Saturday, 5 September 2015

கையெழுத்து போடுதல்



எனது முதல் கையெழுத்தை எப்போது போட்டேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை. ஆனாலும் அந்த கையெழுத்தை நான் படித்த உயர்நிலைப் பள்ளியில்தான் போட்டு இருப்பேன் என்று நம்புகிறேன். காரணம், அன்றைய பள்ளி பாடத்திட்டத்தின்படி கடிதம் எழுதுவது எப்படி என்று மாணவர்களுக்கான பயிற்சி தரப்பட்டது, உயர்நிலைப் பள்ளீயில்தான். பெரும்பாலும் விடுமுறைக்கடிதம், நகராட்சி ஆணையருக்கு, போஸ்ட் மாஸ்டருக்கு என்று இருக்கும். ஆரம்பத்தில் புரிந்து கொள்வதற்காக, கையெழுத்து என்றால் உங்கள் பெயரை எழுதுங்கள் என்றே சொல்லி கொடுத்தார்கள். அதற்கப்புறம் இன்றுவரை எத்தனையோ போட்டாகி விட்டது.

வேலைக்கு சேர்ந்தவுடன்:

வேலையில் சேரும்வரை தமிழில்தான் கையெழுத்து போட்டுக் கொண்டு இருந்தேன். வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு இன்றுவரை ஆங்கிலத்தில்தான். எழுத்தராகவும் (CLERK) காசாளராகவும் (CASHIER) மாறி மாறி பணிசெய்தபோது , அரசு சலான்களில் அதிகமாக அடிக்கடி கையெழுத்திட்டு கையெழுத்தே மாறிவிட்டது. எனது பழைய கையெழுத்து இன்றில்லை.

வங்கிக் கணக்கு:

ஒருவர் வங்கிக் கணக்கைத் தொடங்கும்போது ஆரம்பத்தில் எப்படி கையெழுத்து போட்டாரோ அப்படியே கடைசிவரை போடவேண்டும். சிலர் ஆரம்பிக்கும் போது தமிழில் போட்டுவிட்டு இடையிடையே ஆங்கிலத்தில் போடுவார்கள். இதற்காகவே பழைய பேரேடுகளில் (LEDGER) Sign in என்று இருக்கும்  (தமிழ்/ஆங்கிலம் என்று குறிக்க வேண்டும்) ஒருவர் போட்ட கையெழுத்து சரியாக இருக்கிறதா அல்லது போலி கையெழுத்தா என்பதனை அறிய, கையெழுத்து உள்ள ஆவணத்தையும் (செக், கடிதம் போன்றவற்றை) வங்கியில் பெறப்பட்ட மாதிரி கையெழுத்து பதிவேட்டையும் தலைகீழாக வைத்து ஒப்பீடு செய்து கொள்வோம். (இப்போது எல்லாமே கம்ப்யூட்டர் மயம்; கையெழுத்தை கூட ஸ்கேன் செய்து விடுகிறார்கள். உடனுக்குடன் கம்ப்யூட்டர் திரையில் தலைகீழாகவும் பார்த்து ஒப்பீடு செய்து கொள்ளலாம்)

ஜாமீன் மற்றும் சாட்சி கையெழுத்து:

இந்த காலத்தில் மற்றவர்களுக்காக போடும் ஜாமீன் கையெழுத்திலும், சாட்சி கையெழுத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் காலம் அப்படி இருக்கிறது. ஜாமீன் கையெழுத்து போட்டு, தான் கஷ்டப்பட்ட அனுபவத்தை “வாங்கிய கடனுக்கு அழலாம்; வாங்காத கடனுக்குமா அழ வேண்டும்” என்று தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலில் (பக்கம் 372) கவிஞர் கண்ணதாசன் ரொம்பவும் நொந்து போய் சொல்லுகிறார்.

அரசியல்வாதிகள்:

அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் தனிரகம்தான். பதவிக்காக நடத்தப்படும் கையெழுத்து வேட்டைகளை நாம் அடிக்கடி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க சார்பில் ஒருகோடி கையெழுத்து வாங்கி அனுப்பினார்கள். பைண்டு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட அந்த வால்யூம்கள் என்ன ஆயின? இப்போது மதுவிலக்கிற்காக அதே போல ஒருகோடி கையெழுத்து மக்களிடம் வாங்கப் போவதாக ஒரு கட்சியில்  தெரிவித்துள்ளனர். இப்படியாக இப்போது ஆங்காங்கே நிறைய கையெழுத்து இயக்கங்கள்.

