இது ஒரு விளம்பரக் கட்டுரை கிடையாது என்பதனை முன்னதாகவே சொல்லி
விடுகிறேன். எனது சிறுவயது மலரும் நினைவுகளில் ஹார்லிக்ஸும் (HORLICKS) ஒன்று. இன்று
எத்தனை பேர், சிறு வயதிலிருந்து இன்னும் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் நான் இப்போதும் எனக்கு விருப்பப்பட்ட போதெல்லாம் பாலில் சேர்த்தோ அல்லது சுடு
தண்ணீரில் கலந்தோ அல்லது அப்படியே வெறுமனே ஆகவோ ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறேன்.
டாக்டர்களின் சிபாரிசு:
ஒருசமயம் ஹார்லிக்ஸ் என்பது டாக்டர் சீட்டு இருந்தால்தான் மருந்துக்
கடைகளில் வாங்க முடியும் என்ற நிலைமை இருந்தது. அன்றைய டாகடர்களும் ஹார்லிக்ஸை சிபாரிசு
செய்தார்கள். அப்போது இருந்த டிமாண்டைப் பார்த்த, பர்மாபஜார் வியாபாரிகள் கப்பலில்
கொண்டு வரப்பட்ட பெரிய, சிறிய ஹார்லிக்ஸ் பாட்டில்களை தங்கள் கடைகளில் விற்றனர். இந்த
பர்மா பஜார் பாட்டில்களில் சிலவற்றில் மேல்நாட்டு வாட்சுகள் இருந்ததாகக் கூட கதைகள்
உண்டு. அந்த காலத்து, எங்களது உறவினர் ஒருவர் கண்டியிலிருந்து வந்த போது, அலாரம் டைம்பீஸ்,
சிலோன் டீ ஆகியவற்றுடன் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலையும் கொண்டு வந்ததாக நினைவு. அப்புறம்
மிலிட்டரி கேண்டீன்களில் விற்றார்கள். தாராளமாக கிடைக்கத் தொடங்கியவுடன் இப்போது மெடிக்கல்
ஷாப்புகளில் மட்டுமன்றி மளிகைக்கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் ஹார்லிக்ஸ்
கிடைக்கிறது.
சின்ன வயதினிலே:
நான் அப்போது ஆரம்ப பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த
பகுதியில், சிந்தாமணி கடைவீதியில் இருந்த ‘டேவிட் மளிகை ஸ்டோர்’ என்ற கடையில்தான் மாதாந்திர
மளிகை சாமான்கள் வாங்குவது வழக்கம். அந்த பட்டியலில் எனக்காக மால்ட்டேட் மில்க் – ஹார்லிக்ஸ்
பாட்டில் ஒன்றும் இருக்கும். எனது அம்மா ஹார்லிக்சை பாலில் சேர்த்தும், பால் இல்லாமல்
போனால் சுடுதண்ணீரிலும் கலந்து தருவார்கள். இப்போது போல் அப்போது கடைகளில், பால் தாராளமாக
கிடைக்காது. ஹார்லிக்சை கடையில் வாங்கி, வீட்டுக்கு வந்தவுடன் முதலில் இரண்டு ஸ்பூன்
வெறுமனே அப்படியே வாயில் போட்டு சுவைப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இப்போதும் அப்படியேதான்
(இப்போதுள்ள ஹார்லிக்ஸில் பழைய அடர்த்தி, சுவை இல்லை)
ஒட்டகப் பால்:
நான் படித்த ஆரம்பப்பள்ளி, ஹோலிகிராஸ் என்ற கிறிஸ்தவ மெஷினரியால்
நடத்தப்படுவது. (இன்றும் அந்த பள்ளி இருக்கிறது) ஒருநாள், நான் படித்த இந்த பள்ளிக்கு
அருகில் இருந்த சில கடைகளில் ஒட்டகப் பால் என்று இறுகிப்போன ஹார்லிக்ஸ் கட்டிகளை விற்றார்கள்.
வாங்கித் தின்றவர்களில் நானும் ஒருவன். இதனை அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை ( இவர்
கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ), காலை இறை வணக்கத்தின் போது “ யாரும் ஒட்டகப்பால் என்று வெளியில்
வாங்கி சாப்பிடாதீர்கள். அது கெட்டுப் போன ஹார்லிக்ஸ். வயிற்றுக்கு கெடுதல். பக்கத்தில்
உள்ள ஒரு குடோனிலிருந்து தூக்கி எறியப்பட்ட அவற்றை, பாட்டில்களை உடைத்து சிலர் விற்கிறார்கள்,
அவற்றில் கண்ணாடித் துண்டுகளும் இருக்கும், வயிற்றை கிழித்து விடும் ” என்று எச்சரித்தார்கள்.
ஹார்லிக்ஸ் பாட்டில்கள்:
இந்த காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் பற்றி சொல்வதென்றால், அந்த
காலத்து வீட்டுத் தயாரிப்புகளீல் ஒன்றான ஊறுகாய் பற்றியும் சொல்ல வேண்டி வரும். ஏனெனில்
காலியான ஹார்லிக்ஸ் பாட்டில்கள் நல்லெண்ணெய், கடலெண்ணெய் வாங்குவதற்கு பயன்பட்டதோடு,
ஊறுகாய் போட்டு வைப்பதற்கும், விற்பதற்கும் பயன்பட்டன. இப்போது முன்புபோல கண்ணாடி பாட்டிலில்
ஹார்லிக்ஸ் வருவது இல்லை. பைபர் க்ளாஸ் பாட்டில்களில் வருகின்றன.
தியேட்டர்களில் விளம்பரம்:
டெலிவிஷன் வருவதற்கு முன்னர் அப்போதெல்லாம் தியேட்டர்களில் படம்
ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லது இடைவேளையில் பீடி, சிகரெட் விளம்பரங்களோடு அழகிய மேனிக்கு
லக்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ், வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரப் படங்களையும் போடுவார்கள்.
விளம்பரத்தின் கடைசியில் கரகரத்த குரலோடு பீகாரில் வெள்ளம் என்றோ அல்லது வறட்சி என்றோ
ஒரு ரீல் ஓட்டுவார்கள். ஹார்லிக்ஸ் விளம்பரங்களில் ஒரு டாக்டர், ஒரு வக்கீல் (”இந்த
காலத்திலே எதையுமே நம்ப முடியாது), ஒரு இல்லத்தரசி, ஒரு சிறுவன் ( ‘அப்படியே சாப்பிடுவேன்’)
என்ற விளம்பரம்தான் எனக்கு பிடித்தமானது.
ஹார்லிக்ஸ் வரலாறு:
(படங்கள் மேலே ஹார்லிக்ஸ் நிறுவனர்கள் வில்லியம் ஹார்லிக்
(William Horlick) மற்றும் ஜேம்ஸ் ஹார்லிக் (James Horlick)
இதுநாள் வரை ஹார்லிக்சை சுவைத்துதான் பழக்கமே ஒழிய, அதன் வரலாறு
தெரியாது. இந்த கட்டுரைக்காக இப்போதுதான் படித்து தெரிந்து கொண்டேன். இங்கே அந்த வரலாற்றை
சொல்லப் போனால் கட்டுரை நீண்டு விடும். எனவே நேரம் கிடைக்கும் போது கீழே உள்ள கட்டுரைகளை
நண்பர்கள் படிக்கவும்.
40
years....and now: How Horlicks grew up with the times http://www.rediff.com/business/report/pix-40-yearsand-now-how-horlicks-grew-up-with-the-times/20141002.htm
(ALL PICTURES COURTESY:
GOOGLE IMAGES)