’ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால்
அம்பலம்’ என்பது பழமொழி. இது முற்றிலும் உண்மை. அந்நாளைய அரண்மனை முதல் இந்நாளைய
அரசியல் ரகசியங்கள் வரை இப்படித்தான் வெளியே வந்துவிடுகின்றன.
பணியாளர்கள்:
என்னதான் அதிகாரம் மிக்கவர்களாக இருந்தாலும், பல காரியங்களுக்கு
அடுத்தவர்களைச் சார்ந்தே வாழ வேண்டும். உதாரணத்திற்கு சமையல், மருத்துவம், சிகை அலங்காரம்
போன்றவை. எனவே ராஜா, ராணிகள் தங்களுக்கென்று அரண்மனை வைத்தியர், அரண்மனை சமையல்காரர்,
அரண்மனை நாவிதர், அரண்மனை சேடியர், என்று தனியே பணியாளர்களை அமர்த்திக் கொண்டனர். இன்று
குடும்ப மருத்துவர், குடும்ப சமையல்காரர், குடும்ப நண்பர் என்று சொல்கிறோம். இவர்கள்
மூலமாகவே ரகசியங்கள் கசிந்து விடுகின்றன. அதிலும் ராஜாங்க அதிகாரியாக இருக்கும் ஒருவர்
தனது மனைவியிடம் தானறிந்த ரகசியத்தை சொல்லாமல் இருக்க மாட்டார். அந்த பெண்மணி மூலம்
ஊருக்கே தெரிந்து விடும். ஒரு ராஜாவிற்கு கழுதைக் காது இருப்பதை அரண்மனை நாவிதன் வெளியே
வந்து தன் மனைவியிடம் சொல்ல, ஊர், உலகத்திற்கே அந்த விஷயம் தெரிந்து விடுகிறது.. நம்
எல்லோருடைய விவரங்களும் கூகிள் கையில் உள்ளது. யாருமே உடைக்க முடியாத கடவுச்சொல்
(Password) என்பதெல்லாம் சும்மா.
சினிமா கிசுகிசுக்கள்:
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு அரசியல் கிசுகிசுக்களை விட சினிமா
கிசுகிசுக்களே அதிகம். நடிகர்கள் நடிககைகள் பற்றிய அந்தரங்க விஷயங்கள் அதிகமாக பேசப்படும்.
இந்த தகவல்களைப் பெறுவதற்கென்றே சில நிருபர்கள் விஷேசமாக அலைவார்கள். முழுக்க முழுக்க
சினிமா நடிகர், நடிகையர் இடையே இருந்த அந்தரங்க விஷயங்களை நிஜமாகவும் கற்பனையாகவும்
எழுதி வந்த ‘இந்துநேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இன்றளவும்
இந்த கொலை ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்று பிரமாதமாக பேசப்படுகிறது.
அரசியல் கிசுகிசுக்கள்:
அரசியல் கிசுகிசுக்கள் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். அண்மையில்
விக்கி லீக்ஸ் வெளிப்படுத்திய அரசியல் ரகசியங்களை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இந்த மாதிரியான அரசியலைக் கடந்த அந்தரங்க நட்புகள், பொதுவிடத்தில் அவர்களுக்குள்
நடக்கும் ‘வாக்கு வாதங்களாலேயே வெளியே வந்து விடுகின்றன. இன்னும் கிச்சன் காபினெட்,
தேநீர் விருந்து, திருமண விருந்து என்று பிரபலங்கள் நடத்தும் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள்
(get together) வழியாகவும், அரசியல் ரகசியங்கள் வீதிக்கு வந்து விடுகின்றன.
வதந்திகள்:
சில சமயம் அரண்மனை ரகசியங்கள் கடுமையான மிரட்டல்களாலும், சட்ட பூர்வமான
நடவடிக்கைகளாலும் காக்கப்படுகின்றன. இது போன்ற சமயங்களில் உண்மைக்கு மாறான அல்லது மறைக்கப்பட்ட
உண்மைகள் வெளியே வதந்திகளாக உருவெடுத்து விடுகின்றன.
