தவத்திரு ஊரன் அடிகளார்
புரட்சித்துறவி வள்ளலார்
ஊரன் அடிகளார் ‘வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு’ என்ற ஒரு நூல்
எழுதியுள்ளார். அது ஒரு பெரிய நூல். தமிழக அரசின் பரிசு பெற்றது.
// வள்ளலார் செய்த புரட்சிகளை உலகம் அறிய
வேண்டும். அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கெனச் சுருக்கமாக ஆக்கப் பெற்றதே “புரட்சித்துறவி
வள்ளலார் “ என்னும் இந்நூல் //
என்று இந்நூலின் முன்னுரையில் ஊரன் அடிகளார் குறிப்பிடுகிறார்.
வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள்
இப்பகுதியில் வள்ளலாரின் ` பிறப்பு (05.10.1823), சித்தி
(30.01.1874) என்று வரிசையிட்டு சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது வள்ளலார்
கொள்கைகள். (பக்கம் – 10)
1.கடவுள் ஒருவரே.
2.அவரை ஜோதி வடிவிலுண்மை அன்பால் வழிபட
வேண்டும்.
3.சிறு தெய்வ வழிபாடு கூடாது.
4.அத் தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி
கூடாது.
5.புலால் உண்ணலாகாது.
6.சாதி சமய முதலிய வேறுபாடுகள் கூடா.
7.எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி
ஒழுகும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய
ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
9.புராணங்களும் சாத்திரங்களும் முடிவான
உண்மையைத் தெரிவிக்க மாட்டா.
10.மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்க
வேண்டும்.
11.காதுகுத்துதல் மூக்குக்குத்துதல்
வேண்டா.
12.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல்
வேண்டா.
13.மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய
வேண்டா.
14.இறந்தவரைப் புதைக்க வேண்டும், எரிக்கக்
கூடாது.
15.கருமாதி, திதி முதலிய சடங்குகள்
செய்ய வேண்டா.
16.எதிலும் பொது நோக்கம் வேண்டும்
வள்ளலார் வரலாற்றுச் சுருக்கம்
என்னும் இப்பகுதியில் வள்ளலாரின் பெற்றோர், வள்ளலாரின் பிறப்பு
தொடங்கி சித்திவரை, சென்னை வாழ்க்கை, கந்தகோட்ட
வழிபாடு, திருமணமும் இல்லற வாழ்வை நாடாமையும், தண்ணீரில் விளக்கெரித்தது, வடலூரில்
சத்திய தருமச்சாலை நிறுவியது, என்று நடந்த நிகழ்வுகள் சுருக்கமாகவும் சுவாரஸ்யத்தோடும்
சொல்லப்பட்டுள்ளன.
நூலில் உள்ள சில செய்திகள் இவை.
// வள்ளலார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை.
எவ்வாசிரியரிடத்தும் படித்ததில்லை. கற்கவேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார். கேட்கவேண்டுவனவற்றை
இறைவனிடமே கேட்டார். // (இந்நூல் பக்கம் 14)
// முருகப்பெருமானை வழிபடு கடவுளாகவும்,
திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும், திருவாசகத்தை வழிபடு நூலாகவும் வள்ளலார் இளமையில்
கொண்டார் // (இந்நூல் பக்கம் 18)
// இரவில் விளக்கில்லாத இடத்தில் இருக்கக்கூடாதென்பது
பெருமான் கொள்கை. ஆதலின் பெருமானது அறையில் இரவு முழுவதும் விளக்கெரிந்து கொண்டேயிருக்கும்
// (இந்நூல் பக்கம் 27)
// வள்ளலார் வெள்ளாடைத் துறவி.தூய
வெண்ணிற் ஆடையே உடுத்துவார். கல்லாடை உடுத்ததில்லை. துறவுக்கோலத்துக்கு முதல் அறிகுறியாக
இன்று கருதப்படுவது காவி உடை. வள்ளலார் காவிதரிக்காது வெள்ளையே உடுத்தினார். கொண்ட
கோலத்தாலும் உடுத்திய உடையாலும் ஒரு புரட்சியைச் செய்தார். தத்துவங்களோடு போரிடுவதற்கு
அறிகுறி, யுத்தக்குறி – போர்க்கொடி காவி. வெற்றிக்கொடி வெள்ளை. ஆதலில் வெள்ளையே போதும்
என்பது வள்ளலார் கொள்கை: அவர் கூறும் விளக்கம் // (இந்நூல் பக்கம் 32)
வள்ளலாரின் பன்முகஞானம் பன்முதன்மை, என்ற தலைப்பினில் அவருடைய பல்வேறு
திறமைகள் ( நூல் எழுதுதல், நூலுக்கு உரை எழுதுதல், நூலினைப் பதிப்பித்தல், சித்த மருத்துவம்
செய்தல் என்று இன்ன பிற) சொல்லப்பட்டுள்ளன.
