வலைப்பதிவு
உலகில் VGK என்றும்,
கோபு அண்ணா என்றும், வை.கோ என்றும் அன்புடன் அழைக்கப்பெறும் அய்யா திருச்சி வை
கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அவர் எழுதிய ” சுடிதார் வாங்கப் போறேன் “ என்ற கதையில் ஒரு குடும்பத்து பெரியவர் தனது
ஆர்வக் கோளாறு காரணமாக அடையும் மனப் போராட்டங்களை தனக்கே உரிய நகைச்சுவை நடையில் சொல்லுகிறார்.
சஸ்பென்ஸ்.
சிறுகதை
என்றால் ஒரு சஸ்பென்ஸ் .... படிக்கக் கையில் எடுத்தால் கீழே வைக்க மனது
வரக்கூடாது. அந்த வகையில் எடுத்தவுடனேயே //
வெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய
நிர்பந்தம். ஒவ்வொரு
தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம்
செய்து கொள்வேன்.// என்று சொல்லி. கதையைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டி விடுகிறார். சரி
பெரியவர் அவருடைய பெண்ணுக்கு சுடிதார் வாங்கப் போகிறார் போலிருக்கிறது என்று
நினைத்தால், அவருடைய மனைவிக்கு ஜவுளி எடுத்த கதைகளைச் சொல்லி அவருக்காக இருக்குமோ
என்று சொல்லி, கடைசியில் வீட்டுக்கு வரப்போகும், மகனுக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்
என்று சஸ்பென்ஸை உடைக்கிறார். அப்புறமும் சஸ்பென்ஸ். அந்த பெண் அந்த சுடிதாரை
வாங்கியதும் என்ன செய்தாள் என்று கதையை நகர்த்துகிறார். நமக்கு மேலும் ஆவல்.
கண்முன்னே
காட்சிகள்:
திரு
VGK அவர்கள தனது
கதைகளில், கற்பனையாகச் சொல்கிறாரா அல்லது தனது அனுபவத்தைக் கதையாகச் சொல்கிறாரா
என்று பிரிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை மனக்கண் முன்பு கொண்டு வருபவர். இந்த
கதையில் நகரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையின் அமைப்பை அப்படியே விவரித்து மனக்கண் முன் நிறுத்துகிறார். உதாரணத்திற்கு
//
முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம்.
கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே நமக்குள்ள ஒரு
சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென ] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி
ஒரு சிறப்பு ஏற்பாடு. வேறு
கடைகளுக்குப் போய் விடாமல், இங்கேயே
இந்தக்கடையிலேயே நாம் ஜவுளிகள் வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ்
செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ! //
இப்படியாக
கடையில் நுழைந்தது முதல் சுடிதார் வாங்கி வரும் வரை சுவையாகச் சொல்கிறார்.
இடையிடையே விற்பனைப் பெண்கள் எப்படியாவது ஒன்றை விற்றுவிட வேண்டும் என்று , அவர் பார்ப்பதை எல்லாம் // “அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்”
போட்டுப் பார்த்தால்
சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு”// சொல்வதை கிண்டலடிக்கிறார்.
சுடிதார்
வாங்கிவிட்டு வரும் வழியில், பல்வேறு டிசைன்களில் சுடிதார் அணிந்த இளம்பெண்களை
பார்க்கிறார். அப்போது அவருக்கு தான் வாங்கிய சுடிதார் வருங்கால மருமகளுக்கு
பிடிக்குமோ பிடிக்காதோ என்று மனக்குழப்பம். பரிசுப் போருள் வாங்கிச் செல்லும் அனைவருக்கும் வரும் ஒரு எண்ணத்தை சுவையாக
விவரிக்கிறார்.
நகைச்சுவை:
பெண்கள்
துணிக் கடையில் நுழைந்தால் ஒரு டிசைனை மட்டும் பார்த்து திருப்தி அடைய மாட்டார்கள்
என்பது பொதுவாகச் சொல்லப்படுவது. அதிலும் ஆண்களே பார்த்து வாங்கினால் என்ன
நடக்கும்? வீட்டுக்காரர் வாங்கி வந்த
புடவையை பெண்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதனை, // மின் விளக்கு
வெளிச்சத்திலும், சூரிய
வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள்? என்ன விலை?” என்பதைத் தெரிந்து கொண்டு, ”பில் இருக்கிறதா? அது பத்திரமாக இருக்கட்டும். தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு
வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள். // என்று சொல்லும்போது
நம்மையும் அறியாமல் சிரித்து விடுகிறோம். அவர்களே எத்தனை கடை ஏறி இறங்கினாலும்,
எத்தனை டிசை பார்த்தாலும் வாங்கி வருவது ....
//
“திரும்பத் திரும்ப
இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது” என்றும் சொல்வதுண்டு. //
பெரியவர்
நினைப்பு என்னவென்றால் சுடிதார் விலை அதிகம் இருந்தால் போதும்; அது உயர்ந்தது.
