இன்று (16.05.2016) சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்கும் நாள். காலை
வழக்கம்போல 5 மணிக்கு எழுந்து விட்டேன். வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தால் நசநசவென்று
மழை. நேற்று இரவிலிருந்தே பெய்து கொண்டு இருப்பது தரையில் இருந்த மழை ஈரத்தை வைத்து
தெரிந்து கொள்ள முடிந்தது. சரிதான்., இன்று ஓட்டு போட்டாற் போலத்தான் என்று நினைத்துக்
கொண்டேன்.
மழையோ மழை:
ஓட்டு போடுவதற்கு முன்னர், வீட்டிற்கு தேவையான பால் போன்ற சில பொருட்கள்
வாங்க வேண்டி இருந்ததால், எனது TVS-50 யில் வெளியே சென்றேன். கடைத் தெருவில் மக்கள்
நடமாட்டமும், வாகனங்களும் அதிகம் இல்லை. மெயின் ரோட்டில் இருந்த இரண்டு பள்ளிகளில்
காலை ஏழரை மணிக்கெல்லாம் வாக்களிக்க குடை பிடித்தபடி நடந்தும், ஆட்டோவில் வந்தவர்களையும்
காண முடிந்தது. கடை வீதியில், பல கடைகள், ஹோட்டல்கள் மூடியே கிடந்தன. நாங்கள் இருக்கும்
புறநகர் பகுதியில், நாளை கடை கிடையாது, கிடையாது என்று சொல்லியே நேற்று நிறையபேர் கல்லா
கட்டினார்கள். இன்று காலை ஒரு சின்ன டிபன் செண்டர் மட்டும் திறந்திருந்தது. அங்கு நல்ல
கும்பல். இட்லி, வடை, பொங்கல் என்று வியாபாரம் அமர்க்களப் பட்டு கிடந்தது. நான் எங்களுக்குத்
தேவையான டிபன் வாங்கிக் கொண்டு வழியில் ஆவின் பூத்தில் பால் வாங்கிக் கொண்டு திரும்பினேன்.
(முன்பெல்லாம் தேர்தல் என்றால் ஓட்டல்களில் கட்சிக்காரர்களையும், அரசு அதிகாரிகளையும்
நிறைய காணலாம். வியாபாரமும் அமோகமாக இருக்கும். இப்போது எல்லாமே போயிற்று. எனவே பலரும்
கடைகளைத் திறக்க வில்லை) மழை தூறல் இருக்க
இருக்க அதிகமாகிக் கொண்டே இருந்தது. நனைந்தபடியே வீடு திரும்பினேன்.
நானும் ஓட்டு போட்டேன்:
ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
மழை பெய்து கொண்டுதான் இருந்தது. மழை கொஞ்சம் விட்டதும் எனது மனைவியை எனது மகன் அவருடைய
பைக்கில் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றார். சீக்கிரமே ஓட்டு போட்டு விட்டு திரும்பி
விட்டார்கள். மழையின் காரணமாக வாக்குச்சாவடியில் கும்பல் இல்லையாம். எனவே சீக்கிரம்
போகச் சொன்னார்கள். நான் எனது TVS-50 யில் புறப்பட்டுச் சென்றேன். திடீரென்று மழை அதிகரித்ததால்
நனைய வேண்டியதாயிற்று.
வாக்குச்சாவடிக்குப் போய்தான் எங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள்,
சின்னங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. போன தடவை தேர்தல் நாளன்று நல்ல வெயில்.
க்யூவில் அதிக நேரம் நிற்க வேண்டியதாயிற்று. இந்த தடவை மழை. இத்தனை நாளும் பெய்யாத
கோடை மழை இன்று பெய்வதும் நிற்பதுமாக இருந்தது. எனவே வாக்குச் சாவடியில் கும்பல் அதிகம்
இல்லை. எனவே போனோமா வந்தோமா என்று ஓட்டு போடும் கடமை சீக்கிரமே முடிந்து விட்டது.
