Wednesday, 29 November 2017

வலைப்பதிவர்கள் ஆலோசனை - முதற் கூட்டம்



சென்ற ஞாயிறு (26.11.17) அன்று, ‘வலைப்பதிவர்கள் திருவிழா’ நடத்துவது சம்பந்தமாக, ஒரு ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இந்த சந்திப்பு பற்றி அங்கே வந்திருந்த, வலைப்பதிவர்கள், குறிப்பாக புதுக்கோட்டை நண்பர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள், இந்த சந்திப்பினை, அவரவர்  ஃபேஸ்புக்கில் (Facebook) புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டனரே அன்றி விவரமாக எழுதிடவில்லை. ‘வரலாறு முக்கியம்’ என்பதனால் நாமே பதிவு செய்து விடுவோம் என்ற ஆர்வம் காரணமாக, வலைப்பதிவு நண்பர்கள் பகிர்ந்த படங்களோடு, நான் எடுத்த படங்களையும் கலந்து இங்கு ஒரு பதிவு. 

நகர்மன்ற வளாகத்தில்

வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடைபெறும் நகர்மன்ற வளாகத்தில், ஞாயிறு (26.11.17) பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கும் என்று ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார். இங்கு நான் திருச்சியில் இருந்து கிளம்பும்போதே வானம் இடி, மின்னல் என்று சிறு தூறலோடு வரவேற்பு தந்து கொண்டு இருந்தது. நான் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அங்கு சென்று விட்டேன். நண்பர்கள் வருவதற்குள் ஒருமுறை புத்தகத் திருவிழாவை ஒரு வலம் வந்து விடுவோம் என்று சென்று வந்தேன். சற்று நேரத்தில் முனைவர் ஜம்புலிங்கம், கஸ்தூரி ரங்கன் மற்றும் கரந்தை ஜெயக்குமார் மூவரும் வந்தார்கள்.

(படம் மேலே) முனைவர்  பா. ஜம்புலிங்கம், கஸ்தூரி ரங்கன் மற்றும் கரந்தை ஜெயக்குமார்.

 கூட்டம் தொடங்கியது
 
(படம் மேலே)  கூட்டம் துவங்கியபோது – இடமிருந்து வலம் > மீரா செல்வகுமார், ஷேக் தாவூத் பஷீர் அலி, இந்துமதி, கீதா, தென்றல் சாய் , தி.தமிழ் இளங்கோ, நா.முத்துநிலவன், கரந்தை ஜெயக்குமார், பா.ஜம்புலிங்கம் மற்றும் கஸ்தூரி ரங்கன்

(படம் கீழே) Picture Courtesy https://www.facebook.com/karanthaijayakumar
 
வலைப்பதிவு நண்பர்கள் நிறையபேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சிலரே வந்து கலந்து கொண்டனர். கூட்டம் துவங்க இருந்த நேரத்தில், மழை பெய்யத் தொடங்கியது. எனவே இந்த ஆலோசனை கூட்டம், அங்கு இருந்த புதுக்கோட்டை நாணயவியல் கழக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. 

கலந்துரையாடல்

ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் கூட்டத்தினை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், புதுக்கோட்டை கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாம் நடத்த உதவிய, மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி (MOUNT ZION COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY) நிர்வாகத்தினர், முற்பகல் நிகழ்ச்சிக்கு இடமும், உணவும் (Sponsor) தந்திட முன்வந்து இருப்பதாக தெரிவித்தார். அப்போது அங்கு வலைப்பதிவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் எனவும், மதிய உணவுக்குப் பிறகு, புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு அரங்கில் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வண்ணம் ( சிறப்பு போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், சிறப்பு சொற்பொழிவாளர் உரை என்று) பிற்பகல் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ளலாம் எனவும் சொன்னார். மேலும் மேலே சொன்ன அதே கல்லூரி நிர்வாகத்தினரிடம் காலை நிகழ்ச்சிக்குப் பிறகு, அங்கிருந்து வலைப்பதிவர்களளை, அவர்களது கல்லூரி பேருந்திலேயே மதிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பொதுவாக, வலைப்பதிவில் எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றியும், ஃபேஸ்புக் பக்கம் பலர் சென்று விட்டது குறித்தும் பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும் வலைப் பக்கம் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினையும், வலைப்பக்கத்தில் எழுதுவதால் கிடைக்கும் அனுகூலங்கள் குறித்தும் மற்ற நண்பர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று, ஆசிரியர் திரு கஸ்தூரி ரங்கன் அவர்கள் தெரிவித்தார். 

