Monday, 22 February 2016

காரைக்குடி – மணிமண்டபங்களும் புத்தகத் திருவிழாவும் (2016)



எத்தனையோ தடவை காரைக்குடி போயிருக்கிறேன். ஆனால் கம்பன் மணிமண்டபம், கண்ணதாசன் மணிமண்டபம் இரண்டும் போனதில்லை. ஒவ்வொருமுறையும் நேரமின்மை காரணமாக அந்த மண்டபங்களுக்கு செல்வது முடியாமல் போய்விடும். அண்மையில், முன்னணி  வலைப்பதிவர் சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி. என்ற ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். சரி, இந்த வாரம் வெளியூர்ப் பயணமாக காரைக்குடி சென்று வருவோம், அப்படியே இந்த மண்டபங்களையும் பார்த்து விடுவோம் என்று, நேற்று (21.02.16 -  ஞாயிறு) அங்கு சென்று வந்தேன்.
                  (படம் – மேலே – நன்றி : http://honeylaksh.blogspot.in/2016/02/2016.html )

கண்ணதாசன் மணிமண்டபம்:

நேற்று காலை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பி புதுக்கோட்டை சென்றேன். அங்கே பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் காலை உணவு முடித்துக் கொண்டு காரைக்குடி பயணம் ஆனேன். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கியதும், அருகில் இருந்த கண்ணதாசன் மணிமண்டபம் சென்றேன். நான் கவிஞர் சம்பந்தப்பட்ட நூல்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து இருப்பார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால் மண்டபத்தின் உள்ளே நுழைந்தவுடன், அரசு அலுவலகங்களில் இருப்பது போன்ற இரண்டு பெரிய கண்ணாடிக் கூண்டு அறிவிப்பு பலகைகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் கண்ணதாசன் புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்பு ஸிராக்ஸ் நகல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான் எதிர்பார்த்தபடி சிறப்பாக வேறு ஒன்றும் இல்லை. மண்டபத்தின் மேலே செல்ல அனுமதி இல்லை. மண்டபத்தின் வாசலில் கவியரசரின் சிலை. அங்கே மண்டபத்தில் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. (கீழே)

                                                                                                                                                                   
                                                                                                                                                                   
                                                                                                                                             
'' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' – கவிஞர் கண்ணதாசன் (சுய பிரகடனம்)

புத்தகத் திருவிழா:

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து  சற்று தூரத்தில்தான் (பெரியார் சிலை அருகில்)  புத்தகக் கண்காட்சி. எனவே அங்கிருந்து நடந்தே கம்பன் மணிமண்டபம் சென்றேன். உள்ளே மண்டபத்தின் தெற்கே தமிழ்த்தாய் கோவில் இருந்தது. பூட்டி இருந்தபடியால் அந்த பக்கம் செல்லவில்லை. பின்னர் மண்டபம் சென்றேன். மண்டபம் முழுதும் புத்தக ஸ்டால்கள். மதியவேளை என்பதால் மக்கள் வரவு அதிகம் இல்லை.. வந்ததற்கு அடையாளமாக சில புத்தகங்கள் வாங்கினேன். (தேனம்மையின் நூல்களைத் தேடினேன்; கண்ணில் படவில்லை. திருச்சியில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்) 

இயேசு காவியம் – கவிஞர் கண்ணதாசன்
இந்தியப் பயணங்கள் – ஏ.கே.செட்டியார்
ஓர் இந்திய கிராமத்தின் கதை – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (தமிழில் ச.சரவணன்.)

புத்தகக் கண்காட்சியில் எடுத்த சில படங்கள் இங்கே. (கீழே)

                                                                                                                                                              

                                                                                                                                                             
பழைய புத்தகக் கடை:

மெயின் ரோட்டிலிருந்து கம்பன் மணிமண்டபம் இருக்கும் வீதியில் நுழையும் முன்பு ஒரு பழைய புத்தகக் கடையைப் பார்த்தேன். இரண்டு தம்பிகள் , அந்த பகல் உச்சி வெயிலிலும், கருமமே கண்ணாக புத்தகங்களை வகைப்படுத்திக் கொண்டு இருந்தனர். சற்று வித்தியாசமாக இருந்த அந்த புத்தகக் கடையும் நமது கேமராவுக்குள்.



