை கொண்டு இப்போது கணக்கிட்டதில், அதாவது மனிதனின் வயதோடு ஒப்பிடுகையில்  கணக்குப்படி ஜாக்கி இறக்கும்போது அதன்  வயது 65 ஆகிறது (நன்றி: www.pedigree.com )  
தி தமிழ் இளங்கோ 06.10.2013

Saturday, 28 September 2013

தென்றலின் கனவு – சசிகலா சங்கர் (நூல் விமர்சனம்)



முன்னுரை:

சகோதரி  சங்கர் சசிகலா  அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள அம்மையப்பட்டுகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ” தென்றல்’ ( http://veesuthendral.blogspot.in ) என்ற தலைப்பில் தனது வலைப்பதிவினில் கவிதைகளை எழுதி வருகிறார். இவரது கவிதைகள் வராத நாளே இல்லை எனலாம். நான்வலைச்சரம்ஆசிரியராக இருந்தபோது அவரைப்பற்றி  // சகோதரி தென்றல்சசிகலா கவிதைகளில் உள்ள எளிமையான சொற்கள், கவிதைநடை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு கவிதைகளை நினைவூட்டுகின்றன. சகோதரியின் அருமையான கவிதை வரிகள்.... // என்று எழுதி இருந்தேன்.( http://blogintamil.blogspot.in/2013/02/2.html  )

சென்ற ஆண்டு (நவம்பர், 2012)  தமிழ்நாடு எங்கும் நிலவிய காய்ச்சல் எனக்கும் வந்தது. அதுசமயம் ஓய்வில் புத்தகங்கள் படிப்பதில் நேரத்தைக் கழித்தேன். அப்போது  சகோதரி தென்றல் சசிகலா அவர்கள் , எனக்கு தபாலில் அவர் எழுதியதென்றலின் கனவு”  என்ற கவிதை நூலை அனுப்பி வைத்து  இருந்தார்அப்போதே படித்து முடித்து விட்டு  எழுதுவதற்கான குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இப்போதுதான் விமர்சனம் எழுத முடிந்தது ( சென்ற ஆண்டு 26.08.2012 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது..) இவருடைய கவிதைகளுக்கு வலைப்பதிவில் வாசகர்களிடையே இருக்கும் வரவேற்பே போதும்.
  
கிராமத்துப் பெண்:

கிராமத்திலேயே பிறந்து கிராமத்திலேயே வளர்ந்த தென்றலுக்கு பட்டணம் போனாலும்  அங்குள்ள மக்களை , இயற்கை சூழலை இன்னும் சுமந்தவராகவே இருக்கிறார். எனவே பெரும்பாலும் இவரது கவிதைகலில் ஒரு கிராமத்துப் பெண்ணாகவே பாடுகிறார். என் கிராமத்து வீடு என்ற தலைப்பில் அன்றைய கிராமத்து வீட்டின் இன்றைய நிலைமையைச் சொல்லுகிறார்.

ஊரெங்கும் வாணவேடிக்கை ..
வண்ண வண்ண விளக்குகள்,
சலசலப்பும் ...
பாடுசத்தமுமாய் நம்ம ஊர அம்மன் கோவில் .
பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் ,
பார்வையால் பேசிக்கொள்ளும் ,
காதலர் கூட்டம் .
சிட்டென பறக்கும் சிறுசுகள் ,
என் வீட்டு வாசலிலேயே ..
போடப்பட்ட கூத்து மேடை ..
என்ன பயன் ..
பார்த்து மகிழ யாரும் இல்லாத ,
பாழடைந்த என் ..
கிராமத்து வீடு.              (பக்கம்:108)
  
கிராமத்தில் ந்மது அம்மா சுட்டிக் காட்டிய பொருட்கள் தமது பிள்ளைகளுக்கு சுட்டிகாட்டி ..மகிழ எதுவும் பட்டினத்தில் இல்லையே என்று ஏங்குகிறார்.