யூனிபார்ம் மாதிரி பேண்ட் –
சட்டைக்கு மேட்சிங் பார்த்தால் போதும். அதே மாதிரி சுடிதாரையும் வாங்கப்
பார்க்கிறார். இதனைப் புரிந்து கொண்ட கடைக்காரப் பெண் பெரியவரை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்துக் கொண்டே
அவள், “அதே
கலரில் வராது சார், யூனிஃபார்ம்
மாதிரி போட மாட்டார்கள்” என்கிறாள்.
குடும்பம்
என்றால்:
குடும்பத்திற்கு
எது தேவை. அன்பு ஒன்றே பிரதானம் என்று
//
அன்பையும், பாசத்தையும்,
பிரியத்தையும் நேருக்குநேர்
அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு! “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம்
கொண்டவள். //
என்ற
வரிகள் மூலம் உணர்த்துகிறார்.
ஐம்பது
வருஷத்திற்கு முன்பெல்லாம் நிச்சயமே செய்து இருந்தாலும் அந்த பெண்ணோடு மாப்பிள்ளையாக
வரப் போகிறவர் அவ்வளவு லேசில் பேசி விட முடியாது. இப்போது எல்லாமே மாறிப் போச்சு. இவர்
எடுத்துக் கொடுத்த சுடிதார் அந்த பெண்ணுக்கும் பிடித்து விட்டது. வெளியூரில் 400
கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெரியவரின் பையனுக்கும் பிடித்துப் போகிறது அது
எப்படி? // டிஜிடல் கேமராவில்
போட்டோ எடுத்து, இண்டெர்நெட்
மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள்
எங்கள் வருங்கால மருமகள். //
என்று முடிக்கிறார். அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு.
முடிவுரை:
மனைவிக்கோ,
மகளுக்கோ, மருமகளுக்கோ ஆண்கள் மட்டும் தனியாகப் போய் துணி எடுத்தால் எப்படி
இருக்கும் என்பதன் கற்பனைதான் இந்தக் கதை. சுவாரஸ்யமாக எழுதிய திரு VGK அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
முக்கிய குறிப்பு:
(வலைப்பதிவர்களால் V.G.K என்றும், கோபு அண்ணா
என்றும் அன்பாக
அழைக்கப்படும் திரு
வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்
(http://gopu1949.blogspot.in)
2014 - இல் அவரது
சிறுகதைகளை ஒட்டி,
40 வார காலம்
தொடர்ச்சியாக, சிறுகதை
விமர்சனப் போட்டிகள்
நடத்தினார். எழுத்தாளர்
ஜீவி (http://jeeveesblog.blogspot.in பூவனம்) அவர்கள் நடுவராய்
இருந்து சிறப்பித்தார்.
நானும் ஆர்வம்
கொண்டு இரண்டு கதைகளுக்கு, இரண்டு
விமர்சனங்கள் எழுதி
அனுப்பினேன். போட்டியில்
நான் வெற்றி
பெறாவிட்டாலும், கலந்து
கொண்டமைக்கான போனஸ்
பரிசு எனப்படும்
ஆறுதல் பரிசு
(ரூ100/= (50+50) கிடைத்தது. அதில்
எனது முதலாவது
விமர்சனக் கட்டுரை
(03.02.2014) இது)
தொடர்புடைய
எனது முந்தைய பதிவு:
வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteநண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்று நினைக்கிறேன். ஒய்வு முக்கியம்.
ReplyDeleteJayakumar
நண்பர் JK அவர்களுக்கு நன்றி. நான் அறுவை சிகிச்சை ஏதும் செய்து கொள்ளவில்லை. திருச்சியில் இன்னொரு மருத்துவரின் (Cardiologist) ஆலோசனைப்படி (Second opinion) மருந்துகள் எடுத்துக் கொண்டு, உணவு கட்டுப்பாடுடன், வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இப்போது நலம்.
Deleteதங்கள் பின்னூட்ட பதில் பார்த்து மகிழ்ச்சி. நலம் பேணுக. வாழ்த்துக்கள்.
Deleteமேலே கண்ட பின்னூட்டம் சிகிச்சை பற்றி இருக்கிறதே நலமாக முடிந்ததா அறிய ஆவல்
ReplyDeleteதிரு G.M.B அய்யா அவர்களுக்கு நன்றி. மேலே ஜேகே அவர்களின் பின்னூட்டத்திற்கு நான் அளித்த மறுமொழியையே இங்கு மீண்டும் குறிப்பிடுகிறேன்.
Delete//நான் அறுவை சிகிச்சை ஏதும் செய்து கொள்ளவில்லை. திருச்சியில் இன்னொரு மருத்துவரின் (Cardiologist) ஆலோசனைப்படி (Second opinion) மருந்துகள் எடுத்துக் கொண்டு, உணவு கட்டுப்பாடுடன், வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இப்போது நலம். //
விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
ReplyDeleteஇருவருக்கும் வாழ்த்துகள்.
நண்பரின் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
Deleteஅன்புள்ள என் ஆருயிர் நண்பர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteதங்களின் உடல்நிலையும், மன நிலையும் மிகவும் ஆரோக்யமாக இருக்க வேண்டி தினமும் அடியேன் பிரார்த்தித்துக்கொண்டு வருகிறேன்.