மதியத்திற்குப் பிறகு மழை இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
எனவே வாக்குச் சாவடியில் நல்ல கும்பல் என்று சொன்னார்கள்.
வித்தியாசமான தேர்தல்:
முன்பெல்லாம் கட்சி வேறுபாடின்றி, வயதானவர்களை, உடல் ஊனமுற்றவர்களை,
முடியாதவர்களை, ஒவ்வொரு கட்சியினரும் காரிலோ, ஆட்டோவிலோ வாக்குச் சாவடிக்கு கூட்டி
வருவார்கள். இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளால் இந்த வாகன உதவியை கட்சிக்காரர்கள்
யாரும் செய்வதில்லை. வசதி உள்ளவர்கள் அவரவர் சொந்த வாகனத்திலோ அல்லது கைக்காசு செலவு
செய்தோ வந்து செல்கின்றனர். எல்லோரும் ஓட்டு போட வேண்டும் என்கிறார்கள். ஆனால் வசதி
இல்லாத முடியாதவர்கள் பலர் இதனாலேயே ஓட்டு போட வருவதில்லை. எனவே இது மாதிரியான முடியாதவர்கள்
ஓட்டுப் போட வசதியாக தேர்தல் ஆணையமே வாகன வசதி செய்து தரவேண்டும். அல்லது இந்த கட்டுப்பாட்டை
தளர்த்த வேண்டும்.
வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது, படம் எடுக்கக்
கூடாது என்றெல்லாம் நம்மைப் போன்றவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள். ஆனால் பல முக்கிய
பிரமுகர்கள் ஓட்டு போட வரும்போது , வாக்குச் சாவடிக்குள் வீடியோ கேமரா மேன் உட்பட பலரும்
வாக்குச்சாவடிக்குள் இருந்ததை டீவி சானல்களில் காண முடிந்தது.
ஜாதி, மத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் மாநிலமாக நமது தமிழ்நாடு
மாறி வருவது கண்கூடு. இப்பேர்பட்ட நேரத்தில் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்போடு சத்தமில்லாமல்,
ஒரு வித்தியாசமான சட்டமன்ற தேர்தல் – 2016
ஐ நடத்திக் காட்டிய, தமிழ்நாடு தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி I.A.S அவர்கள் பாராட்டுதலுக்கு
உரியவர். இந்தத் தேர்தலில் கோடிக் கணக்கில் பணப்புழக்கம் என்பது தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில்
போலீஸ் இல்லை என்பதைக் காட்டுகிறது. உதாரணத்திற்கு, எட்டு கண்டெய்னர்களில், ஐந்தை விட்டு
விட்டு, மூன்றை மட்டும் பிடித்தது மற்றும் அரவாக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தேர்தல்
தள்ளி வைப்பு போன்றவற்றை சொல்லலாம்..
சரியாக இன்றைய பொழுதை அலசி எழுதியுள்ளீர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டீர்கள் என்பதை சொல்லவே இல்லையே..... ஹாஹாஹா
ReplyDeleteஇப்பொழுது இருந்த தமிழ் மணம் கருத்துரை இட்டதும் காணவில்லை பிறகு வருகிறேன்
Deleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. யாருக்கு ஓட்டு போட்டோம் என்று வெளியில் சொல்லக் கூடாது. தமிழ்மணத்தில் இணைப்பதிலும், வாக்கு அளிப்பதிலும் அவ்வப்போது ஒரே பிரச்சினையாக இருக்கிறது.
Deleteஇந்த முறையும் அருமையாகவும் அமைதியாகவும் நடந்த தேர்தல் என்றே நாம் இதனைச் சொல்ல வேண்டும்.
ReplyDeleteஇன்று மட்டும் அடாது மழை பெய்தாலும் விடாது நம்மால் மிகச் சுலபமாக வோட் அளிக்க முடிந்துள்ளது.
ஓரளவு பெரு மழை நின்றபின், தூரல் மட்டும் இருக்கும் போது, மதியம் 1 மணிக்குக் கிளம்பி நடந்தேபோய், நானும் என் மனைவியும் வோட் பதிவு செய்துவிட்டு, 1.30 மணிக்குள் வீட்டுக்கு நடந்தே திரும்பி வந்து விட்டோம்.