இன்னொருநாள் சாவகாசமாக இங்கு வந்து சில பழைய நூல்களைத் தேட வேண்டும். ஏனெனில் நாட்டுக்கோட்டைப் பக்கம் புத்தகம் வாசிக்கும் பழமை விரும்பிகள் அதிகம். சில அரிய நூல்கள் இந்த பழைய புத்தகக் கடையில் இருக்கலாம். 

பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் , மதிய உணவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன். 

Saturday, 20 February 2016

மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான்



பணியில் இருக்கும்போது அடிக்கடி காபி குடிப்பது வழக்கம். விருப்ப ஓய்வில் வீட்டுக்கு வந்த போது அப்படி அடிக்கடி இல்லாவிட்டாலும், இடையில் இரண்டு முறையாவது காபி குடிக்க வேண்டும். இல்லா விட்டால் தலைவலிதான். வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒருவித சலிப்பு வந்துவிடும் என்பதால் அவ்வப்போது வெளியே போய் வருவேன். வெளியூர் பயணமும் இதில் அடக்கம். தினமும் முற்பகல் 11 மணி, மீண்டும் மாலை 4 மணி என்று காபி சாப்பிட எங்கள் ஏரியாவின் அருகில் உள்ள, பழையமில் பக்கம் உள்ள பேக்கரிக்கு செல்வது வழக்கம். அங்கு என்னைப் போலவே ’ரிட்டையர்டு’ ஆன நண்பர்களும் வருவார்கள். ரியல் எஸ்ட்டேட் ஆசாமிகளும் கூடி தங்களுக்குள் வியாபாரம் பற்றி பேசிக் கொள்ளுவார்கள். கடையின் முன் விசாலமான இடம், பெரிய அடர்ந்த வேப்பமரம், பக்கத்திலேயே டவுன் பஸ் ஸ்டாப் என்று எல்லோருக்கும் வசதியான இடம்.

மீண்டும் அம்மாதான்

அன்றைக்கும் அப்படித்தான். மாலைநேரம். காபி சாப்பிடப் போனபோது அங்கே எதிரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர். ஒரு காலத்தில் கலைஞரின் தீவிர அனுதாபியாக இருந்தவர்., என்னைப் போல. வழக்கம்போல நலன் விசாரிப்பிற்குப் பின், அவர் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி “ வரும் தேர்தலில் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்பதுதான். நான் உடனே “எனக்குத் தெரிந்தவரை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் அம்மாதான்” என்று சிரித்தபடியே சொன்னேன். “என்ன நான் நினைப்பதையே நீங்களும் சொல்லுகிறீர்கள்” என்றார். மேலும், இங்கு பலரும் அவரிடம் இதேபோல் சொன்னதாகச் சொன்னார். இதுதான் இங்குள்ள எதார்த்தமும் கூட.

கலைஞர் செய்தால் … :

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் ராஜ நடராஜன் அவர்களது பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.

// எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்வை கலைஞர் மீது விழுந்து விட்டது. அது என்னவென்றால், கருணாநிதி எது செய்தாலும் தப்பு; கருணாநிதி செய்தால் ஊழல்; அதே காரியத்தை எம்ஜிஆரோ, ஜெயாவோ செய்தால் தப்பு இல்லை; ஊழல் இல்லை. கருணாநிதி ஆட்சியில் பால் விலையில், பஸ் கட்டணத்தில் கொஞ்சம் ஏற்றினாலும் போதும் எல்லோரும் குதிகுதியென்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதே சமயம் அம்மா ஆட்சியில் எவ்வளவு ஏற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். அது என்னவோ அவர் ராசி அப்படி; இவர் ராசி இப்படி.//

எனவே தேர்தல் திருவிழாவில் எதிர்க்கட்சிகளின் ’செம்பரம்பாக்கம்’ போன்ற பேச்சுக்கள் எடுபடாமல் போகவே வாய்ப்புகள் அதிகம்.  