மாமரத்து குயில் ஓசை ,
மஞ்சு விரட்டிய மைதானம் ,
மலர் தேடும் வண்டு ,
ஊஞ்சல் ஆடி விழுந்த ,
ஆலமரத்தடி ..
ஒரே ஒரு முறை ,
ஊருக்குள் வந்து போகும் ஒற்றை பேருந்து ,
குளிக்க பயந்து ,
குதித்தோடிய குட்டித் திண்ணை ,
திருவிழா கூடத்தில் தொலைத்த  பகைமை ,
தினம் தினம் ..
நீச்சல் பழகிய ஆழ்கிணறு ,
ஆற்றங்கரை இல் ஆக்கிய ,
கூட்டான் சோறு ..
ஆயாவின் சுருக்குப்பை ,
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில்  இல்லை ,
உன்னிடம் சுட்டிகாட்டி ..மகிழ .     (பக்கம்:110)


இயற்கையை நேசிப்பவர்:


பட்டினத்தில் நண்பர்களிடமிருந்து அடிக்கடி வரும் அழைப்புகளில் புதுமனை புகு விழாவும் ஒன்று. இவருக்கு சிலந்தியின் வீடு அடிக்கடி மாறுவது தெரிகிறது. அதனையே வரிகளாக்கி விட்டார்
கிரஹபிரவேசம் என்ற தலைப்பினில்        

தினம் தினம் ...
புது வீடு கட்டி ...
கிரகபிரவேசதிருக்கு ..
நம்மை அழைக்கும் ..
சிலந்திகள் .            (பக்கம்: 59)


தமிழ் மீது காதலும், காதற் பாடல்களும்.

கவிஞர் என்றாலே தனது தாய்மொழியை நேசிப்பவர். இவரோ தமிழ்க் கவிஞர். சொல்லவா வேண்டும்?

தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி  என்ற தலைப்பில், இவரது தமிழ்ப் பற்றினை இங்கு காணலாம்.

   நடக்கப் பழகிய தென்றலின்று,
   
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
   
பயணம்தொடர விரும்புகிறேன்!
   
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
   
இனிமையான ஓர் வரனென்பேன்,
   
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
   
தரணியில் பெரும் பேரென்பேன்!  - (பக்கம்:20”)

தமிழ் என்றாலே சங்க இலக்கியம். அகம், புறம். இவற்றுள் அகத்திணைப் பாடல்களே சுவை மிக்கவை!  நமது சகோதரியின்காதல் கவிதைகள்தமிழோடு தமிழாய் இருக்கின்றன.

ஒரு பெண்ணுக்கு காதல் வந்தால் என்ன வரும்? “காதல் வந்த பிறகு .. என்ற தலைப்பில் சொல்லுகிறார்.  
 

காதல் வந்த பிறகு ..
கோலமிட சென்று ..
உன் பெயர் எழுதி வருகிறேன் ..
குளிக்க சென்று ..
குருவியோடு பேசி நிற்கிறேன் ...
சாப்பிட அமர்ந்து ...
சத்தமிலாமல் படுத்துகொள்கிறேன் ...
கண்ணாடி முன்பு நின்று .
ஓவியம் வரைகிறேன் ...
என்னுள் வந்த மாற்றம் எல்லாம் ...
உன்னுள்ளும் நிகழ்கிறதா          - ( பக்கம்: 63 / 84 )

இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதில்லை. துக்கம் மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் SMS தான். அப்போதெல்லாம் மை போட்டு எழுதும் பேனாதான். அதுவும் கசியும் பேனா என்றால். அந்த பேனாவின் வழியே எழுதிய இவர் எழுதிய மை கசிவு

உன் பெயர் எழுத ....
என் விரல் பிடித்த பேனா ....
தாள்களில் ஜொள் விட்டது போதாதென ...
என் விரல்களிலும் அதன் மை கசிவு .  (பக்கம்:85)

நான் ஒருமுறை பஸ்ஸுக்காக ரொம்ப நேரம், காத்திருந்தபோது இருவர் மட்டும் எந்த பஸ்ஸிலும் ஏறவே இல்லை. எனக்கான பஸ் வந்ததும் உள்ளே ஏறி அமர்ந்ததும்தான் எனக்குள் உறைத்தது, அவர்கள் புதிய காதலர்கள் என்று. நமது சகோதரியும் இதுபோல் ஒரு காட்சியை பார்த்து இருப்பார் போலிருக்கிறது. தான் கண்ட காட்சியை பிடிக்கவே இல்லை .. என்ற தலைப்பினில் வடித்து விட்டார்.