மிகப்பெரியதோர் ஜனநாயக நாட்டில் இவ்வாறு மிக அமைதியான முறையில் நடக்கும் இந்தத் தேர்தல் ஏற்பாடுகளை நாம் மிகவும் பாராட்டத்தான் வேண்டும்.
பகிர்வுக்கு நன்றிகள், சார். - அன்புடன் VGK
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொல்வது போல அருமையான தேர்தல்தான். ராஜேஷ் லக்கானியை பாராட்ட வேண்டும். இந்த தேர்தல் முறையிலும்,சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நீங்களும் உங்கள் மனைவியும் இந்திய ஜனநாயகத்திற்கு செய்ய வேண்டிய மரியாதையைச் செய்து விட்டீர்கள். நன்றி.
Deleteஎல்லா இடத்திலேயும் நல்ல மழை... மகிழ்ச்சியாக உள்ளது... அப்படியென்றால் இன்றைய பொழுது இனிதாக சென்றிருக்கிறது ?
ReplyDeleteஆம் நண்பரே! கோடை வெய்யிலிலே குளிர்விக்க வந்த கோடைமழை. மகிழ்ச்சிதான்.
Deleteவணக்கம் ஐயா. நலமா? தொடர்ந்து வலைப்பக்கம் வரமுடியாத சூழல்..
ReplyDeleteவெயிலில் மக்களை வாட்டாமல் மழை வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது..
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஃபேஸ்புக் பக்கம் அதிக நேரம் செலவழித்தாலும், அவ்வப்போது வலைப் பக்கமும் வாருங்கள்.உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ப்ளாக்கர்தான் நல்லது.
Deleteஓட்டுச்சாவடிக்குள் அனுசரிக்கப்படும் கட்டுப்பாடு மக்களுக்கு மட்டுமே, பிரபலங்களுக்கு அல்ல என்பது சற்றே நெருடலான செய்தி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். ஆளுக்கு தகுந்த மாதிரி கட்டுப்பாடு.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபணநாயகத்திற்கு இடமளிக்காமல்...தாங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியது கண்டு மகிழ்ச்சி. வாக்களிப்பதற்காகவே வெளிநாடுகளிலிருந்து பல தமிழர்கள் வருகை புரிந்திருந்தார்கள். மணமுடித்த கையோடு வாக்களித்த தம்பதிகள் இதையெல்லாம் பார்க்கும் போது பெருமையாகவே உள்ளது.
ஆனால் பணப்பட்டுவாடா செய்ததற்காக... (இரண்டு) தொகுதிகளில்...!? தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை எண்ணுகின்ற பொழுது தமிழ்நாட்டின் நிலையை எண்ணி தலைகுணிய வேண்டியுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் அதிகாரி திருமிகு.ராஜேஷ் லக்கானி I.A.S தலைமையில் நல்லபடியாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் – 2016.
அன்னாருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்...!
நன்றி.
த.ம. 2
பல சுவையான தகவல்களைத் தந்த ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி. உங்கள் தொடர் ஒன்றை நான் இன்னும் தொடர முடியாமல் இருக்கிறேன். மன்னிக்கவும். ஒரே சமயம் எல்லாவற்றையும் உட்கார்ந்து படித்து விடலாம் என்று இருக்கிறேன்.
Deleteமழையில் தேர்தல்...
ReplyDeleteஎங்கள் ஊரில் நேத்து மழை இல்லை
நானும் எனது கடைமை ஆற்றினேன்...