மற்றவர்கள் கருத்தும் ஏறக்குறைய, இரண்டு நாட்கள் நடத்துவதை விட ஒரேநாளில் முற்பகல் வலைப்பதிவர்கள் சந்திப்பு பிற்பகல் ஏனைய நிகழ்ச்சிகள் என்றே இருந்தன. மேலும் புதுக்கோட்டையில், அடுத்த வருடம் ( 2018 இல்) இந்த வலைப்பதிவர் திருவிழா நடத்துவது எனவும்,  இன்னொரு ஆலோசனை கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வலைப்பதிவர் திருவிழாவிற்காக  முன்பு போலவே புதிதாக வலைத்தளம் தொடங்குதல், வங்கி கணக்கு மூலம் நிதி திரட்டல், விழாமலர் வெளியிடுதல் ஆகிய செயல்பாடுகளும் இருக்கும்
.  
கூட்டம் முடிவதற்கும் மழை விடுவதற்கும் சரியாக இருந்தது. அப்போது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட, அங்கு வந்த கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்களுடன் நண்பர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். 

கஸ்தூரி ரங்கன் அவர்களது ஃபேஸ்புக்கிலிருந்து) Pictures Courtesy : https://www.facebook.com/kasthurirengan74?hc
 
(படம் மேலே) புத்தகத் திருவிழா மேடையில் 

(படம் மேலே) கூட்டத்தின் போது

Devatha Tamil – கீதா அவர்களது ஃபேஸ்புக்கிலிருந்து
 






(படம் மேலே) தென்றல் சாய், கவிஞர் தங்கம் மூர்த்தி, இந்துமதி மற்றும் கீதா
                                                      .xxxxxxxxxxxxx.  .xxxxxxxxxxx.

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

வலைப்பதிவர் சந்திப்புசில ஆலோசனைகள் http://tthamizhelango.blogspot.com/2017/11/blog-post_20.html
 
வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும் http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_60.html


Saturday, 25 November 2017

புத்தகத் திருவிழாவினிலே



(புத்தகத் திருவிழா என்றால் திரும்பத் திரும்ப என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எனவே இந்த பதிவைப் படிக்கும் போது சலிப்பு ஏற்பட்டால் ( அதாவது Bore அடித்தால்)  மன்னிக்கவும்) 

சென்றவாரம், புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள்  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2017 இற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி. நேற்று தொடங்கிய தொடக்க விழாவிற்கு என்னால் செல்ல இயலவில்லை. புதுக்கோட்டை ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் தொடக்க விழாவை சிலாகித்து, வண்ணப் படங்களுடன் எழுதி இருந்தனர். எனவே இன்று (25.11.17 – சனிக்கிழமை), முற்பகல் 11.00 மணி அளவில் திருச்சி – கே.கே.நகரிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றேன். பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த, வழக்கமாக நான் உணவருந்தும் விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு, புத்தகத் திருவிழா நடைபெ றும் நகர்மன்றம் சென்றேன். 

நகர்மன்றத்தில்

மதிய உணவுவேளை என்பதால் புத்தக அரங்குகளில் அதிக நெரிசல் இல்லை. ஒன்றிரண்டு விற்பனையாளர்களும் பக்கத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்று இருந்தனர்.  நான் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன், இண்டர்நெட்டில் சில நூல் வெளியீட்டார்களின் நூல் பட்டியலைப் பார்த்து, வாங்க வேண்டியவறை குறித்துக் கொண்டு சென்று இருந்தேன். அவைகள் அங்கு இல்லை, ஆன் லைனில் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.