கலைஞரும் தமிழும் தமிழ்நாடும்:

திராவிட இனம், தமிழ் மொழி என்ற உணர்ச்சி பூர்வமான அடித்தளத்தில் எழுந்ததுதான் தி.மு.க.வின் வரலாறு. அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியை தமிழையும் தமிழர்களையும் உய்விக்க வந்த ஒரு மாமன்னர் போன்று சித்தரித்துக் காட்டினார்கள். அவரும் மேடை தோறும் தமிழ், தமிழ் இனம் என்று வாளை சுழற்றி வந்தார். இன்னும் சிலர் அவர்தான் போனபிறவியில் மனுநீதிச்சோழன் என்றுகூட தட்டினார்கள். இதில் அந்தக்கால தமிழாசிரியர்களின் பங்கு அதிகம். இவ்வாறு நம்பியவர்களை, நட்டாற்றில் விட்டு விட்டு தனது குடும்பநலனே தன் அரசியல் என்று ஆன பிறகு, அவரை விட்டு பலரும் விலகி விட்டனர். ஒவ்வொரு மாவட்டமும், வட்டமும் குறுநில மன்னர்களாகவும், குட்டி ஜமீன்தார்களாகவும் வலம் வந்தது கண்கூடு. கைக்காசைப் போட்டு ஒரு சிங்கிள் டீ குடித்துவிட்டு  கட்சிக்கு வேலைசெய்த, அந்நாளைய தொண்டர்கள் இன்று கட்சியில் இல்லை. தேர்தல் நேரத்தில் விலைபோகும் ஆட்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

பிற கட்சிகள்:

தமிழ்நாட்டில் பிற கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் எதுவுமே வலுவானவை அல்ல. அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தின் செல்வாக்கை வைத்தே கொடிகட்டி பறக்கின்றன. ஆனாலும் தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலை என்றுதான் பார்க்கிறார்கள்.

1967 இற்குப் பிறகு காங்கிரஸ், இடது வலது கம்யூனிஸ்டுகள் திராவிடக் கட்சிகளின் சார்புக் கட்சிகளாகி விட்டன. தமிழ்நாட்டு மக்கள் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை. அந்த வகையில், குதிரையில் ஏறியவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல என்பது போல,  வை.கோபால்சாமி அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு (இந்த செல்வாக்கு கருணாநிதி எதிர்ப்பு அரசியலால் உருவானது) இப்போது கிடையாது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவருக்கும் மக்கள் கொடுத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே மீண்டும் இந்த தமிழகம் இன்னொருமுறை அவர்களுக்கு தங்க தாம்பாளத்தில் ஆரத்தி எடுக்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் தலித் கட்சிகள் எப்போதுமே தங்களுக்குள் ஒன்றுபடாதவர்கள்: ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருப்பதில்லை. பாரதீய ஜனதா என்பது தமிழ்நாட்டில் இன்னொரு நாடார் அமைப்பாக மாறி வருகிறது.