என்னைப்பற்றியும், நான் எழுதியுள்ள என்னுடைய ஓர் சிறு கதையினைப்பற்றியும் சிறப்பித்து எழுதியுள்ள தங்களின் இந்தப்பதிவினை, இன்று இப்போது என்னால் அகஸ்மாத்தாகப் பார்க்க நேரிட்டது. மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அளிப்பதாகவும் உணர்ந்து மகிழ்ந்தேன்.
>>>>>
[ 2 ]
ReplyDeleteமேற்படி கதையை 2011-ம் ஆண்டு முதன் முதலாக மூன்று சிறிய பகுதிகளாகப் பிரித்து, என்னால் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்ட போது, என் பதில்கள் உள்பட மொத்தமாக 75+42+86 = 203 பின்னூட்டங்கள் அவற்றில் உள்ளன.
அவற்றிற்கான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
[75 Comments]
http://gopu1949.blogspot.in/2011/04/2-of-3.html
[42 Comments]
http://gopu1949.blogspot.in/2011/04/3-of-3.html
[86 Comments]
மீண்டும் 2014-ம் ஆண்டு என் வலைத்தளத்தில் நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டிக்காக அதே கதையை, ஒரே பகுதியாக, தகுந்த படங்களுடன், மீள் பதிவாக அடியேன் வெளியிட்டிருந்தபோது அங்கும் 43 பின்னூட்டங்கள் உள்ளன.
அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html
>>>>>
[ 3 ]
ReplyDeleteதங்களின் இந்தப்பதிவினை நான் படித்து மகிழ்ந்ததும், மேற்படி என் இணைப்புகளில் உள்ள 75+42+86+43 = 246 பின்னூட்டங்களையும் நான் மீண்டும் ஒருமுறை படித்து ரஸித்து எனக்குள் மிகவும் மகிழ்ந்துகொண்டேன்.
எத்தனை எத்தனை தோழர்களும், தோழிகளும் எனக்கும், என் எழுத்துக்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளார்கள், என்பதை இப்போது காணும்போது மேலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. :)
>>>>>
[ 4 ]
ReplyDeleteமேற்படி சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் + அவர்கள் எழுதி அனுப்பியிருந்த பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களைப் படிக்க இதோ சில இணைப்புகள்:
முதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-02-03-second-prize-winners.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-03-03.html
>>>>>
விமர்சனம் அருமை..
ReplyDeleteஅவரது தளத்தில் வாசித்த நினைவும் வருகிறது
வாழ்த்துகள்! வைகோ சார் அவர்களுக்கும் மற்றும் தங்களூக்கும்
கீதா
ஆசிரியர் தில்லையகத்து V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி.
Delete[ 5 ]
ReplyDeleteஇந்த என் சிறுகதை 25.02.2009 தேதியிடப்பட்ட ”தேவி ” தமிழ் வார இதழில் சற்றே சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
இந்தக்கதையினில் வரும் 80% நிகழ்வுகள் எனக்கு ஏற்பட்ட என் சொந்த அனுபவத்திலும், 20% மட்டுமே என் கற்பனை கலந்தும் எழுதப்பட்டதாகும். அதனால் மட்டுமே இந்தக் கதை அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. :))
இந்தப்பதிவின் மூலம் என் இனிய நினைவலைகளைக் கிளப்பி, இன்று மகிழ்வித்துள்ள தங்களின் பேரன்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் ..... ஐயா.
Please take care of your health, Sir.
அன்புடன் VGK
oooooooooooooo
பல்வேறு பணிகளுக்கு இடையிலும், எனது பதிவிற்கு வந்து கருத்துரைகளும்,
Delete// தங்களின் உடல்நிலையும், மன நிலையும் மிகவும் ஆரோக்யமாக இருக்க வேண்டி தினமும் அடியேன் பிரார்த்தித்துக்கொண்டு வருகிறேன்.//
என்ற ஆறுதல் வார்த்தையும் எழுதிய, அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு நன்றி.
வை.கோ சாரை வலைப்பக்கம் வர வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteஅருமையான கதை.
//திரு VGK அவர்களுக்கு எனது பாராட்டுகள்.//
பாராட்டில் நாங்களும் கலந்து கொள்கிறோம்.
ஸ்ரீராம நவமி உற்சவத்தில் மனம் முழுவதையும் செலுத்தி கொண்டு இருப்பார் இன்று.
அதையும் தாண்டி வந்து பின்னூட்டம் போட்டு விட்டார்.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
//இன்னொரு மருத்துவரின் (Cardiologist) ஆலோசனைப்படி (Second opinion) மருந்துகள் எடுத்துக் கொண்டு, உணவு கட்டுப்பாடுடன், வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இப்போது நலம்./
மகிழ்ச்சி. என்றும் நலமாய் இருங்கள் வாழ்த்துக்கள்.
கோமதி அரசு Sunday, March 25, 2018 5:04:00 pm
Delete//வை.கோ சாரை வலைப்பக்கம் வர வைத்து விட்டீர்கள்.//
ஆமாம் மேடம். நான் சற்றும் எதிர்பாராத இது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகப் போய் விட்டது.
//அருமையான கதை.//
மிக்க நன்றி மேடம். 31.01.2014 தாங்கள் கொடுத்திருந்த தங்களின் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை இன்று மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.
