"தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லனஎல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே"
- அபிராமி அந்தாதி (69)
சென்ற புதன்கிழமை
சென்னையிருந்து உறவினரிடமிருந்து ”வியாழக் கிழமை காலை திருக்கடையூரில்
அறுபதாம் கல்யாணம். கோயிலுக்கு வந்து விடுங்கள் “ என்று செய்தி வந்தது. சில
காரணங்களினால், இந்த கல்யாணத்தை அவர்கள் ஒத்தி வைத்து இருந்தார்கள். இப்போது
அவர்கள் ஏதோ சாத்திரத்தை முன்னிட்டு, உடனே நடத்த ஏற்பாடு செய்து விட்டார்கள்.
இந்து மதத்தில்
தம்பதியரில் ஆணுக்கு அறுபது வயது ஆகும்போது “அறுபதாம் கல்யாணம்” என்ற ஒரு சடங்கைச் செய்கிறார்கள். இந்த
கல்யாணத்தை திருக்கடையூரில் செய்வதை விஷேசமாக நினைக்கிறார்கள். திருக்கடையூரில்
உள்ள அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி
சாலையில் உள்ளது. இந்த கோயிலின் இறைவன் பெயர்:
அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
அம்பாள் பெயர்: அபிராமி
திருக்கடையூர்
பயணம்:
நேற்று முந்தினம் (26.12.2013) வியாழக் கிழமை அதிகாலை 2
மணிக்கே நானும் எனது மனைவியும் எழுந்து காலைக் கடன்கள், குளியல் முடித்து விட்டு,
திருச்சி கே கே நகரில் 3 மணிக்கு ஆட்டோ
பிடித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றோம். அங்கிருந்து தஞ்சாவூர்
சென்றோம். மார்கழி என்பதால் சரியான குளிர். அங்கு இருவரும் சூடாக டீ சாப்பிட்டோம்.
பின்னர் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் பிறகு கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை
என்று பஸ்களில் மாறி மாறி சென்றோம். மயிலாடுதுறைக்கு பழைய பஸ் நிலையத்திற்கு நாங்கள்
சென்றபோது காலை ஆறு மணி. திருக்கடையூரில் ஹோட்டல்களில் டிபன் எப்படி இருக்குமோ
என்பதால் மயிலாடுதுறையில் புது பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே மாரியம்மன் கோயிலுக்கு
அருகில் இருந்த ஸ்ரீ ஆரிய பவன் ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து நடைதூரம்தான் புது பஸ் நிலையம். அங்கிருந்து
பஸ்சில் புறப்பட்டு அரைமணி நேரத்தில் திருக்கடையூர் வந்தோம்.
கல்யாணமாம்
கல்யாணம்
:
திருக்கடையூரில்
கோயில் வாசலில் நிறைய வேன்கள், டாக்சிகள். வெளியூரிலிருந்து வந்தவர்கள். மார்கழி
என்பதால் நிறைய அய்யப்ப பக்தர்கள். அவர்களுக்கு இடையில் மாலையும் கழுத்துமாய்
அறுபதாம் கல்யாண மணமக்கள். நிறையபேர் அறுபது ஆனவர்களாகவே தெரியவில்லை.( காரணம்
நவீன மருத்துவம் மற்றும் உடல் - உடை அலங்காரம் போன்றவை ) கோயில் வாசலில் எங்கள் உறவினர்கள்
எங்கிருக்கிறார்கள் என்று செல்போனில் தெரிந்து கொண்டு கோயில் நுழைவு மண்டபம் சென்றோம்.
அவர்கள் புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து
கொண்டோம். மணமக்களுக்கு மாமன்கள் மாலைகள் சாற்றினர்.
முன்னரே செய்த
ஏற்பாட்டின்படி ஒரு குருக்கள் வழிநடத்திச் சென்றார்.
மண்டபம் தாண்டி உள்ளே சென்றோம்.
படம் (மேலே) IMG
2048 கோயிலின் உள்ளே உள்ள தேவஸ்தான
அலுவலகம்
படம் (மேலே) IMG
2032 கோயிலின் உள்ளே கொடிக்கம்பம்.
படம் (மேலே) IMG
2047 கோயிலின் உள்ளே உள்ள நந்தி
படம் (மேலே) IMG
2033 கோயிலின் இரண்டாவது வாயில்
அங்குள்ள
கோபுரவாசலில் பசுமாடு ஒன்றை ஒருவர் ( மாட்டுக்கு சொந்தக்காரர் ) பிடித்துக் கொண்டு
இருந்தார். அங்கு வரும் மணமக்கள் ஒவ்வொருவரும் அந்த மாட்டிற்கு ” கோமாதாபூஜை” செய்து வாழைப் பழம் கொடுக்கின்றனர். மாட்டின்
சொந்தக்காரருக்கு ஒரு தொகை. ( கஜ பூஜையும் செய்வார்கள். நாங்கள் சென்றபோது கோயில் யானை இல்லை. அது இறந்து விட்டது.
இன்னும் கொஞ்ச நாளில் புதுயானை வந்துவிடும் என்றார்கள்) பின்னர் அங்கிருந்து உள்ளே
அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.