இதனால்தான் பா.ம.க, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், வன்னியர் இல்லாத இடங்களில், தலித்துகளைத் தவிர்த்து பிற ஜாதியினரோடு கைகோர்த்துக் கொள்ள விரும்புகிறார். இதற்காக அடிக்கடி தலித்துகள் மீது தாக்குதல் அரசியல் செய்கிறார். இதனால் தலித் அல்லாதவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்பது அவர் நினைப்பு. (உண்மையில் தமிழ்நாட்டில் சமூக நிலைமை என்பது, தலித்துகள் பிற மக்களைச் சார்ந்தும், மற்றவர்கள் தலித்துகளின் உழைப்பைச் சார்ந்தும்தான் இருக்க வேண்டி உள்ளது. எனவே இவர் பேச்சு அதிகம் எடுபடுவதில்லை. திராவிட இயக்கங்கள் இந்த சமூக நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டன) இதற்குப் பதிலாக இவர் தலித்துகளோடு சேர்ந்து மற்றவர்களையும் அனுசரித்து இருந்தால், அவர் தமிழ்நாட்டில் ஒரு தமிழர் தலைவராக உருவெடுத்து இருப்பார். திராவிட கட்சிகளுக்கு இணையாக அவரது கட்சியும் வளர்ந்து இருக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலையில், எக்காலத்தும் பா.ம.க என்பது ஒரு பிராந்திய கட்சியாகவே இருக்கும் நிலைமைக்கு போய் விட்டது என்பதே உண்மை.

இந்நாளைய வாக்காளர்கள்:

இன்றைய சூழ்நிலையில் நாட்டில் பலபேருக்கு வாக்களிப்பதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. ஒரு வார்டு கவுன்சிலரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் சொன்னது இது. “சார் எனது வார்டு முழுவதும் எனக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது; குறிப்பிட்ட ஒரு சில ஏரியாக்களை மட்டும் வளைத்து விட்டால் போதும்; மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை.” இதுதான் நாடு முழுக்க நடக்கும் அரசியல். நாளைய தேர்தலில் கடைசிநேரத்தில், வாக்காளர்களைக் கவரக்கூடிய விஷயங்களில் பண பலம், அதிகார பலம், ஆள்பலம் எல்லாம் உள்ள ஒரே கட்சி அம்மா கட்சிதான். மேலும் குமாரஸ்வாமி போன்ற கடவுளர்களின் அருளாசியும் உண்டு. இவற்றை எதிர் கொள்வதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. எனவே மீண்டும் அம்மாவே வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.  

எல்லாம் சரிதான். ஆனால் நாம் நினைப்பது எல்லாமே நடந்து விடுகிறதா என்ன? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பார்கள். பார்ப்போம்.

Saturday, 13 February 2016

திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்



                                    (படம் மேலே) நானும் திரு V.G.K. அவர்களும்)

அண்மையில் எனது வலைத்தளத்தில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது பயணங்கள் முடிவதில்லை’ - By VGK  என்ற பதிவு வெளியானது குறித்து  http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html பலருக்கும் மனதில் பல கேள்விகள் உதித்து இருக்கும் போல. ஏனெனில்,

 
அப்பப்பா ..... எவ்வளவு ஜோரா எழுதியிருக்கீங்க. தினமும் உங்க வலைப்பதிவுப் பக்கம் நான் வந்து, ஏதேனும் புதிய பதிவு இருக்கான்னு ஆசையாப் பார்த்து பார்த்து ஏமாந்து போவது என் வழக்கம். இதை ஏன் இங்கே இவரின் வலைத்தளத்தில் வெளியிடச் சொன்னீங்களோ ... எனக்குப் புரியலை. //

// ஸ்ரத்தா, ஸபுரி...Saturday, January 30, 2016 11:29:00 am 

கோபால் சார் பதிவு என்றாலே கலர் ஃபுல்லா ரசனையுடன் படிக்க நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கயும் சூப்பரான படங்கல் சுவாரசியமான பயண அனுபவங்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. நார்த் ஸௌத் எல்லா இடங்கலும் சுத்தி பார்த்து நன்கு எஞ்சாய் பண்ணியிருக்கீங்க. இந்தப்பதிவை ஏன் உங்க பக்கம் ப்போடலே. தமிழ் இளங்கோ சார் அவர்கலுக்கு தான் நன்றி சொல்லனும். விடாப்பிடியாக உங்களை தொடர் பதிவு எழுத வச்சுட்டாங்களே. எங்க படிச்சா என்ன கோபால் சாரின் பதிவுகள் படிக்க எல்லாருமே ஓடி வந்து விடுவோமே. //

என்று கருத்துரை எழுதி இருந்தனர். எனவே இது சம்பந்தமாக சில விளக்கங்கள் இங்கே வெளியிடுவது அவசியமாகிறது.

எனது மின்னஞ்சல்:

இந்த பதிவு விஷயமாக முதன்முதல் அவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதுதான்.

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இப்போது வலைப்பக்கம் நிறையபேர் எழுதுவதில்லை. அதிலும் குறிப்பாக மின்னல் வரிகள் கணேஷ் போன்றோர் வலைப்பக்கம் வருவதே இல்லை. ஃபேஸ்புக் பக்கம் போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே நண்பர்களையும், மூத்த வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதால், அந்த பத்து கேள்விகளூக்கான பதில்களோடு அவசியம் ஒரு பத்துபேரை தொடர் பதிவை எழுத அழைத்து, பயணங்கள் முடிவதில்லை என்ற தொடர் பதிவை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்தி.தமிழ் இளங்கோ 26.01.16 //

திரு V.G.K. அவர்களது கட்டுரை:

அவரும் “பல்வேறு காரணங்களால் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் கொடுக்க எனக்குத் தற்சமயம் விருப்பம் இல்லை” என்று மேலே சொன்ன கட்டுரையையும், அவரது படங்களையும்  எனது வலைத்தளத்தில் வெளியிடச் சொல்லி மின்னஞ்சல் வழியே அனுப்பி வைத்தார். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவே மீண்டும் இதற்கு. நான் ஒரு மின்னஞ்சல்  அனுப்பி வைத்தேன். அது இது (கீழே)

// அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். மின்னஞ்சலையும் இணைப்பையும் இப்போதுதான் பார்த்தேன். இந்த கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவதுதான் முறை. உங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. நான் வெளியிடுவது சரியன்று. நன்றி!
அன்புடன்தி.தமிழ் இளங்கோ
நாள்: 28.01.2016 //
   
எனினும் அவரது அன்பு வேண்டுகோளை என்னால் தட்டிச் செல்ல விரும்பவில்லை: எனவே அவரது பதிவினை இந்த எனது வலைத்தளத்தில் வெளியிட்டேன். மேலும், அவருடைய பதிவு என்பதால், நான் மறுமொழிகள் தர விருப்பப்படவில்லை. அவசியமான, முக்கியமான ஓரிரு பின்னூட்டங்களுக்கு மட்டும் நான் எனது மறுமொழிகளை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அவரும் இன்னும் மறுமொழிகள்  எழுதிக் கொண்டு இருக்கிறார்.

வாசகர்கள் விருப்பம்:

இந்த பதிவினுக்கு இதுவரை மொத்தம் 127 கருத்துரைகளும் (மறுமொழிகளையும் சேர்த்து) 561 பார்வையாளர்களும் வந்துள்ளதாக DASHBOARD இல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. 

எனவே அவர் தொடர்ச்சியாக எழுதா விட்டாலும், அவ்வப்போது அவர் தனது வலைத்தளத்தில் வாசகர்கள் விருப்பத்திற்கு இணங்க எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இங்கே எனது வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட , மேலே சொன்ன அவரது கட்டுரையையும், படங்களையும் , வாசகர்களின் அனைத்து பின்னூட்டங்களையும் மற்றும் மறுமொழிகளையும் அவரது வலைத்தளத்தில் அப்படியே மீண்டும் வெளியிட்டு தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். (ஏனெனில் வலையுலக நண்பர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் இது “வரலாறு முக்கியம் நண்பரே”)

இதுபற்றி நண்பர்கள் யாவரும் தங்களது கருத்துக்களைச் சொல்லலாம்.