எனது தூரத்து உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டார்; விஷயத்தை அவரது குடும்பத்தினர் யாருக்கும் சொல்லாமல் கட்டி
காத்தனர். அவர் நலம் பெற்று வீடு வந்தபோது, விஷயம் கேள்விப்பட்டு நலம் விசாரிக்கப்
போனவர்களையும் ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். விளைவு? அவருக்கு என்ன
நோய் என்று ஆளாளுக்கு கற்பனையாகச் சொல்லி இட்டு கட்டி விட்டார்கள். “உண்மை உறங்கும்போது பொய்கள் ஊர்வலம் போகும்” - என்பது பொன்மொழி,
ஒரு பிரபல மருத்துவமனையில் முக்கியபிரமுகர் ஒருவரின் சிகிச்சை பற்றிய
தகவல்கள் வெளியானதற்கு காரணமானவர்கள் என்று சில நர்சுகளை வேலை நீக்கம் செய்தது அந்த
மருத்துவமனை நிர்வாகம் என்று செய்திகள் வந்தன. ‘உலை வாயை மூடலாம்,
ஊர் வாயை மூட முடியுமா?’ – என்பது பழமொழி.
சமூக வலைத்தளங்கள்:
இப்போது எல்லோரது கையிலும் இண்டர்நெட், செல்போன் - இவற்றின் புண்ணியத்தில்
சமூக வலைத்தளம் என்னும் ஆயுதம் இருக்கிறது. அது ஃபேஸ்புக்காகவோ அல்லது வாட்ஸ்அப் ஆகவோ
அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். ஒரு கத்தியை நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்துவதைப்
போல , இந்த சமூக வலைத்தளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அறைக்குள் நடப்பது
அப்படியே அடுத்த விநாடி அம்பலத்துக்கு வந்து விடுகிறது நிறையபேர் குறிப்பாக அரசியல்
அதிகாரத்தில் உள்ளவர்கள் பயப்படுவது இவற்றிற்குத்தான். இவைகள் மெய்யாகவும் இருக்கலாம்; பொய்யாகவும்
இருக்கலாம். மிகைப்படுத்தப் பட்டவைகளாகவும் இருக்கலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு செய்தியைச் சொன்னவரிடமிருந்து
வெவ்வேறு நபர்களிடம் போய், அது அவரிடமே பகிரப்படும் என்பதுதான்.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
இதுவும் புறங்கூறுதல் தானே!..
ReplyDeleteநீரில் பூக்கும் பூவின் பெயருடைய (நாலெழுத்து) வார இதழ் ஒன்றுதான் கிசுகிசுப்பதில் முன்னணியில் இருந்தது..
இந்தப் பக்கம் இந்த வேலையைச் செய்து கொண்டே -
அந்தப் பக்கத்தில் அடுத்தவர்களைப் பற்றிப் பேசக்கூடாது!...
- என்றெல்லாம் ஆன்மீக உபதேசங்களைப் போட்டுத் தள்ளியிருப்பார்கள்..
பதினைந்து ஆண்டுகளாயிற்று - வார இதழ்கள் வாசிப்பதை நிறுத்தி!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteநல்ல அலசல்!
ReplyDeleteத ம 1
பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.
Deleteவழக்கம்போல தங்கள் பாணியில் நல்லதொரு அலசல் கட்டுரை. பாராட்டுகள்.
ReplyDelete’அரண்மனை ரகசியங்கள்’ என்ற தலைப்பினால் நானும் இத்துடன் எஸ்கேப் !
அன்புள்ள V.G.K அவர்களின் கருத்தினுக்கு நன்றி. இந்த கட்டுரையில் நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteஎனக்கு ராஜா காது கழுதைக் காது என்கிற விஷயம் சத்தியமாத் தெரியாதே !
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. உங்கள் பதிவுகளைப் படித்து, படித்து நானும் உங்கள் ட்ராக்கில் வந்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு சந்தேகம்.
Deleteநல்ல விஷயம்தானே. அதற்கு வருத்தப்படுவானேன். நான் ஒன்றும் குரு தக்ஷிணை கேட்க மாட்டேன்.
Deleteவணக்கம்.
ReplyDeleteஅரண்மனை ரகசியங்கள்....
அது அப்பல்லோ என்று சொல்லமுடியவில்லை.
இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. :)
தொடர்கிறேன். த ம
நன்றி.
ஆசிரியர் ஜோசப்விஜூ அவர்களின் கருத்தினுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டதைப் போல இது அப்போலோ இல்லை.
Deleteஅலுவலகம் தொடங்கி அடுப்படி வரை பலர் இதனை வைத்துத்தானே பிழைப்பு நடத்துகின்றனர்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Deleteநல்ல அலசல் ஆனால் தலைப்பு அப்போலோ ரகசியம் என்று வந்திருக்க வேண்டுமோ
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி. இது அப்போலோ பற்றிய கட்டுரை இல்லை. நான் இந்த கட்டுரையை எழுதி, எம்.எஸ். வேர்டில் சேமித்து வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. எடிட் செய்து இப்போது வெளியிட்டுள்ளேன். தீபாவளிக்குப் பிறகு நிறையபேர் அப்போலோ ரகசியம் எழுதுவார்கள்.
Deleteஉண்மைகளை சொல்லாமல் போனால் வதந்திகளே உண்மையாகும்
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபலருக்கு வதந்திகளை நம்புவதில் ஒரு த்ரில் இருக்கிறது ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்பவர்க்சள் அந்தப் பொய்யையே நிஜம் என்று நம்பினாலும் ஆச்சரியப்பட முடியாது
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பல பத்திரிகைகளின் சர்க்குலேஷனே இந்த பரபர நறநற வதந்திகள் அடிப்படையிலேயே அமைகின்றன.
Deleteசிந்திக்க வைக்கும்
ReplyDeleteஅருமையான பதிவு
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகவர்ந்து இழுக்கக்கூடிய தலைப்பு.
ReplyDeleteஇந்துநேசன் பத்திரிகை ஆசிரியர் சந்திர காந்தன் அல்ல/ அவர் பெயர் லக்ஷ்மிகாந்தன் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று நினைத்து எழுதியது
ReplyDeleteபதிவினில் எனது தவறினைச் சுட்டிக் காட்டிய மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. பெயர்ப் பிழையை (சந்திரகாந்தன் > லட்சுமிகாந்தன்) சரி செய்து விட்டேன்.
Deleteஇப்போது உள்ள சூழ்நிலையில் இது போன்ற பதிவுகள் வெளியிடுவது தங்களை ஆபத்தில் கொண்டுபோய் விடக்கூடும். நான் இதை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. நாட்டில் நடப்பதை பார்த்துக்கொண்டு/படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா?
ReplyDeleteஅன்புள்ளம் கொண்ட V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. தற்போதைய சூழலில் , பொது வெளியில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது , பொதுவான சில விஷயங்களைப் பற்றி பேசுவது கூட ஆபத்து போலிருக்கிறது. எனவே இனி வரும் பதிவுகளில் இவற்றை தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.
Deleteநல்ல அலசல்..... வதந்திகள் பரவும்போது அதற்கு கை கால் முளைத்து பெரியதாய், முழு விஷயமும் கற்பனையாக பரவுவதையும் பார்க்க முடிகிறது.....
ReplyDeleteசினிமா கிசுகிசுக்கள் அன்று மட்டுமல்ல இன்றும் அதிகம் தான். இன்றைய அரசியலே கிசுகிசுக்களுக்கு நடுவில்தான் உள்ளது. நீங்கள் கூறியது சரிதான், சமூக வலைத்தளங்களைப் பார்த்து இன்றைய அரசியல்வாதிகள் நிச்சயம் பயப்படுகிறார்கள். ஆனாலும் வலைதளங்களில் குறிப்பிடப்படும் பல தகவல்கள் உணவில் கரைந்த கலப்படமாகவே உள்ளது. ஆராய்ந்து பதிவிடுவோர் ஒரு சிலர் மட்டுமே! சுவாரசியமான பதிவு!
ReplyDelete