படம் (மேலே) IMG
2036 கோயிலில் உள்ள யாளி தூண்கள்
படம் (மேலே) IMG
2039 கோயிலில் உள்ள ஒரு சிலை
நான் கோயிலை
கேமராவில் படம் பிடிக்கும் அவசரத்தில் அவர்களை தொடர்ந்து செல்லாததால் அவர்களை
விட்டு விட்டேன். பின்னர் அந்த கும்பலில் அவர்களைக் கண்டு பிடிப்பதற்குள் போதும்
போதும் என்றாகி விட்டது. அவர்களை கள்ளவாரண பிள்ளையார் சன்னதியில் கண்டேன். சன்னதியில்
செல்போன், கேமரா அனுமதி இல்லை. பின்னர் அங்கிருந்து அபிராமி அம்பாள் சன்னதி.
சன்னதியின் வெளியே வந்தோம். நான்கு சுற்றுப் பிரகார மண்டபத்தில் ஆங்காங்கே
திருமணம் நடத்த தயாராக பூஜைப் பொருட்களோடு
ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, அங்கங்கே திருமணங்கள்
நடைபெற்றுக் கொண்டு இருந்தன. ஒரே புகைமயம். ஒரு திருமணம் நடைபெற்று முடிந்ததும் அடுத்த
தம்பதிக்கு அந்த இடத்தை சினிமா செட்டிங்ஸ் போல ஒழுங்குபடுத்துகிறார்கள்.
படம் (மேலே) IMG
2049 அபிராமி அம்பாள் சன்னதி வாயில்
படம் (மேலே) IMG
2044 தயார்நிலையில் பூஜைப் பொருட்கள்
படம் (மேலே) IMG
2068 ஒரு காட்சி
எங்கள் உறவினரின்
அறுபதாம் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. மணமக்கள் திருக்கடையூரில் அணிந்த மாலையை
மார்க்கண்டேயர் கோயிலில்தான் கழட்ட வேண்டுமாம். எனவே அங்கிருந்து திருமணல்மேடு மார்க்கண்டேயர் கோயில்
சென்றோம்.
படம் (மேலே) IMG
2091 அறிவிப்பு பலகை.1
படம் (மேலே) IMG
2092 அறிவிப்பு பலகை.2
படம் (மேலே) IMG
2093 மார்க்கண்டேயர் கோயில் நுழைவு
கோபுரம்
பின்னர் அங்கிருந்து கிளம்பி தென்பாதி சீர்காழியில் உள்ள வசந்தபவனில்
சாப்பாடு. சென்னை உறவினர்கள் அவர்கள் வேனில் செல்ல, நாங்கள் இருவரும் சீர்காழி – கும்பகோணம் – தஞ்சாவூர் – திருச்சி என்று பஸ்களில் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தோம்.
தலபுராணம்:
திருக்கடையூர்
என்ற இந்த திருத்தலத்தோடு இரண்டு புராணக்கதைகள் உள்ளன. எல்லோரும் அறிந்ததுதான்.
படம் (மேலே) IMG
2025 கோயிலின் இரண்டாவது வாயில்
கோபுரம்
படம் (மேலே) மேற்படி கோபுரம் மேல் உள்ள திருப்பாற்கடல் கடையும் காட்சி
சிற்பங்கள்
படம் (மேலே) மேற்படி கோபுரம் மேல் உள்ள சம்பந்தர் பல்லக்கில் செல்லும் காட்சி
சிற்பங்கள்
அமிர்தம் கடைந்த
கதை: அமுதம் எடுப்பதற்காக அசுரர்களும் தேவர்களும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும்,
மந்திர மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைகின்றனர். ஒரு காரியம்
தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய பிள்ளையார் வணக்கத்தை மறந்து விடுகின்றனர்.
எனவே அமுதம் எடுத்து வைக்கப்பட்ட குடத்தை பிள்ளையார் கடவூர் என்ற இந்த
திருக்கடையூரில் ஒளித்து வைக்கிறார். தேவர்கள் பிள்ளையாரை
வணங்கி அமுதம் உண்ணுகின்றனர். அந்த
குடம் லிங்கமாக மாறி விடுகிறது. எனவே இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர் (அமிர்தம் + கடம் (குடம்
)+ ஈஸ்வரர்)
மார்க்கண்டேயன்
கதை: திருக்கடையூருக்கு அருகில் உள்ள மிருகண்டு என்பவர்க்கு குழந்தையில்லை. அவர்
சிவனை வேண்ட, இறைவன் அருளால் அவர் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு
மார்க்கண்டேயன் என்று பெயர். அவனது விதிப்படி அவன் பதினாறு வயது வரைதாம் வாழ்வான்.
இதனால் ஒவ்வொரு
நாளும் சிவாலயங்கள் சென்று வழிபட்டு வந்தான். மார்க்கண்டேயன்
ஆயுள் முடிந்ததும் எமன் அவனது உயிரை எடுக்க பாசக் கயிற்றை வீசுகிறான். அப்போது
மார்க்கண்டேயன் திருக்கடையூர் ஈசனுக்கு பூசை செய்து கொண்டு இருக்கிறான்.