-=-=-=-=-
கோமதி அரசு January 31, 2014 at 6:40 AM
//“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.//
ஆஹா! ஆசை, ஆசை. அவர்களுக்கு என்று வாங்கி கொடுத்து இருந்தால் போட்டுக் காட்டி இருப்பார்கள்.
//நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.//
அங்கீகாரம் தேடும் மனதிற்கு அங்கீகாரம் கிடைத்தால் மனம் எனும் கடலில் இன்ப அலை அடிக்காதா? வாழ்த்துக்கள்.
-=-=-=-=-
**திரு VGK அவர்களுக்கு எனது பாராட்டுகள்.** //பாராட்டில் நாங்களும் கலந்து கொள்கிறோம். ஸ்ரீராம நவமி உற்சவத்தில் மனம் முழுவதையும் செலுத்தி கொண்டு இருப்பார் இன்று. அதையும் தாண்டி வந்து பின்னூட்டம் போட்டு விட்டார்.//
ஆமாம் மேடம். வலைப்பக்கமும், டேஷ் போர்டு பக்கமும் நான் வருகை தந்து சுமார் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும். இன்று காலையில் எழுந்து, ஸ்நானம் செய்து விட்டு, பஞ்சக்கச்சத்துடன், சந்தியாவந்தனம், மாத்யான்னிஹம் முதலியன செய்து முடித்துவிட்டு, ஸ்ரீ ஸீதாராம பட்டாபிஷேகப் படத்தையும், வெண்ணெய் திருடும் குட்டியூண்டு குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் படத்தையும் வைத்துக்கொண்டு, தினசரி வழக்கம்போல நிறுத்தி நிதானமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் செய்துவிட்டு, பானகம், திராக்ஷைப் பழம் போன்றவைகளை நைவேத்யம் செய்து விட்டு, கற்பூரம் காட்டி விட்டு, சற்றே ஓய்வாக கம்ப்யூட்டர் பக்கம் வந்தேன்.
நம் ஜீவி ஸார் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வெளியிட்டு வரும் பாரதியார் கதையையும், தங்களின் ’அம்பா! நீ இரங்காய் எனில் !’ என்ற பதிவினையும் படித்து முடித்தேன். இவை இரண்டுக்கும் நடுவே, திரு. தமிழ் இளங்கோ அவர்கள் வெளியிட்டுள்ள என்னுடைய போட்டோ படத்துடன் கூடிய இந்தப் பதிவு காட்சியளித்ததும், அதையும் அவசர அவசரமாகப் படித்து முடித்து வியந்து போனேன். என்னைப் பற்றிய பதிவு என்பதை விட, நம் அருமை நண்பர் ஓரளவு உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை அறிந்து என் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
சில நாட்கள் முன்பு, நேரில் போய், அவரைப் பார்த்து விட்டு வர ஆசைப்பட்டேன். தொலைபேசியில் பேசியபோது, அவர்தான் என்னை நேரில் புறப்பட்டு வந்து சிரமப்படாதீங்கோ, ஸார் எனச் சொல்லித் தடுத்து விட்டார். மருத்துவர்கள் ஆலோசனைகளின் படி நடந்துகொண்டு, தான் ஓரளவுக்கு நலமாகத்தான் இருப்பதாகவும் சொன்னார்கள். அதைக் கேட்க எனக்கும் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
எந்த நேரத்தில் எந்த உதவி தேவையானாலும் எனக்கு ஒரு போன் போடுங்கோ ஸார் எனச் சொல்லியிருந்தேன். இது போல ஒரு பதிவு வெளியிடுவார் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அதனால் வெகு நாட்களுக்குப்பின் இந்த இவரின் பதிவுக்கு மட்டும் சில பின்னூட்டங்கள் அடியேன் கொடுக்கும்படி ஆகிவிட்டது.
//உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் VGK
கருத்துரை தந்த மேடம் அவர்களுக்கும், மறுமொழி தந்திட்ட திரு V.G.K அவர்களுக்கும் நன்றி.
Deleteவிமரிசனம் நன்றாகச் செய்துள்ளீர்கள். நேரம் கிடைக்கும்போது பரிசு பெற்ற விமரிசனம் எது என்று பார்க்கிறேன்.
ReplyDeleteஇந்தக் கதையை நான் படித்திருக்கிறேன். அவருடைய சொந்த அனுபவத்தில் கொஞ்சம் கற்பனை கலந்து ரகளையாக எழுதியிருப்பார். கோபு சார் இயல்பாக, சரளமான நகைச்சுவையும், உண்மைக்கு வெகு அருகிலிருக்கும் சம்பவங்களையும் கோர்த்து எழுதுவதால் படிப்பதற்குச் சுவையாக இருக்கும்.
இந்த இடுகையின்மூலம் உங்கள் உடல் நலன் முன்னேறுவது கண்டு அறிந்து மகிழ்கிறேன். வாழ்த்துகள்.
நண்பரின் கருத்துரைக்கு நன்றி
Deleteநெ.த. Sunday, March 25, 2018 7:19:00 pm
Deleteவாங்கோ ஸ்வாமீ ..... வணக்கம்.