இப்போதெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பதவி ஏற்றவுடன் முதல்நாள் முதல் கையெழுத்து எதற்காக இருக்க வேண்டும் என்று, கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். இதற்காகவே ஒரு அப்பா தனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி வைத்து இருக்கிறார் என்கிறார்கள். பார்ப்போம்.



                                        COURTESY: www.coolthings.com/knight-pen-holder/
 

42 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ‘கையெழுத்து போடுதல்’ நமக்கெல்லாம் கை தேர்ந்த கலையென்பதை நாசுக்காக நையாண்டி கலந்து அரசியலுடன் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. நான் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட துவங்கி
    இன்று தமிழுக்கு மாறியுள்ளேன் ஐயா
    இப்பொழுதுதான் வங்கிகளில்,தமிழிலும் கையெழுத்து இட முடிகிறதே
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. அவரவருக்கு விருப்பமான மொழியில் கையெழுத்து போட்டுக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் ஆவணங்களில் நமது பெயரில் குழப்பம் வராமல் இருக்க ஒரே மாதிரி, எப்போதும், எங்கேயும் கையொப்பம் இடுவது நல்லது.

      Delete
  3. ஜாமீன் கையெழுத்தா...? வேண்டவே வேண்டாம்...!

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே! ஜாமீன் கையெழுத்தா என்று நீங்கள் அலறுவது சரிதான். எனக்குள்ளும் அந்த அலறல் பயம் (அனுபவம்) உண்டு.

      Delete
  4. இதுவரை சிந்திக்கப் படாத வித்தியாசமான தலைப்பில் கட்டுரை அருமை

    ReplyDelete
    Replies
    1. கல்வி அதிகாரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  5. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டு வந்தேன். 1980களின் நடுவில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் கையொப்பமிட ஆரம்பித்தேன். எனது ஆங்கிலக் கையெழுத்தை மறந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. நன்றாக நினைவிருக்கிறது. ஏதேனும் வித்யாசமான தலைப்பில் பத்து வரி எழுதி வரும்படி எங்கள் தமிழாசிரியர் எங்களுக்கு வேலை கொடுத்திருந்தார். அப்போ நான் தேர்ந்தெடுத்த தலைப்பு "கையொப்பம்" உங்கள் இந்த தேர்ந்த கட்டுரையை படிக்கும்போது நான் எத்தனை சின்னபிள்ளை தனமாக அன்று எழுதினேன் என்பது நினைவு வந்து சிரிப்பு வருகிறது!! பதிவு அருமை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியை சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.

      Delete
  7. தாங்கள் கையெழுத்து போட்டு போட்டு மாறிவிட்டது. எமக்கு அடிக்கடி கையெழுத்து போடாததால் கையெழுத்து எப்படி போட்டோம் என்பதே மறந்துவிட்டது.. அய்யா

    ReplyDelete
    Replies
    1. தோழரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. இப்போதெல்லாம் ஒருமுறை இட்ட கையெழுத்துப் போல் அடுத்த முறை இருப்பதில்லை.

    ReplyDelete
    Replies

    1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.. வயது ஆக ஆக, அதிலும் கைகளில் நடுக்கம் வந்து விட்டால், நாம் போடும் கையெழுத்து மாறவே செய்யும். ரொம்பவும் மாறினால் கையொப்பத்திற்குப் பதிலாக இடது கட்டை விரல் ரேகையை வைக்க வேண்டியதுதான்.

      Delete
  9. கையெழுத்துப் பற்றிய தங்கள் அலசல் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் பாராட்டுரைக்கு நன்றி.

      Delete
  10. #அப்பா தனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி வைத்து இருக்கிறார் என்கிறார்கள். பார்ப்போம்.#
    பேனா வாங்கலாம் ,அதில் மை ஊற்ற வேண்டியவர்கள் மக்களாச்சே :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கே.ஏ.பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. அந்த அரசியல்வாதிகள் மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்கள்; ஆனால் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்கள்.

      Delete
  11. வித்தியாசமான பதிவு! அருமை!

    வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேறு வ‌ழியில்லை, பாஸ்போர்ட்டில் எப்படி கையெழுத்து இருக்கிறதோ அதையே தான் எல்லா வகையான பத்திரங்களிலும் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். கடைசி வரையிலும்!

    ReplyDelete
    Replies
    1. பாஸ்போர்ட்டை முன்னிட்டு எப்போதும் ஒரே மாதிரியான கையெழுத்து என்பது நல்லதுதான். சகோதரி அவர்களது கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. வணக்கம்
    ஐயா.