ஒருமுறை வீதி – இலக்கிய கூட்டத்தில் பூமணி எழுதிய ஒரு நூலினைப் பற்றி, மறைந்த ஆசிரியர் குருநாதசுந்தரம் (வலைப்பதிவரும் கூட) அவர்கள் விமர்சனம் செய்து இருந்தார். ஆனால் எனக்கு நூலின் பெயர் மறந்து விட்டது; இதே நூலினைப் பற்றி கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களும் சொல்லி இருந்த படியினால், அவரிடமே செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் ‘அஞ்ஞாடி’ (காலச்சுவடு வெளியீடு) என்று சொன்னார். இந்த நூலும் கிடைக்கவில்லை. – பொதுவாகவே எல்லா புத்தகத் திருவிழாவிலும், பதிப்பாளர்கள், அவர்களது எல்லா வெளியீடுகளையுமே எடுத்து வருவதில்லை; ( சென்னை மட்டும் விதிவிலக்கு என்று நினைக்கிறேன்) அவற்றை கொண்டு வந்து விட்டு, மறுபடியும், மூட்டை கட்டிக் கொண்டு போவதில் உள்ள சிரமம்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது
.
ஒருசில நூல்கள் மட்டும்

(படம் மேலே – நக்கீரன் முகவர் திரு காஜா மொய்தீன் ( சக்சஸ் புக் ஷாப் ) அவர்களது அரங்கில், நூல் ஒன்றை வாங்கிய போது)

எனவே இருப்பதில் வாங்கிக் கொள்வோம் என்று ஒரு சில புதிய நூல்களை மட்டும் வாங்கினேன். என்னதான் இனிமேல் எந்த புத்தகமும் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும், நான் பாட்டுக்கு புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக வீட்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறேன். எனக்குப் பிறகு இவை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.

நான் இன்று வாங்கிய நூல்கள்:

வணக்கம் – வலம்புரி ஜான் (நக்கீரன், சென்னை வெளியீடு)
தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர் தங்கம் மூர்த்தி ( படி, சென்னை வெளியீடு )
1945இல் இப்படியெல்லாம் இருந்தது – அசோகமித்திரன் (காலச்சுவடு, நாகர்கோவில்)
குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் (கிழக்கு பதிப்பகம், சென்னை)
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? – ம.வெங்கடேசன் (கிழக்கு பதிப்பகம்)
பறையன் பாட்டு – தலித்தல்லாதோர் கலகக் குரல் – தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி (தடாகம், சென்னை வெளியீடு)
மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி? – மரியா கொலாசோ கிளவெல் (தமிழில் மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் – அடையாளம், புத்தாநத்தம் வெளியீடு)

படங்கள் கீழே ( சில அரங்குகளில் எடுத்த படம்)







ஒவ்வொரு அரங்காக சுற்றி வந்த போதும் எனக்கு தெரிந்த முகமாக யாரும் இல்லை. ஒருவேளை மாலையில் சென்று இருந்தால் பார்த்து இருக்கலாம்.

நாணயவியல் கழகம்





புத்தக அரங்குகளை விட்டு வெளியே வந்த போது,, ‘இளங்கோ சார் … இளங்கோ சார்’ ‘ என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஃபேஸ்புக் நண்பர், திரு ஷேக் தாவூத் பஷீர் அலி (புதுக்கோட்டை நாணயவியல் கழக செயலர்) அவர்கள் தான் அழைத்து இருந்தார். உடனே அவரது மேற்பார்வையில் இருந்த உலக பணத்தாள், காசுகள் மற்றும் தபால்தலை கண்காட்சி அரங்கிற்கு சென்று வந்தேன். இங்குள்ள நிறைய சேகரிப்பு மற்றும் குறிப்புகளுக்கு பாராட்டுகள். 