//விமரிசனம் நன்றாகச் செய்துள்ளீர்கள்.//
இவர் எது செய்தாலும் அதனை மிகவும் ஜோராகவே செய்வாராக்கும். உங்களைப் போலவே இவரும் என் நெருங்கிய நண்பர் அல்லவா ..... அதனால் மட்டும் தான். :)
//நேரம் கிடைக்கும்போது பரிசு பெற்ற விமரிசனம் எது என்று பார்க்கிறேன்.//
நீங்கள் ஒன்றைச் சொன்னால் மறக்காமல் அதனைச் செய்து முடித்து விடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ’பரிசு பெற்ற விமர்சனம்’ எது என்று பார்த்தால் மட்டும் போதாது .... அவற்றில் உங்கள் கருத்தினைப் பதிவு செய்யுங்கள் ..... ஸ்வாமீ. அப்போதுதான் நீங்க பார்த்தீர்களா இல்லையா என்பது இங்கு அனைவருக்கும் தெரிய வரும். :)
//இந்தக் கதையை நான் படித்திருக்கிறேன். அவருடைய சொந்த அனுபவத்தில் கொஞ்சம் கற்பனை கலந்து ரகளையாக எழுதியிருப்பார். கோபு சார் இயல்பாக, சரளமான நகைச்சுவையும், உண்மைக்கு வெகு அருகிலிருக்கும் சம்பவங்களையும் கோர்த்து எழுதுவதால் படிப்பதற்குச் சுவையாக இருக்கும்.//
தங்களின் ரகளையான இந்தப்பின்னூட்ட வரிகளைப் படித்ததும் எனக்கு, தங்கள் கையால் முதல் தடவையாகச் செய்யப்பட்ட ’பைனாப்பிள் கேஸரி’யைச் சாப்பிட்டது போல, மிகவும் இனிப்பாக இருந்தது. http://engalblog.blogspot.com/2018/03/180326.html
இனிப்பான இதனைப் படித்த மாத்திரத்திலேயே, என் இரத்த சர்க்கரை அளவு ஒருவேளை 500 க்கு எகிறியிருக்குமோ என்னவோ ! :)
எனினும் மிக்க நன்றி ..... ஸ்வாமீ.
அன்புடன் கோபு
விமர்சனமும் ரசிக்கும்படி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல வைகோ ஸாரின் கதைகள் நிஜமா, கற்பனையா என்று குழம்பும் வண்ணமே எழுதுவார். நிஜமான அனுபவங்களைக் கலந்து எழுதுவதால் அப்படி ரசிக்க வைக்கும்.
ReplyDeleteஅறுவை சிகிச்சை தேவை இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
நண்பர் எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Deleteஸ்ரீராம். Sunday, March 25, 2018 7:25:00 pm
Deleteவாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!’ வணக்கம். ’ஸ்ரீராமநவமி’ யான நேற்று தாங்கள் இங்கு வருகை தந்துள்ளது சாக்ஷாத் ஸ்ரீராமபிரானையே கண்டது போல எனக்கு மகிழ்ச்சியளித்தது.
திருமதி விசாஹா ஹரி அவர்கள் மும்பை-மாதுங்கா பகுதியில் ஸ்ரீராம ஜனனம் முதல் ஆரம்பித்து தொடர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்கள். நேற்றுதான் ஆரம்பம் .... நேற்று ஸ்ரீராம ஜனனம் முடிந்துள்ளது.
இன்று ஸீதா கல்யாணம். இரவு மிகச் சரியாக 7 மணிக்கு சங்கரா டி.வி.யில் லைவ் ஆக ஒலிபரப்பி வருகிறார்கள். இன்று இரவு மிகச்சரியாக 6.59 மணிக்கு சங்கரா டி.வி.யை போட்டு ஆனந்தமாகக் கேட்டு மகிழுங்கள், ஸ்ரீராம்.
//விமர்சனமும் ரசிக்கும்படி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல வைகோ ஸாரின் கதைகள் நிஜமா, கற்பனையா என்று குழம்பும் வண்ணமே எழுதுவார். நிஜமான அனுபவங்களைக் கலந்து எழுதுவதால் அப்படி ரசிக்க வைக்கும். //
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம் !