பேருந்துக்காக  காத்திருப்பது ...
பிடிக்கவே இல்லை ..
இருந்தும் நீ ....
பேசிகொண்டிருகிறாய்...
என்பதற்காகவே ....
எத்தனை பேருந்தை வேண்டுமானாலும் .
தவற விடலாம்         - (பக்கம்:105)

வாழ்வியல் சிந்தனைகள்:

தத்துவம் என்றாலே எனக்கு பட்டினத்தார் பாடல்கள்தான் நினைவுக்கு வரும். அவர் தனது ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கிஎன்று தொடங்கும் உடல் கூற்று வண்ணம்என்னும் ஒரே பாடலில் மனிதனின் வாழ்க்கையை காட்டுவார். அவர் ஒரு துறவி. எனவே அவற்றில் நிலையாமை இவரோ இல்லத்தரசி. ஒரு பெண் படும் பாட்டினை இயல்பாகவே இங்கு பார்வையில் ஜனனமின்றி என்ற தலைப்பில் சொல்லுகிறார்.

ஓடியது முன்னால் வாழ்க்கை
உருண்டது பின்னால் காலம்
குழந்தைகள் கணவன் வேலை
கற்பனை கோட்டை மெதுவாய்
கனவோடு உறவாடி நிற்க
பறந்தது பத்து வருடங்களும்!

இன்பமும் துன்பமும் மாறிமாறி
நிலையற்ற வருமானத்தோடு ஓடி
மழலைகளின் எதிர் காலம் நினைத்து
இனிவழியில்லை என்றெண்ணி
கொலுசுப்பாதமும் சுமையைப் பகிர
இயந்திர கதியாய் இயல்பு வாழ்க்கை!

ஐந்தில்  கல்வி பயம்
பத்தில் பரீட்சை பயம்
பதினாறில் இளமை பயம்
இருபதில் மணவாழ்வு  பயம்
முப்பதில் எதிர்கால பயம்
நாற்பதுக்குள் தீருமா பயம்!

இனியொன்றுமில்லையென
தலைதாழ்ந்தபோது
ஆதரவாய் கைதட்டல்
நினைவுகளும் கனவுகளும்
கவிதைகளாய் துணையாக
ஏதோவாழ்வு நிம்மதி பெருமூச்சோடு!   - (பக்கம்: 26)

உடல் ஊனம் பற்றி கவலை கொள்ளாதீர்கள். மன ஊனம் மட்டும் அடையாதீர்கள். நான் சொல்லவில்லை. கவிஞர் தென்றல் சொல்லுகிறார். உடலூனம்  தவறில்லை  என்ற தலைப்பில்

ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,
ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,
ஊழிகாலமும் தீமைசெய்யும்.

உடலூனம்  தவறில்லை,
உள்ளஊனம் பெருங்கேடு!!  - (பக்கம்:55)

வீடு வாசல் என்று ஒரு பெண் சுற்றி வந்தாள். அவளுக்கு எது உலகம் என்பது எப்போது தெரிந்தது. இதோ அதற்கான விடையை
அறிமுகம் செய்து வைக்கிறார்.

சமையலறையும்
சலவை துணியுமே
உலகம் என்றிருந்தேன்
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை            - (பக்கம்:123)


ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் கைத்தறி ஆடைகளை வாங்கச் சொல்லி பிரச்சாரம் செய்தார்கள். காந்தியின் கனவும் பொய்யாய் போனதடி என்ற தலைப்பினில் கைத்தறியின் இன்றைய கண்ணீர் நிலைமையைச் சொல்லுகிறார்.



ஆரோக்கியம் சமையலில் மட்டுமல்ல                                       
ஆடையிலும் இல்லாமலே போனது
பேறு காலத்தின் போது
பிறந்த குழந்தைக்கும் பின்னர்
கோடித் துணிக்கும்  மட்டுமே
தேடப் படுகிறது நூற்  துணிகள் .....!     - ( பக்கம்: 150 )

முடிவுரை:

புதுப்புது புதுக் கவிதைகள் அடங்கிய நல்ல நூல். கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடப் பிரிவில் வைக்கலாம்.



                  ( கவிதை நூலின் பின்பக்க அட்டை )

நூலின் பெயர்: தென்றலின் கனவு  (பக்கம் - 176)
நூல் வெளியீடு: டி ஜி வி பி சேகர், தாய்நாடு மக்கள் அறக்கட்டளை, 
2 G S T சாலை, கிண்டி, சென்னை - 600 016