(படம் மேலே - திரு ஷேக் தாவூத் பஷீர் அலி அவர்களுடன் நான்)

விஷுவல் டேஸ்ட் (Visual Taste)


Monday, 20 November 2017

வலைப்பதிவர் சந்திப்பு – சில ஆலோசனைகள்



அண்மையில் நமது ஆசிரியர் N.முத்துநிலவன் அய்யா அவர்கள் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பது குறித்து ‘புத்தகத் திருவிழா - வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைப்பு’ http://valarumkavithai.blogspot.com/2017/11/blog-post_17.html   என்ற  தனது பதிவினில் சொல்லி இருந்தார்கள்; உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்தான். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் நானும் இருக்கிறேன்.

சந்திப்புகளும், மாநாடுகளும்

பொதுவாகவே தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு என்பது ஆங்காங்கே, எண்ணிக்கையில் அதிகம் இல்லாத பதிவர்கள் கூட்டமாக, நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதுசமயம் பதிவர்கள் தமக்குள் ஒரு கலந்துரையாடல் மூலம் பதிவர் சந்திப்பு என்பதன் நோக்கம் நிறைவேறுகிறது.

ஆனால் எப்போதோ நடக்கும், பெரிதான வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில், வலைப்பதிவர் கலந்துரையாடல் என்பதே இல்லாமல் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதிலும் முக்கியமான பெரியமனிதர் அந்த விழாவில் கலந்து கொண்டால், அவரை வரவேற்பதிலும், அவரைப் புகழ்வதிலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் என்று மேடை நிகழ்வுகள் நகர்ந்து விடுகின்றன.
  
எனது முந்தைய பதிவு

மேலே சொன்ன ஆதங்கத்தை வெளிப்படுத்தி, ( வலைப்பதிவர்கள் சந்திப்பும் ஆதங்கமும் http://tthamizhelango.blogspot.com/2015/10/blog-post_60.html ) என்ற எனது பதிவினில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டேன்.

// பொதுவாகவே ஆங்காங்கே நடைபெறும் வலைப்பதிவர்களின் சிறிய சந்திப்புகள் இந்த ஆதங்கம் இல்லாமல் செய்து விடுகின்றன. இதில் உள்ள மனநிறைவு, கலந்துரையாடல் (Discussion) குறித்து அவரவர் பதிவுகளில் எதிரொலிக்கக் காண்கிறோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, பல உறவினர்களைச் சந்திக்கிறோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பவர்களோடு நீண்ட நேரம் அளவளாவுகிறோம். யாரும் கட்டுப் படுத்துவதில்லை. ஆனால், வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று, நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது மேடையில் இருப்பவர்களே சொல்லி விடுகிறார்கள். இதனால்  யாருடனும் யாரும் பேச முடிவதில்லை. இதுவே இந்த ஆதங்கத்திற்கு காரணம். இதை நீக்க ஒரே வழி, இனி வரும் நிகழ்ச்சிகளில், ”வலைப்பதிவர்கள் சந்திப்புஎன்ற தலைப்பிற்கேற்ப கலந்துரையாடல் மட்டுமே நிகழ்த்துவது. அல்லது மேனாட்டுப் பதிவர்கள் நடத்துவது போன்று இரண்டு நாள் நிகழ்ச்சிகள்; அல்லது காலையில் கலந்துரையாடல், உணவு இடைவேளைக்குப் பிறகு மற்ற நிகழ்ச்சிகள் என்று வைத்துக் கொள்ளலாம். //
 
இந்த பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய நண்பர்கள் பலரது கருத்தினில் வலைப்பதிவர்கள் கலந்துரையாடலுக்கு ஆதரவு இருந்ததையும், இரண்டுநாள் கூட்டம் என்பதற்கு வரவேற்பு இல்லாததையும்  அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் தொலைவில் இருந்து வருபவர்கள் மதியம் ஊர் திரும்பும் அவசரத்தில் இருப்பார்கள். எனவே அவர்கள் வசதிக்காக மதிய உணவுக்கு முன்னரேயே வலைப்பதிவர்கள் அறிமுகம், மற்றும் கலந்துரையாடல் இருந்தால் நலம். 

நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் சொல்வதற்கு இன்னும் நிறையவே இருக்கின்றன. பார்ப்போம்.
                 
                                      ( PICTURE COURTESY: GOOGLE IMAGES)