பொதுமை நெறி
என்ற பகுதியில், வள்ளலாரின் மேலே சொன்ன கொள்கைகளுக்கு, விளக்கம்
தருகிறார் அய்யா ஊரன் அடிகள்.
// வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
என்ற பாட்டு வள்ளலாரை அடையாளங் காட்டும் பாட்டு // (இந்நூல் பக்கம் 96)
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471)
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். (3471)
புதுமைத்தலம் வடலூர்
என்ற தலைப்பினுள், வள்ளலார் நிறுவிய, சன்மார்க்க சங்கம்
(1865), சத்திய தருமச்சாலை (1867), சத்தியஞானசபை (1872), சித்திவளாகம் (1870 –
1874 ஆகியவை குறித்தும், இந்த நிறுவனங்களின் இன்றைய நிலைமை குறித்தும் சொல்லப்பட்டுள்ளன.
சத்திய தருமச்சாலை பற்றிக் குறிப்பிடுகையில், அங்குள்ள ‘அணையா அடுப்பு’ பற்றி குறிப்பிட்டே
ஆகவேண்டும்.
// வள்ளற்பெருமான் அன்று ஏற்றிய அணையா
அடுப்பு 147 ஆண்டுகளாக இன்றும் அணையாது எரிந்து வருகிறது. நூறாயிரக் கணக்கான ஏழை மக்களின்
எரியும் வயிற்றைக் குளிரச் செய்து வருகிறது. பசித்தீயை அவித்து வருகிறது // (இந்நூல் பக்கம் 123)
சமரசவேதம்
இந்நூலின் இறுதியாக வள்ளலாரின் படைப்புகள் பற்றிய சிறு குறிப்புகளைக்
காணலாம். கீழே இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள திருஅருட்பா பாடல்கள் சில.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே. (3269)
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே. (3269)
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. (4091)
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. (4091)
முடிவுரை:
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றிய சுருக்கமான வரலாறு மற்றும்
அவருடைய சமரச சன்மார்க்க நெறிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்நூல்., எளிமையான
நடையில் அமைந்துள்ளது. இந்த நூலினைப் படித்தவுடன் வடலூர் செல்ல வேண்டும் என்ற விருப்பம்
எனக்குள் ஏற்பட்டுள்ளது. போய் வரவேண்டும்.
(நூலின் முன்பக்க அட்டை)
(நூலின் முன்பக்க அட்டை)
(நூலின் பின்பக்க அட்டை)
நூலின் பெயர்: புரட்சிதுறவி வள்ளலார்
ஆசிரியர்: ஊரன் அடிகள்
நூலின் பக்கங்கள்; 168 விலை: ரூ100/= ஐந்தாம் பதிப்பு
17.01.2014
நூல் வெளியீடு: சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், தபால்பெட்டி
எண்.2 மனை எண் 64, முருகேசன் சாலை, என்.எல்.சி. ஆபிசர்ஸ் நகர், வடலூர் – 607 303, கடலூர்
மாவட்டம் தொலைபேசி 04142 259382 செல் – 9443729881
தங்களின் தனிப்பாணியில் இதுவும் ஓர் அருமையான படைப்பு. அற்புதமான தகவல்கள் பலவும் திரட்டிக் கொடுத்துச் சிறப்பித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் அன்புள்ள V.G.K. அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.