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ஜெயஸ்ரீ ராம் !! :)
ஜெயஸ்ரீ = ஜிகினாஸ்ரீ பற்றி மேலும் அறிய ..... இதோ இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html
அன்புடன் கோபு
கோபு சாரின் கதைகள் எப்படியோ அது போலவே அவர் நடத்திய சிறுகதைப் போட்டியின் விமர்சனங்கள் இன்றைக்கும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்கான பெருமை தான். நேரம் கிடைக்கும் பொழுது பரிசு பெற்ற விமரிசனம் எதுவென்று (எப்படியிருக்கிறது என்ற அர்த்தத்தில்) படித்துப் பார்க்கிறேன் என்று நெ.த. குறிப்பிட்டிருப்பது என்றோ நடந்த அந்த விமரிசன போட்டியின் நீட்சி இன்றும் தொடருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteஇந்த போட்டிகளுக்கான (40 கதைகளுக்கான விமரிசனம்)நடுவரின் பொறுப்பு எப்படியோ எனக்கு வந்து சேர்ந்தது. அந்த நேரத்தில் தான் நான் அமெரிக்கா போக வேண்டியும் அங்கு 6 மாதங்கள் தங்கும் படியும் ஆயிற்று. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை என்று வந்திருந்த விமர்சனங்களை படித்துப் பார்த்து பலவித கோணங்களில் அவற்றிக்கு மதிப்பெண் அளித்து அவற்றை கோபு சாருக்கு அனுப்பி வைத்து என்ற இந்த வேலையே வாரத்தின் குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு நெக்கு வாங்கும். இருந்தும் என் வேலையில் எந்தவித அயர்ச்சியும் ஏற்படாமல் மனத்தையும் மகிழ்ச்சியில் வைத்துக் கொண்டு வரிக்கு வரி படித்துப் பார்த்து அந்தப் பணியைச் செய்தேன். பேரக் குழந்தைகளோடு விளையாட மட்டும் கொஞ்ச நேரத்தை தவறாமல் ஒதுக்கி வைத்துக் கொள்வேன். அப்படி ஒதுக்கிய நேரத்தை இரவு நேரம் கொஞ்சம் நீட்டித்துக் கொள்வேன். சனி, ஞாயிறுகளில் வெளியில் சுற்றிப் பார்க்க மகனோ, மகளோ அழைக்கும் பொழுது 'நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று சில நேரங்கள் வெளியில் போவதைத் தவிர்த்தும் இருக்கிறேன். நான் சென்னை திரும்பும் பொழுது தான் கிட்டத்தட்ட அந்தப் போட்டியும் நிறைவுக்கு வந்ததாக நினைவு.
ஒரு சின்ன செளகரியம் என்னவென்றால் இங்கு பகல் என்றால் அங்கு இரவு என்பது வசதியாக இருந்தது. நான் அந்த வாரப் போட்டிப் பரிசுக்கான விமர்சனத்தை தேர்ந்தெடுத்து மதியம் 1 மணிக்கு அனுப்பி வைத்தால் கூட 'டக்'கென்று கோபு சாரிடமிருந்து பதில் வந்து விடும். அது எனக்கு வியப்பாக இருக்கும். அவருக்கு இப்பொழுது ராத்திரி நேரமாயிற்றே என்ற நினைப்பில் 'என்ன சார், இன்னும் நீங்கள் தூங்கப் போகவில்லையா?' என்று கேட்டால் நான் இரவு பூராவும் விழித்துக் கொண்டு தான் சார் இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் பகலில் தான் தூக்கம்' என்று அவரிடமிருந்து பதில் வரும். கோபு சார் தன்னை மிகவும் வருத்திக் கொண்டார் என்று இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். சில நேரங்களில் 'எப்பொழுது உங்களிடமிருந்து தேர்வு லிஸ்ட் வருமோ என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்' என்பார். அவர் தன் பதிவுகளில் என்னல்லாம் ஜோடனை வேலைகள் பண்ணுவார் என்று உங்களுக்கே தெரியும்.அதெற்கெல்லாம் நேரம் வேண்டுமே என்று நினைத்து என் வேலையை அதற்கேற்ப அமைத்துக் கொள்வேன். இப்படியாக ஒரு சகோதர நட்பில் ஒருவழியாக இந்த விமரிசன யக்ஞம் நிறைவு பெற்றது என்று இப்பொழுதும் நினைத்துக் கொள்கிறேன்.
தமிழ் இளங்கோ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். பல பரிசுகளைத் தொடர்ச்சியாகப் பெற்றவர்கள் கூட அந்தப் போட்டியை நினைவு கொள்ளும் தருணத்தில் என்னை மறந்து விட்ட நிலையில் தாங்கள் நினைவுகள் அழியாமல் என்னைப் பற்றியும் இந்தப் பதிவில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி, ஐயா.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Deleteஇந்த சிறுகதைகள் விமர்சனப் போட்டி நடக்கும்போது, முடியும் வரை ( 40 வார காலம் ) நடுவர் யார் என்றே யாருக்கும் தெரியாது. அவ்வளவு ‘சஸ்பென்ஸ்’. அப்புறம் தான் திரு V.G.K அவர்கள் தெரிவித்தார். அதன் பிறகுதான் உங்களைப் பற்றியும், உங்கள் வலைத்தளம் பற்றியும் எனக்கு தெரிய வந்து உங்கள் பதிவுகளைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் நீங்கள் எழுதிய “ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை” என்ற நூலைப் படித்து முடித்து விட்டு, எனது வலைத்தளத்தில், அந்நூலைப் பற்றிய எனது பார்வையைப் பதிவு செய்ததில், நான் படித்த அந்நாளைய எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் அசை போட்டதில் எனக்கு இன்னும் மகிழ்ச்சியான விஷயம்.
உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தொடர்ந்து எழுதி வரும் ‘பாரதியார் கதை’ யை இனிமேல்தான் விட்டுப்போன இடத்திலிருந்து தொடர்ந்து படிக்க வேண்டும்.
இந்த சிறுகதை விமர்சனப் போட்டிக்கு நான் அனுப்பிய இன்னொரு விமர்சனக் கட்டுரையும் உள்ளது. விரைவில் அதனையும் எனது வலைத்தளத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
ஜீவி Sunday, March 25, 2018 9:52:00 pm
Deleteவாங்கோ ஸார், நமஸ்காரங்கள் ஸார்.
