திருச்சி புறநகர்
பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள்
குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பேராசிரியர் நல்லுசாமி
மற்றும் இவரது மனைவி பேராசிரியர் ஜானகி நல்லுசாமி குடும்பத்தினர். இவர்கள் இருவருமே
சமூக நல்லெண்ணம் மிக்கவர்கள். அரசு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்த காலத்தில்
நிறைய பேருக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தவர்கள். புதுக்கோட்டையில் இருந்ததால்,
அந்த மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கும் அறிமுகம் ஆனவர்கள். மேலும் பேராசிரியர் ஜானகி நல்லுசாமி
அவர்கள் ராணி அண்ணா மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலியில் முன்னாள் முதல்வராக பணிபுரிந்தவர்.
பேராசிரியர்களான தம்பதியர் இருவரும் பணி ஓய்வு பெற்ற பின்னரும் இப்போதும் பல சமுக நலக்
காரியங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள்.
இவர்களின் ஒரே அன்பு மகள் N.லாவண்யா (04.02.1978 – 16.06.2011 – Senior Manager, Canara Bank,
Mumbai – Ex.Asst Manager, MTNL, Mumbai) அவர்களது 7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு
( சென்றவாரம் - 16.06.2018 – சனிக்கிழமை), திருச்சி ஏர்போர்ட் அருகே அமைந்துள்ள, அன்னை
ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இவர்கள் குடும்பம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு என்னையும்
அழைத்து இருந்தார்கள். நானும் அங்கு சென்று இருந்தேன். இந்த அன்னை ஆசிரமத்தில் பேராசிரியர் ஜானகி அவர்கள் நிர்வாகக்
குழு உறுப்பினர் (Excutive Committee Member) ஆகவும் இருந்து வருகிறார்.
அன்னை ஆசிரமம்
படம் மேலே அன்னை ஆசிரமம் முகப்பு தோற்றம்
படங்கள் மேலே அன்னை வீரம்மாள் நினைவு மணிமண்டபம்
திருச்சி மாவட்டம்
திருப்பராய்த்துறையில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அன்னை வீரம்மாள் (1924
– 2006) அவர்கள், திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகள்
பணிபுரிந்தவர்; திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு 2 குழந்தைகளுக்குத்
தாயான இவர், 57 ஆண்டுகள் இல்லறத் துறவியாக தனது வாழ்நாளின் இறுதிவரை, எளிய வெள்ளை உடை
உடுத்தி, எளிய உணவு உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து பிறர்நலத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்
கொண்டார். 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்கள்
நலச் சங்கத்தை நிறுவினார்கள். இன்று இச்சங்கத்தின் அங்கமாக 1. திக்கற்ற குழந்தைகள்
இல்லம் 2.ராஜீவ்காந்தி தேசீய குழந்தைகள் காப்பகம் (Creche) 3. டாக்டர் கமலம்மா பாலகிருஷ்ணன்
முதியோர் இல்லம் 4.அன்னை மேல்நிலைப்பள்ளி 5.எம்.எம்..தொடக்கப் பள்ளி 6.ஓய்வூதியர் இல்லம்
7.பணிபுரியும் மகளிர் விடுதி 8.கணினி பயிற்சி மையம் 9.தையற் பயிற்சி மையம் 10. Palliative Care
Centre ஆகியவை ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு, பொதுநல நோக்கத்துடன், சிறப்பாக இயங்கி
வருகின்றன. அன்னை வீரம்மாள் மறைந்தவுடன் அவரது விருப்பத்திற்கிணங்க அவரின் உடல் திருச்சி
மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
முதியோர் இல்லத்தில்
படம் மேலே ஆசிரமத்தின் எதிரே உள்ள முதியோர் இல்லம் வழிகாட்டும் அறிவிப்பு பலகை
படம் மேலே முதியோர் இல்லத்தின் நுழைவாயிலின் உள்ளே உள்ள முற்றம்
அன்னை ஆசிரமத்தின்
எதிரே தனி கட்டிடத்தில் இருக்கும் முதியோர் இல்லம் சென்று, அங்கிருந்த ஹாலில் தங்கி
இருந்தோம். முன்னதாக ஆசிரமம் வழக்கப்படி ஹாலில் இறை வழிபாடு செய்யப்பட்டது. பின்னர்
முதியோர்களுக்கு என இருக்கும் சாப்பாட்டு மண்டபத்தில் (Dining Hall) அவர்களுக்கு மதிய
உணவு வழங்கப்பட்டது.
படம் மேலே முதியோர் இல்லத்திற்கான பொது ஹால்
படம் மேலே ஹாலில் உள்ள இறைவழிபாடு இடம்
படம் மேலே ஹாலில் பேராசிரியர் நல்லுசாமி குடும்பத்தினர்
படம் மேலே ஹாலில் முதியோர் இல்லத்து முதியவர்கள்
படங்கள் மேலே ஹாலில் இறை வழிபாடு
குழந்தைகள் இல்லத்தில்
அடுத்து ஆசிரம
வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மான்ய உதவி பெறும் அன்னை ஆசிரமம் குழந்தகள் இல்லம்.
சென்றோம். அங்கும் இறை வழிபாடு மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
படம் மேலே குழந்தைகள் இல்லம்
படங்கள் மேலே மதிய உணவுக்கு முன் நடைபெற்ற இறை வழிபாடு
பின்னர் இறுதியாக
வந்திருந்த விருந்தினர்களான எங்களுக்கும் அன்னை ஆசிரம சாப்பாட்டு மண்டபத்தில்
(Dining Hall) மதிய உணவு வழங்கப்பட்டது. எல்லோரிடமும் விடை பெற்று விட்டு வந்தோம்.