பாசக்கயிறு ஈசன் மீதும் விழுகிறது. இதனால் வெகுண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைக்க
அவன் மார்க்கண்டேயனை விட்டு ஓடுகிறான். இறைவன் என்றும் பதினாறு வயதினை
மார்க்கண்டேயனுக்கு தருகிறார். திருக்கடையூர்
அருகிலுள்ள திரு மணல்மேல் குடியில் மார்க்கண்டேயருக்கு கோயில் உண்டு.
இந்த இரண்டு
கதைகளிலும் ஆயுள்பலம் சம்பந்தப்பட்டு
இருப்பதால், இந்த கோவிலில் அறுபதாம் கல்யாணம் செய்கிறார்கள்.
சில செய்திகள்:
இந்த கோயிலில்
திருமணம் செய்ய வருபவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.
கோயிலில் திருமண
நிகழ்ச்சிகளை கேமரா, வீடியோ எடுக்கலாம். இறைவன் சன்னதியில் மட்டும் கூடாது.
கோயிலுக்கு வெளியே
தங்குவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. சுத்தமான கட்டணக் கழிப்பிடங்கள் உள்ளன.
இங்கு எல்லாமே
வியாபாரம்தான். எனவே இதற்கென்று இருக்கும் புரோக்கர்களிடம் பணத்தைக் கொடுத்து
விட்டால் எல்லாமே வரிசைக் கிரமமாக நடந்து விடும். அலைய வேண்டியதில்லை.
பெரும்பாலும் காலை
முகூர்த்தங்கள்தான். சூரிய உதயம் முதல் பகல் 12 மணி வரை வெளியூரிலிருந்து வரும்
கல்யாண கும்பல் அதிகமாக இருப்பதால்,
கோயிலில் உள்ள கடவுள்களை சரியாக தரிசனம் செய்ய முடிவதில்லை. பிற்பகல்
மற்றும் மாலை வேளை கோயிலில் கும்பலும், இரைச்சலும் குறைவு. நிதானமாக வழிபடலாம்.
மூத்த
வலைப்பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் அறுபதாம் கல்யாணம் பற்றி தனது பதிவு ஒன்றில் தரும் தகவல்கள்.
அறுபதாம் கல்யாணம் என்று சொல்லப்படும் ’சஷ்டியப்த பூர்த்தி’போன்ற ஒருசில விழாக்களைப்பற்றி அடியேன் கேள்விப்பட்டுள்ள ஒருசில
சிறப்புச் செய்திகளைத் தங்கள் தகவலுக்காக இங்கு
பகிர்ந்து கொள்கிறேன்:
1] 59 வயதுகள் பூர்த்தியாகி 60ல் அடியெடுத்து வைக்கும்
நாளில் செய்துகொள்வது “உக்ரஹ சாந்தி” என்றதொரு ஹோமம்.
அடுத்த
ஓராண்டு அரோக்யத்துடன் இருந்து
சஷ்டியப்த பூர்த்தி நல்லபடியாக நடக்க எண்ணி,
சிறப்பு வழிபாடுகளுடன் வேண்டிக்கொண்டு செய்யும் ஓர் விசேஷ ஹோமம்
இது.
பிறந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் [பிறந்த அதே தமிழ் வருஷம், அதே தமிழ் மாதம், அதே ஜன்ம நக்ஷத்திரம் சேரும் நன்னாளில்] செய்துகொள்ளும் விசேஷ பூஜைகளும் ஹோமங்களுமே, சஷ்டியப்த பூர்த்தி எனப்படுவது.
ஒரு
மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்தெந்த
கிரஹங்கள் எந்தெந்த ராசியில் உள்ளனவோ, அதே ராசிகளில் அதே கிரஹங்கள் மீண்டும் வந்து அமர்வது என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடிய அபூர்வமானதோர் நிகழ்வாகும்.
இதுபோன்ற
அபூர்வமான கிரஹ அமைப்புகள் தான் சஷ்டியப்த பூர்த்தி நன்னாளின் தனிச்சிறப்பாகும்.
பிறந்த
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில், ஒரே ஒருமுறை மட்டும் தான் இத்தகைய அபூர்வ நிகழ்வினை மீண்டும் சந்திப்பதற்க்கான வாய்ப்பு அமையும். [அதுவும்
பிராப்தம் இருந்தால் மட்டுமே]
{குழந்தை பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகத்தின் இராசிக்கட்டங்களில் இந்த கிரஹங்கள் எந்தெந்த ராசியில்
அன்று அமைந்திருந்தன என்பது தெளிவாகக்
குறிப்பிடப்பட்டிருக்கும். அதே கிரஹங்கள் மீண்டும் அதே ராசிகளில் அப்படியே அமர்ந்திருப்பது, இந்த சஷ்டியப்தபூர்த்தி என்று கொண்டாடிடும் நாளில் மட்டுமே தான். }
மீண்டும்
ஒருமுறை இந்த நிகழ்வினைச்
சந்திக்கும் வாய்ப்பினைப் பெற விரும்பினால்,
120 ஆண்டுகளுக்கு
மேல் அவர் இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும். ;)))))