//இப்படியாக ஒரு சகோதர நட்பில் ஒருவழியாக இந்த ’விமரிசன யக்ஞம்’ நிறைவு பெற்றது என்று இப்பொழுதும் நினைத்துக் கொள்கிறேன்.//
‘விமர்சன யக்ஞம்’ என்பது மிகச்சிறந்த சொல்லாடல். மிகவும் ரஸித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் நம்மால், கொஞ்சமும் தொய்வில்லாமல், மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், ’போட்டி’ என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், 40 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நடத்திக்காட்டப்பட்ட அது ஒரு மாபெரும் யக்ஞமே தான். அதில் எந்தவொரு சந்தேகமும் யாருக்கும் இல்லை. இருக்கவும் முடியாது.
IT IS REALLY A RECORD BREAK IN OUR BLOG-SPOT HISTORY
எந்த மிகப்பெரிய யக்ஞங்கள் பூர்த்தியாகும் போதும், அதில் உள்ள சிறு சிறு குறைகள் + தோஷங்கள் விலகிட ’ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம்’ செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும். இதைப்பற்றிகூட நான் என் பதிவு ஒன்றினில் மிகவும் விளக்கமாக எழுதியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_5095.html
2014-இல் வெற்றிகரமாக நிறைவடைந்த நமது யக்ஞத்திற்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும், நம் பதிவுலக நட்புக்களின் ஆயுள் + ஆரோக்யம் + ஐஸ்வர்யம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், அடியேன் இன்றுவரை தினசரி ‘ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம்’ என்ற புளியங்கொம்பையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சின்ஸியராகச் செய்து வருகிறேன். அதனால் எனக்கு வேறு எந்த வெட்டி வேலைகளுக்குமே, இப்போதெல்லாம் நேரமே இருப்பது இல்லை.
’ஸர்வம் விஷ்ணுமயம் ஜகது’
காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸ்மர்ப்பயாமி !
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான, இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
என்றும் அன்புடன் கோபு
கோபு சார் நடத்திய விமர்சனப் போட்டி காலகட்டத்தை நினைவு கொண்ட அன்புச் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி. ராணுவக் கட்டுப்பாடு என்று சொல்வார்கள். சும்மாச் சொல்லக்கூடாது, அப்படியான ஒரு கட்டுப்பாட்டுடன் தான் அந்தப் போட்டியை மிகவும் கறாராக கோபு சார் நடத்தினார். நீங்கள் நினைவு கொண்ட மாதிரி போட்டிக்கான நடுவர் யார் என்று விமர்சனக் கட்டுரை அனுப்புவோருக்கு தெரியாது. அது போலவே யார் யார் எழுதிய கட்டுரைகள் எனக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என எனக்கும் தெரியாது. கொத்து கொத்தாக எனக்கு மெயிலில் கட்டுரைகள் மட்டுமே வரும். வாராவாரம் வந்து சேர்ந்தவுடனேயே என் வேலை துவங்கி விடும். பத்து வரிகளுக்கு குறையாமல் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்பது போட்டி விதி என்று நினைவு. இருந்தாலும் அதற்கு குறைவான வரிகள் இருக்கும் கட்டுரைகளையும் அனுப்பி வைப்பார். 'ஏன் சார், நீங்களே விதிகளின் படி இல்லாத கட்டுரைகளை வடிகட்டி எனக்கு அனுப்பி வைக்கலாமே' என்று ஒரு தடவை கேட்ட பொழுது, 'போட்டிக்கு வரும் கட்டுரைகள் அத்தனையையும் உங்களுக்கு அனுப்பி வைப்பது தான் என் வேலை. போட்டி விதிகளின் படி இல்லாத கட்டுரைகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் நடுவரின் பணி. அதில் நான் தலையிட மாட்டேன்' என்று கறாராகச் சொன்னார். போட்டிக்கு என்று வந்த கட்டுரைகள் எல்லாம் அவருக்குப் போய்ச் சேரட்டும். அவர் பார்வையில் பட்ட பிறகு அவரே விதிகளை அனுசரித்துக் கொள்ளட்டும். நம் வேலையில்லை அது என்று தீர்மானித்த சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மனசு அவரது.
Deleteஅந்த அளவுக்கு தான் செய்கிற காரியங்களில் ஒரு நேர்மையும் கட்டுப்பாடும் அவருக்கு இருந்தது. இந்த மாதிரியான மனுஷர்களைப் பார்ப்பது ரொம்பவும் அபூர்வம். கணக்குப் போட்டு பரிசுத்தொகையை அவரவர்களுக்கு அந்த கெடு காலத்திற்குள் அனுப்பி வைத்தது, அவர்களுக்கு பரிசுத் தொகை போய்ச் சேர்ந்ததை நிச்சயப்படுத்திக் கொண்டது என்று நிறைய சொல்லலாம். ஏதோ இந்தக் காரியத்தை செய்ய தெய்வம் தன்னை கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டதே போன்ற அடக்கமும், நேர்மையும் அவரிடம் இருந்ததைப் பார்த்தேன். இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடத்திய அந்தப் போட்டிக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாதவாறு தேர்ந்தெடுத்த கட்டுரைகளை பல தடவைகள் மீண்டும் மீண்டும் படித்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்கான கட்டுரைகளைத் துல்லியமாக தேர்ந்தெடுப்பதற்கு மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்ட நினைவுகள் மறப்பதற்கில்லை.
அந்த நினைவுகளை இவ்வளவு காலம் கழித்து இப்பொழுதாவது பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி, தமிழ்!
ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்த இந்தக் கதை விமர்சனப் போட்டி போகப் போக சூடு பிடித்து விட்டது. நிறைய நிறைய கட்டுரைகள் வர ஆரம்பித்தாலும் முழு நிறைவுடன் தேர்ந்தெடுத்தோம் என்ற சந்தோஷம் எனக்குக் கிடைக்காமலே இருந்தது. போட்டிக்கு கட்டுரைகள் அனுப்புவகளின் முயற்சியை இன்னும் தீவிரப்படுத்த பரிசு பெற்ற விமர்சனங்களுக்கு எல்லோரையும் போல நானும் பின்னூட்டம் போட ஆரம்பித்தேன். அந்த பின்னூட்டங்களில் என் பார்வையில் படுகிற குறைகள் மாதிரி பரிசு பெற்ற கட்டுரைகளையே செம்மை படுத்துகிற வேலைகளைச் செய்து பார்த்தேன். அப்படியான என் செயல்பாட்டிற்கு நல்ல பலன் இருந்தது. அதனால் 'நெக் அண்டு நெக்'காக போட்டி போடும் சிறப்பான கட்டுரைகள் வர ஆரம்பித்தன. பல சமயங்களில் நானகைந்து தேர்வான கட்டுரைகளை வைத்துக் கொண்டு எதற்கு முதல் பரிசு, எதற்கு இரண்டாம் பரிசு என்று தீர்மானிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனேன். அதனால் ஏதாவது கடுகளவு சிறப்பில் முதல் இரண்டாம் பரிசுக்கான கட்டுரைகள் தேர்வான அதிசயங்களும் நடந்தன.
Deleteகொஞ்சம் கொஞ்சமாக கோபு சாரின் இந்தக் கதை விமரிசனக் கட்டுரைப் போட்டி, கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு பயிற்சிப் பட்டறை போல தோற்றம் கொள்ள ஆரம்பித்தது.
Deleteஇருந்தும் எனக்கு நிறைவேற்படவில்லை. கட்டுரைகள் பள்ளிகளில், கல்லூரி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்ட கட்டுரைகள் அமைப்பில் மாற்றம் வேண்டி முயன்றேன். தமிழ் புலவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போல 'சுரத்'தில்லாமல் வெற்று விவர சேகரிப்புகளாக
இருக்கக் கூடாது என்றும் நினைத்தேன். பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் போல வழுக்கிக் கொண்டு போகும் நடையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அதனால் நடுவரான நான் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கோபு சாரின் கதை ஒன்றுக்கு பரிசுப் போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டு விமரிசனம் எழுதும் பேறும் கிடைத்தது.
இப்படி இந்தப் விமர்சனப் போட்டி பதிவுலகில் சத்தப்படாமல் செய்த சாதனைகள் நிறைய. பரிசு பெற்றவர்கள் 'கட்டுரைகள் என்றால் இப்படித்தான் எழுத வேண்டும்' என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டோம் என்று மனசார சொன்னார்கள்.
மொத்தத்தில் கோபு சாரின் இந்த கதை விமரிசனப் போட்டி பதிவுலகில் சத்தப்படாமல் செய்த சாதனைகள் நிறைய. ஆச்சரியம் என்னவென்றால் போட்டியின் ஆரம்ப நிலையில் கோபு சாரோ, நானோ இப்படியெல்லாம்
நிகழும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்பது தான்.
பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க வாய்ப்பு கிடைத்த இந்த தருணத்து இந்த நிகழ்வுகளையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் இதையெல்லாம் சொல்ல நேர்ந்தது. எல்லா வளர்ச்சிப் போக்குகளுக்கும் நாம் பெருமைப்பட வேண்டும். கோபு சாரின் இந்த கட்டுரைப் போட்டியும் அப்படியான ஒன்று என்பதில் நம் எல்லோருக்குமான பெருமை அது.
அதற்காக என் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் எனக்கும் சந்தோஷம் தான். கோபு சார், தமிழ் ஐயா, வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி.
அருமையான விமர்சனம் ஐயா
ReplyDeleteநன்றி
அன்புள்ள ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteஒரே வார்த்தையில் சொல்லணும்னா......பதிவு...+ பின்னூட்டங்கள் ஸூப்பரோ..ஸூப்பர்..
ReplyDeleteஅன்பரின் பாராட்டினுக்கு நன்றி
Deleteஅருமையான விமர்சனத்திற்காக உங்களுக்கும், பலரை எழுத வைத்த திரு V.G.K அவர்களுக்கும் பாராட்டுகள்.... உங்களது பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் பாராட்டினுக்கும் ஆறுதல் மொழிக்கும் நன்றி
DeleteI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News