 

Thursday, 11 February 2016

ஆண்ட்ராய்ட் போனில் தமிழ் தட்டச்சு



                   ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ - திருமூலர்

எங்கள் வீட்டில் இருப்பது ‘டெஸ்க் டாப்’ கம்ப்யூட்டர். எனவே அதில் தமிழில் தட்டச்சு செய்ய NHM Writer 1.5.1.1 Beta என்ற தமிழ் எழுதியைப் பயன்படுத்தி வருகிறேன். இதிலுள்ள English - Tamil Phonetic முறை எனக்கு எளிதாகவும் இருக்கிறது. ஸ்மார்ட் போன் (ஆண்ட்ராய்ட்) வாங்கிய பிறகு, அதில் தமிழில் தட்டச்சு செய்ய, எந்த தமிழ் எழுதி நல்லது என்று தெரியாமல் இருந்தேன். 

தமிழ் எழுதிகள்:

இது விஷயமாக கூகிளில் தேடியதில், பல்வேறு தமிழ் எழுதிகளைக் காண முடிந்தது. 

Ezhuthani – Tamil Keyboard
Tamil Unicode Keyboard free
Tamil Keyboard
Google Handwriting Input
PaniniKeypad Tamil IME
Sellinam
Tamil Writer
Tamil Pride Tamil Editor
Tanglish – Tamil Editor
Tamil Unicode Font – Donated
Tamil Keyboard Unicode
Type Tamil Offline
Tamil Wrier
Google Indic Keyboard
Types In Tamil
Indic Keyboard

இவற்றைப் பற்றி, நமது வலைப்பதிவு நண்பர்களிடம் விசாரித்ததில், ஒவ்வொருவரும் அவரவர் பயன்படுத்தும் தமிழ் எழுதிகளைத்  தெரிவித்தனர்.

செல்லினம் (Sellinam 4.0.7)


ஒருமுறை புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது ‘செல்லினம்’ (Sellinam)  பற்றி சொன்னார். நான் உடனே கூகிள் தேடலில் போய் Sellinam 2.0.1 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டேன். அது அவ்வளவாக திருப்தி இல்லாத படியினால், மீண்டும் வேறொரு தமிழ் எழுதிக்குப் போனேன். அதுவும் சரிப்பட்டு வராததால், அண்மையில், திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர் செல்போனில், செட்டிங்ஸ் சென்று ஆப்ஸில் செல்லினத்தை (புதியது) தரவிறக்கம் செய்து கொள்ளச் சொன்னார். அவ்வாறே செய்தேன். 


இப்போது எனது ஆண்ட்ராய்டு செல்போனில் இருப்பது Sellinam 4.0.7 என்ற மென்பொருள் ஆகும். இது நன்றாகவே செயல்படுகிறது. இதில் தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்று இரு விசைப்பலகைகள் (KEY BOARD) உள்ளன. 

தமிழ் 99 - இதில் தமிழிலேயே தட்டச்சு செய்யலாம்
முரசு அஞ்சல் - இதில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்யலாம் ( உதாரணம் ammaa > அம்மா)


நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு , Phonetic முறையில் தட்டச்சு செய்யும் முரசு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறேன். இதில் வேண்டும்போது தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமாக விசைப்பலகையை (KEY BOARD) மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போது பெரும்பாலும் நேரம் இருக்கும்போது வலைப்பதிவுகளுக்கான தமிழ் கருத்துரைகளையும் மற்ற குறுஞ்செய்திகளையும் (SMS) எனது செல்போன் மூலமாகவே டைப் செய்து அனுப்புகிறேன். மேலும் இந்த செல்லினத்தை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


// செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப் பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரையிலும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கி உள்ளனர். //  ( நன்றி https://ta.wikipedia.org/s/1b3v )

செல்லினம் பற்றிய மேலும் அதிக விவரங்களுக்கு: http://sellinam.com/archives/406
             
                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)