Deleteநூலின் பின்புற அட்டைப்படத்தில் உள்ள ஊரன் அடிகளார் அவர்களை நானும் பார்த்துள்ளதுபோலத் தோன்றுகிறது.
ReplyDeleteபுரட்சித்துறவி வள்ளலார் பற்றிய நூல் அறிமுகம் மிகவும் அருமை. மீண்டும் என் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா. அவர் திருச்சி மாவட்டத்துக்காரர், திருச்சியில் பணிபுரிந்தவர் என்பதால் அடிகளாரை நீங்கள் பார்த்து இருக்கலாம்.
Deleteஉங்கள் வலை தளத்துக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறேன்..
ReplyDeleteஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று கற்றுக் கொண்ட திருப்தி ஏற்படத் தான் செய்கிறது. நன்றி!
எழுத்தாளர் ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteமிகப் பெரிய மாகன் அவரைப் பற்றிய நூல் அதை எழுதிய ஊரன் அடிகள் பற்றி அறிந்திருந்தாலும் தங்கள் பதிவின் மூலம் அறியாதவற்றையும் அறிந்து கொண்டோம்.
ReplyDeleteநாங்கள் வள்ளலாரைப் போற்றி வணங்குபவர்கள். அருமையான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Deleteநல்லதொரு நூல் அறிமுகம்! விரிவான தகவல்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவள்ளலார் கொள்கைகள் பற்ற் படித்தேன் அவரது கொள்கைகள் என்று அறியாமலேயே பலவற்றையும் கடை பிடித்து வருகிறோம் பலவற்றை பதிவுகளில் எழுதியும் இருக்கிறேன் . என் மச்சினன் நெய்வேலியில் இருந்தபோது அங்கிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் அவருக்காக எழுப்பப்பட்டுள்ள இடத்தையும்( கோவில்?)வடலூரில் பார்த்திருக்கிறோம் ஆனால் அங்கு போனதில்லை. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுமெனும் பாடல் என் மனதைக் கவர்ந்த ஒன்று.
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteநெய்வேலியிலிருந்து வெகு அருகில் இருந்தாலும், அந்த வழியே பலமுறை சென்றிருந்தாலும் ஏனோ வடலூரில் இருக்கும் வள்ளலார் அமைத்த இடங்களுக்குச் சென்றதில்லை. புத்தகம் பற்றிய உங்கள் குறிப்புகள் படித்ததும் செல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteநண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. வடலூருக்கு ஒருநாள் சென்று வரலாம் என்று இருக்கிறேன்.
Deleteஊரன் அடிகள் எழுதிய ‘புரட்சித்துறவி வள்ளலார்’ என்ற நூலிலிருந்து
ReplyDeleteவள்ளலார் பற்றிய தகவல்களை சுருக்கமாக ஆனால் சிறப்பாக தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
வடலூருக்கு அருகில் உள்ள விருத்தாசலத்தை சேர்ந்தவன் என்பதால் அவரைப் பற்றி அறிவேன். அவரைப்பற்றி மேலும் அறிய திரு ம.போ.சி அவர்கள் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலையும் படித்துப்பாருங்கள்.
வள்ளலாருடைய காலத்தில் அவருடைய கொள்கைகளை ஒரு சிலர் எதிர்த்ததன் காரணமாக ‘கடை விரித்தேன்.கொள்வாரில்லை.கட்டிவிட்டேன்’ என்று அவர் சொல்லும்படி ஆனது துரதிர்ஷ்டமே!