நண்பர் அஜய் சுனில்குமார் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் ஊரின் பெயரான Thozhicode - ( கன்னியாகுமரி மாவட்டம்) என்பதனை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லவும். உங்கள் ஊர் பற்றிய தகவலை கூகிளில் தேடினால் சரியாக கிடைக்கவில்லை. கூகிள் மேப்பில் தேங்காபட்டினம் - கருங்கல் ரோடு என்று மட்டுமே வருகிறது. எனவே ‘எங்கள் ஊர்’ என்ற தலைப்பில் உங்கள் ஊர் பற்றிய ஒரு பதிவினை எழுதவும். தகவலையும் தெரிவிக்கவும். உங்கள் புண்ணியத்தில் கூகிளில் அவ்வூர் இடம் பெறட்டும்.
Deleteதிருச்சியில் மத்தியப் பேரூந்து நிலையம் அருகில் காலை ஏழு மணிக்கு முன்பாக காஃபி கிடைப்பதே அரிது. அதுவும் தேர்தல் நேரத்தில் காலையில் காஃபி இல்லை யென்றால் சிரமமாய் இல்லையா. ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்துகுள்ளானது பற்றிப் படித்தது நினைவில் மழை நேரத்தில் ஸ்கூட்டியில் பயணமா. கவனம் தேவை ஐயா
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் இரண்டிலும் விடிய,விடிய காபி, டீ ஸ்டால்கள் உண்டு. நாங்கள் இருக்கும் கே.கே.நகர் (புறநகர்) பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை உண்டு. நாங்கள் காலை அல்லது மாலை 24 மணிநேரமும் வீட்டில் ஆவின் பால் இருக்கும்படி தேவைக்கு தகுந்தவாறு வாங்கி ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்வோம்.
Deleteஎன்னுடைய உடல்நிலை பற்றிய அன்பான விசாரிப்புக்கு நன்றி. முதல் விபத்து எனது TVS 50 XL இலில் நான் ஓட்டிச் செல்லும்போதும், இரண்டாவது, மற்றும் மூன்றாவது விபத்து எனது மகளின் ஸ்கூட்டியை நான் எடுத்து ஓட்டிய போதும் ஏற்பட்டன. காலில்தான் பிரச்சினை. இறைவன் அருளால் இப்போது நலம். இப்போது வண்டியை எடுத்துக் கொண்டு டவுன் பக்கம் செல்வதில்லை. எங்கு சென்றாலும் பஸ் அல்லது ஆட்டோதான். இருப்பினும்,பால், தயிர், மளிகை சாமான் வாங்க மட்டும், அதுவும் எங்கள் பகுதிக்குள் மட்டும் எனது TVS 50 XL இல் சைக்கிள் என்னை முந்தி விடும் வேகத்தில் மெதுவாகவே செல்வேன்.
வாக்கு போட சென்றதை கண் முன்னே காட்சி ஆக்கி விட்டீர்கள்.
ReplyDeleteஇங்கும் மழை பெய்து கொண்டே இருந்தது. 100 சதவீத வாக்கு என்பது சாத்தியம் ஆக வேண்டும் என்றால் விதி முறைகளை கொஞ்சம் மாற்றினால் தான் உண்டு. அவர் அவர் குடியிருப்பின் அருகில் ஓட்டு அளிக்கும் இடம் இருக்க வேண்டும். வயது முதிர்ந்தோர், நோய் வாய்பட்டவர்களிடம் வீட்டுக்கே வந்து வாக்குகளை சேகரிக்கலாம். வெளியூரில் ஓட்டு இருப்பவர்கள் போகமுடியவில்லை என்றால் உள்ளூரில் ஓட்டு அளிக்க அனுமதிக்க வேண்டும் . அப்படி என்றால் 100 சதவீத வாக்கு சாத்தியம்.
மேடம் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்களது யோசனைகளை அப்படியே நானும் ஆமோதிக்கிறேன்.
Deleteஎங்கள் பகுதியில் மழை இல்லை! மக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் ஓட்டளித்தார்கள். பணப்பட்டுவாடா சில தேர்தல்களாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு கடிவாளம் போட்டால் முடிவுகள் மாறும்.
ReplyDeleteஎன்ன? உங்கள் ஊர் பக்கம் ( நத்தம் (பொன்னேரி) கோடை மழையே இல்லையா? அடுத்த மழை வருகிறது. நண்பர் தளி சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநானும் நேற்று காலையில் முதல் ஆளாய் நின்று எனது வாக்குச் சாவடியில் எனது வாக்கை அளித்தேன்! தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அதிகாரம் தராத வரையில் அது பல் இல்லாத பாம்பு போலத்தான். வெறும் அறிக்கைகளையும் சட்ட திட்டங்களையும் வெளியிடமுடியுமே அன்றி நேரடி நடவடிக்கை எடுக்கமுடியாது.
ReplyDeleteவங்காள தேசத்தில் இருப்பது போல் தேர்தல் நடக்க இருக்கும் நாளுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே ஆளுகின்ற அரசு பதவியை விட்டு இறங்கி தேர்தல் ஆணையம் பொறுப்பை ஏற்றால் பணம் கொடுத்து வாக்கை பெறுவதையும், அடி தடி அராஜகங்களையும் அறவே ஒழித்து உண்மையான, நேர்மையான தேர்தலை நடத்தலாம்.
அய்யா V.N.S அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Delete// தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அதிகாரம் தராத வரையில் அது பல் இல்லாத பாம்பு போலத்தான். //
அருமையான வாசகம் ஒன்றைச் சொன்னீர்கள், அய்யா.
//யாருக்கு ஓட்டு போட்டோம் என்று வெளியில் சொல்லக் கூடாது. //
ReplyDeleteசொல்ல வேண்டாம்...
டைப் செய்துவிடுங்கள்!!!
உங்கள் கருத்துரையைப் படித்தவுடன் சிரித்து விட்டேன். மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.
Deleteஉங்களைப் போலவே நானும் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன்.
ReplyDeleteத ம 4
நன்றி நண்பரே!
Deleteஇங்கும் மழை தான். மழை விட்ட நேரமாகப் பார்த்து வாக்களித்து வந்துவிட்டேன்.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஎனக்கு இங்கே ஓட்டு இல்லை. மனைவிக்கு இங்கே ஓட்டு உண்டு என்பதால் நானும் சென்றிருந்தேன். சில கட்சிகள் வாக்குச்சாவடிக்கு முதியவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள் - எந்த வித கொடியும் இல்லாமல் - சொந்த செலவில் சென்றது போல சொல்லவும் என்றும் சொன்னார்கள்! :)
ReplyDeleteமழை காரணமாக நிறைய வாக்குச் சாவடிகள் காலியாகவே இருந்தது.
சீனியர் சிட்டிசன்கள் பற்றிய தகவலைச் சொன்ன நண்பருக்கு நன்றி.
Deleteஅருமையான அலசல்
ReplyDeleteசிறந்த பதிவு
கவிஞருக்கு நன்றி.
Deleteகேரளத்திலும் அதே நாள்தான் ஓட்டு போட்டு முடிவும் வந்தாச்சு. எங்கள் ஊரில் அவ்வப்போது கோடை மழை பெய்யத் தொடங்கிவிட்டதுதான். அன்று மழை இல்லை...தமிழ்நாட்டுத் தேர்தல் இம்முறை வித்தியாசமாகத்தான் இருந்ததாகத் தெரிகிறது.
ReplyDeleteகீதா: நான் போடும் போது மழை இல்லை. முந்தைய தினம் பெய்தது. ஓட்டுப் போட்டு முடிந்து பயணம் மேற்கொண்டதும் மழை ஆங்க்கானே பெய்தது ஆனால் தூறிக் கொண்டேதான். எனவே வெயிலின் கடுமை இல்லாமல் பயணம்.
இம்முறை தேர்தலுக்கு முன் பல காமெடிகள் அதன் பின் அமைதியாக நடந்தது அந்தக் கண்டெய்னர் மர்மம்தான் இன்னும் என்ன என்று தெரியவில்லை....
நண்பர்கள் இருவருக்கும் நன்றி. தேர்தல்தான் முடிந்து விட்டதே. கண்டெயினர் பற்றி இனி யாரும் பேச மாட்டார்கள்.
ReplyDelete