    வித்தியாசமான கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

      Delete
  13. கையெழுத்து என்று சிறு தலைப்பை எடுத்துக் கொண்டு விரிவாக அலசிய விதம் அருமை!
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எழுத்தாளர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி.

      Delete
  14. அருமையான தலைப்பெடுத்து, அழகான பதிவெழுதியுள்ளீர்கள் ஐயா ! என்னை மிகவும் கவர்ந்ததால், அப்படியே உங்கள் பதிவினை கவிதையாக்கி, நான் ஒரு பதிவு போட்டுள்ளேன் ! வந்து பாருங்கள் !
    http://psdprasad-tamil.blogspot.in/2015/09/signature.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! எழுதுவதை குறைத்துக் கொள்ளலாம் என்றிருந்த வேளையில் உங்களது ஊக்கமான கவிதை.

      Delete
  15. கையெழுத்து பற்றி அழகான அலசல் கவிதை வடிக்கலாமோ என்று தோன்றுகின்றது ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் சிவநேசன் (தனிமரம்) அவர்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  16. நான் போட்ட முதற்கையெழுத்து, 6 வகுப்புக்கு வேறுபாடசாலைக்குச் செல்ல விண்ணப்பித்த பத்திரத்தில், எங்கள் வகுப்பாசிரியர் சரி பார்த்து ஒப்பமிடச் சொன்ன போது தமிழிலேயே இட்டது.
    இங்கு வந்ததிலிருந்து கையொப்பம் எங்கும் தேவை அதனால் ஒரே மாதிரி போடுகிறேன்.
    ரோமன் எழுத்துக்களே! தமிழில் இடத் தடையில்லை. சிலவகைக் கிறுக்கல்களையே கையொப்பமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் அதைச் செய்யவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி ஒரே மாதிரி கையெழுத்து போடுவதின் நன்மையை வயதான காலத்தில்தான் நீங்கள் உணருவீர்கள். மேலும் நமது கையெழுத்து என்பது அடுத்தவர்களால் போட இயலாதவாறும் நம்மால் மட்டுமே அதனை போட இயலும் வண்ணம் கிறுக்கலாக இருப்பதும் நல்லது.

      Delete
  17. //அப்பா தனது மகனுக்கு ஒரு பேனா வாங்கி வைத்து இருக்கிறார் என்கிறார்கள். பார்ப்போம்//
    அப்படியே வைத்திருக்க வேண்டியது தான்!

    ReplyDelete
    Replies
    1. அந்த பேனாவையும் பின்னாளில் ஏலம் விட்டு காசு பார்க்கலாம்.

      Delete
  18. நானும் பாங்கில் வேலை பார்த்தபொழுது கையெழுத்து மாறிப் போட்டவர்களிடம் (கஸ்டமர்களிடம் )டாம் டூம்...என்று கத்தியிருக்கேன். வி ஆர் எஸ் .வாங்கி 14 வருஷம் ஆச்சு .என் கையெழுத்து
    பத்தி நான் ம்ஹூம்....... நான்பேசமாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வங்கிப் பணியாளராக இருந்தவரா? அந்த வகையில் வி.ஆர்.எஸ் விஷயத்தில் நீங்கள் எனக்கு சீனியர். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. ஜாமீன் கையெழுத்தால் நானும் படாதபாடு பட்டு இருக்கிறேன் நல்லதொரு அலசல்
    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்பொழுதெல்லாம் வங்கிக் கடன், கூட்டுறவு சொசைட்டி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் ஜாமீன் கையெழுத்து போட்டுக் கொள்கிறார்கள்.

      Delete
  20. கையெழுத்து! சிறிது ஆனால் அதில் இருக்கும் அர்த்தங்கள் பல...
    பேங்கில் போடுவதுதான் சில சமயங்களில் படுத்திவிடும்....முதலில் போட்டதற்கும் வருடங்கள் கழித்துப் போடுவதற்கும் வித்தியாசம் வருவதால்..

    சில மாணவர்கள் தங்கள் பெற்றோரின் கையெழுத்தை ரிப்போர்ட் கார்டில், வீட்டுப்பாட புத்தகத்தில், விடுமுறைக் கடிதங்களில், விண்ணப்பத்தில் என்று போடுவது வழக்கம். சில சமயம் கண்டுபிடிப்பதும் கடினம்....

    ஃபோர்ஜரி செய்பவர்கள் எப்படி போடுகின்றார்கள் என்று தெரியவில்லை....நமது கையெழுத்தை பிறர் போடா வண்ணம் வைத்துக் கொள்வது நலமே!

    ReplyDelete
  21. தில்லைக்கது வி.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete