பைக்கிலோ,
ஸ்கூட்டரிலோ அல்லது மொபெட்டிலோ செல்கிறோம்.
ஒரு சின்ன விபத்து ஏற்படுகிறது.
தலையைத் தவிர உடலின் ஏதோ ஒரு இடத்தில் சிறுகாயம். அந்த சிறு காயத்தால் ஏற்படும்
வலி (ரண வலி) சொல்ல முடியாதது. அதே காயம் தலையில் ஏற்பட்டால்? உயிருக்கும்
ஆபத்துதான். சுருக்கமாகச் சொன்னால் தலைக்காயம் ”சீரியஸ்”தான்.
இதற்காகவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை கட்டாயமாக ஹெல்மெட் அணியச்
சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது தெரியும். இருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள்?
சில
அசவுகரியங்கள்:
முதல் குறை இதன் வடிவமைப்பு.
ஹெல்மெட் தேவைதான். ஆனாலும் இதனை தலையில் போட்டுக் கொண்டவுடன் பின்னால் வரும்
வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை; அடிக்கடி வியூ மிரரில் (VIEW MIRROR) பார்த்துக் கொண்டே ஓட்ட வேண்டி உள்ளது.
காதுகளில் நமக்கு
நாமே பஞ்சை வைத்துக் கொண்டது போன்ற உணர்வு. நம்நாட்டில் பலபேர் சாலை விதிகளை சரிவர
கடைபிடிப்பதில்லை. அவற்றுள் ஒன்று, இடது பக்கமாக வேகமாக வந்து நம்மை ஓவர்டேக்
செய்வது. அந்த ஆசாமி வேகமாக வருவது, ஹெல்மெட் அணிந்த நமக்கு அவர் கடந்த பிறகுதான்
தெரியும்.
ஹெல்மெட் அணிபவர்
மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால் அடையும் சிரமங்களை பற்றிச் சொல்ல
வேண்டியதில்லை.
சில இடங்களில் நாம்
அடிக்கடி வண்டி நிறுத்தும் இடங்களில் ஹெல்மெட்டிற்கும் காசு கேட்கின்றனர். எப்போதோ
ஒருதடவை என்றால் பரவாயில்லை. தினமும் அலுவல் காரணமாக பஸ் நிலையம், ரெயில்
நிலையங்களில் வண்டியை விட்டுச் செல்பவர்கள், ஹெல்மெட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட
தொகையை மாதாமாதம் கொடுக்க வேண்டி வரும்.
எனது அனுபவம்:
நாங்கள் இருப்பது
புறநகர் பகுதி. மளிகை சாமான் தவிர மற்ற பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அருகிலுள்ள
டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். வண்டியில் டவுனுக்கு
அடிக்கடி செல்ல வேண்டி இருப்பதால்
(முன்பு சைக்கிள்) எல்லோருடைய வீட்டிலும்
பைக்கோ, ஸ்கூட்டரோ அல்லது மொபெட்டோ இருக்கும். ஒவ்வொரு முறையும் தயிர்
வாங்க, பால் வாங்க என்று செல்லும்போது ஹெல்மெட்டை மறக்காமல் போட்டுச் செல்ல வேண்டும். சிலசமயம் மறந்து
விட்டால் போலீஸ்காரர் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்ற பதற்றம்தான் மிஞ்சும். (நான்
டவுனுக்கு எனது மொபெட்டில் எப்போது சென்றாலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான்
செல்வேன். (இப்போது டவுனுக்கு வண்டியில் செல்வதில்லை)
என்னைப் போன்ற
சீனியர் சிட்டிசன்கள் அடுத்த தெருவில் இருக்கும் டாக்டரைப் பார்க்க ஸ்கூட்டி,
ஸ்கூட்டர், மொபெட் போன்ற வண்டிகளைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அதிக வேகம் இல்லை. (சைக்கிள் ஓட்டும் பையன்
ஓவர்டேக் செய்து விடும் வேகம்தான்) சீனியர் சிட்டிசன்களுக்கு ஹெல்மெட் என்பது
குருவித் தலையில் பனங்காய் என்பது போல. அதிலும் குறிப்பிட்ட வயதுவரைதான் வண்டி
ஓட்ட முடியும். அப்புறம் தானாகவே நிறுத்தி விடுவார்கள். இதில் இருசக்கர வாகனத்தில்
செல்லாத போது, ஆட்டோவுக்கு கொடுக்கும் காசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
போலீஸும்
சட்டமும்:
பொதுவாகவே எந்த ஒரு
சட்டமும் பாரபட்சமின்றி கடை பிடிக்கப்பட்டால் அது மக்களிடம் நல்ல வரவேற்பைப்
பெறும். (ஹெல்மெட் விஷயத்தில்
சீக்கியர்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது ) மற்ற சட்டங்களைக் காட்டிலும் இந்த
ஹெல்மெட் சட்டத்தின்மீது போலீசார் காட்டும் அக்கறை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால் நடைமுறையில், ஹெல்மெட் போடாமல் செல்லும் சிலரை போலீஸ் கண்டு கொள்வதே இல்லை. குறிப்பாக
சாதாரண நடுத்தர மக்கள்தான் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் பாதிக்கப்
படுகிறார்கள். ஆட்டோ கட்டணம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீட்டர் போடாமல் ஓடும்
ஆட்டோக்களை என்ன செய்ய முடியும். அவர்களுக்கென்று சங்கங்கள் உண்டு. ஆனால் இருசக்கர
வானம் ஓட்டுபவர்களுக்கு என்று எந்த சங்கமும் கிடையாது.
கட்டாய
ஹெல்மெட்: போலீசாரின் கெடுபிடிகள் தேவையற்றது.
// நமது
நாட்டில் தொட்டதெற்கெல்லாம் இரு சக்கர வண்டியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
பிள்ளைகளைப் பள்ளி கல்லூரி அழைத்துச் செல்ல, அலுவலகம் செல்ல , அவசர
பொருட்கள் வாங்க என்று எல்லாவற்றிற்கும் தேவைப் படுகிறது. நமது நாட்டில் பஸ்
கட்டணத்தையும் கும்பலையும் பார்த்தால் பயணம் செய்ய யோசிக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில்
சென்று வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிடுகிறது. பஸ் வசதியும் அடிக்கடி கிடையாது. இரு
சக்கர வண்டியை எடுத்தால் ஹெல்மெட் போட்டாயா என்று கேள்வி. ஹெல்மெட் போடுவது
குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.
வெளியூர்
பயணத்திற்கு செல்லும் முன் இரு சக்கர வண்டிகளை ஸ்டாண்டில் விடும்போது ஹெல்மெட்டைப்
பத்திரப் படுத்துவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது. சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்
வைக்க தனி கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டை வைக்க
அனுமதிப்பதில்லை. வண்டியை வைத்துவிட்டு கையோடு எடுத்துச் செல்லும்படி
சொல்கிறார்கள். பிச்சைப் பாத்திரம் போன்று எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்ல
வேண்டியுள்ளது. ஹெல்மெட்
அணிவதால் பின்பக்கம் வரும் வண்டிகளின் சத்தம் கேட்பதில்லை. பலருக்கு ஹெல்மெட்
அணிவதால் தலை சுற்றல், முடி உதிர்தல், தலை
அரிப்பு போன்ற பிரச்சினைகள். இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிவதால்
உண்டாகும் சங்கடங்கள் சொல்லவே முடியாது. அவ்வளவு கஷ்டம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு
இடையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? ஹெல்மெட்
அணிந்தவர்களே விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை செய்திகளாக பார்க்கிறோம். இப்போது
புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு
உருவாகியுள்ளனர். //
விபத்துக்கு
காரணங்கள் பல இருக்கின்றன. குடித்து விட்டு ஓட்டுவது; எதிர்திசையில் வருவது; அதி
வேகம் என்று பல காரணங்கள். (அதிவேக பைக்குகளின் உற்பத்திக்கும் விளம்பரத்திற்கும் தடை
போட வேண்டும். – செய்வீர்களா?)
எனவே ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு இல்லை என்று சட்டம்
கொண்டு வரலாம். (இதிலும் சில ஆசாமிகள் காசு பார்த்து விடுவார்கள், என்பது வேறு
விஷயம்)
இப்போது புதிதாக
ஹெல்மெட் வாங்கி ரசீதை காட்ட வேண்டுமாம்; ஏற்கனவே வாங்கிய ஹெல்மெட்டை என்ன
செய்வது? இதில் சட்டம் யாருடைய நலனுக்கு என்பது வெளிப்படை. எனவே ஹெல்மெட்
அணிய வேண்டுமா இல்லையா என்பதை அவரவர் தேர்விற்கு விட்டு விடலாம்.
கட்டாயப்படுத்தி கண்ட இடங்களில் நிறுத்தி வசூல் வேட்டை செய்ய வேண்டியதில்லை.