Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டும் மாற்று கருத்தும்நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப் போல, எந்த ஒன்றினைப் பற்றியும், இருவேறு கருத்துகள் உண்டாவது இயல்பு. அது போலவே ஜல்லிக்கட்டு விஷயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று இருவேறு நிலைகள் உண்டு. இதன் எதிரொலி, இப்போது கூகிளில் ‘நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பவரா இல்லையா’ என்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

எனது பதிவும் எதிர்ப்பும்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எனது நிலை என்பது, எதிர்ப்பு நிலைதான். (ஜல்லிக்கட்டு ஆதரவாளர் இல்லை) எனவே ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், சென்ற ஆண்டு (2016), ’ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வைத்தேன். எனது கருத்துரைப் பெட்டியில் (Comments Box) ஆதரவு, எதிர்ப்பு என்று நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்; நானும் அவற்றினுக்கு எனது நிலையில் மறுமொழிகளைத் தந்து இருந்தேன்.

பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் எதிலும் நான் சேரவில்லை. அவர்கள் ஜல்லிக்கட்டில் காளையை துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள், மனிதர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைகிறார்கள், கை கால் ஊனமாகிறார்கள் மரணமடைகிறார்கள் என்ற ஆதங்கம் காரணமாக எதிர்க்கிறோம். இதில் என் போன்றவர்களது நிலைப்பாட்டில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். 
 
ஜல்லிக்கட்டு விஷயத்தில், சென்ற ஆண்டு இல்லாத அரசியல் பரபரப்பு , ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு இந்த ஆண்டில் அதிகம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம், மறியல் என்று செய்திகள் வருகின்றன.(இந்நேரம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்)

இந்த சூழ்நிலையில் எனது ஃபேஸ்புக்கிலும், நான் இணைந்துள்ள இரு வாட்ஸ்அப் குழுக்களிலும் மேற்படி எனது பதிவினை அண்மையில் பகிர்ந்தேன். இது விஷயமாக, ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர், எனது பதிவிற்கு, அவரது நண்பர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொன்னதாகவும், நீங்கள் இப்படி எழுதலாமா என்றும் ஆதங்கப்பட்டு என்னுடன் செல்போனில் பேசினார். நான் அவருக்கு மறுமொழியாக, உங்கள் நண்பர் எனது தளத்தில் கருத்துரை தந்தால் நான் விளக்கம் தருகிறேன் என்று சொல்லி விட்டு, ’இப்போது ஜல்லிக்கட்டுக்கு விரோதமாக யாரேனும் கருத்து சொன்னால், அவரைத் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கும் போக்கு வந்துள்ளது’ என்றும் தெரிவித்தேன். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நண்பர் ஒருவது வலைப்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில்,

// நம்மில் இரு வலைப்பதிவர்களே மாறுபட்ட கருத்து சொல்கிறார்கள்... இதில் ஒருவர் தமிழ் இலக்கியம் (M.A) படித்தவர்... மற்றுமொருவர் ஊருக்கேற்ப குசும்புக்காரர்... இருவரும் பாவம்... இவர்களை திருத்த முடியாது..//

என்ற கருத்து பதியப்பட்டு இருந்தது. (இதில் தவறு ஏதும் இல்லை; அவர் கருத்தை அவர் சொல்லுகிறார்) இருந்தாலும் அவர் கருத்துப்படி, தமிழ் இலக்கியம் படித்தால் கட்டாயம் ஜல்லிக்கட்டை ஆதரிக்க வேண்டுமா? இல்லையேல் தமிழினத் துரோகி என்ற வரிசையில் வந்து விடுவார்களா?  இதில் மாற்றுக் கருத்து எதுவுமே சொல்லக் கூடாதா? என்பதுதான் எனது சந்தேகம். 

நமது இனம், கலாச்சாரம், பரம்பரை வழக்கம் என்று பலரும் பழைய பாதையிலேயே செல்லும் வேளையில், சிலர் மாற்றுக் கருத்தும் சொல்கிறார்கள் என்பதும் உண்மையே. பல பழைய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் (பரத்தையர் ஒழுக்கம், உடன்கட்டை ஏறுதல், விதவைக் கோலம், முதுமக்கள் தாழி, நரபலி, வெட்சி (ஆநிரை கவர்தல்) போன்றவை) இன்று இல்லாமல் போனதற்கு காரணம் என்னவென்று சொல்வது? காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றம்தானே.

வரலாற்றுப் பக்கம் பார்வையைத் திருப்பினால் சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, புத்தர், கலிலியோ, இராமாநுஜர், ராஜாராம் மோகன்ராய், பெரியார் ஈ.வெ.ரா என்று பல மாற்றுக்கருத்து சிந்தனையாளர்களைச் சொல்லலாம்.

இன்றைய போராட்டம்:

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகா மாநில பெங்களூருவிலிருந்து தமிழர்களைத் துரத்தி அடித்த போது வராத தமிழர் வீரம், ஜாதி ஆணவக் கொலைகள் நடந்தபோது வராத எல்லோரும் தமிழரே என்ற உணர்வு,  டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் போது வராத மாணவர் என்ற உணர்வு, அண்மையில் பணமதிப்பு இழப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களின் மார்பகங்களின் மீது கைவைத்த கயமைத்தனத்தின் போது வராத ரோஷம் – இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு வந்து இருப்பது எதனால் என்பது, இதன் பின்புலம் என்ன என்ற கேள்வியில்தான் முடியும். உண்மையில் இப்போது, ஜல்லிக்கட்டை வைத்து, மக்களுக்கான மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை  திசை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.


Monday, 9 January 2017

பத்து ரூபாய் நாணயம்செல்போனில் சமூக வலைத் தளங்கள், வந்தாலும் வந்தன வதந்திகள் தான் வேகமாக பரவுகின்றன. போகிற போக்கில் யாராவது எதையாவது கிளப்பி விடுகிறார்கள்; அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாமல் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது அந்த பொய், மெய் போலவே ஆகி விடுகிறது. அந்த வகையில் இப்போது நம்நாட்டில் ’பத்து ரூபாய் நாணயம்’ செல்லாது என்ற வதந்தியினால் படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது. 

பஸ்சில் கடைகளில்:

ஒவ்வொரு பஸ்சிலும் நடத்துநர்களின் இப்போதைய புலம்பல் என்பது இதுதான்.

“ சார், யாரைப் பார்த்தாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று வாங்க மாட்டேன் என்கிறார்கள். டெப்போவில் எங்களுக்கு சில்லறை தரும்போது, பத்து ரூபாய் நாணயங்களைத் தந்து விட்டு, நீங்கள் வாங்காதீர்கள் என்று சொல்லுகிறார்கள்” 

ஒருநாள் பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண்மணியிடம் சில்லரை இல்லாத படியினால், நடத்துநர், ஒரு பத்து ரூபாய் நாணயத்தை எப்படியோ கொடுத்து விட்டார்; அந்த அம்மா புலம்பிக் கொண்டே இருந்தார். இரக்கப்பட்ட பயணிகளில் ஒருவர், பத்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்து அதனை வாங்கிக் கொண்டார்.

ஒருமுறை ஒரு டீக் கடையில், ஒருவர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்கிய கடைக்காரர் அதில் உள்ள கோடுகளை எண்ணிப் பார்த்து வாங்கிக் கொண்டார். அதாவது 10 கோடுகள் இருந்தால் நல்ல நாணயமாம்; 15 கோடுகள் இருந்தால் கள்ள நாணயமாம்; (இது தவறு) 

வங்கிகளில் ஏன் வாங்குவதில்லை?

அண்மையில் ஒரு செய்தியைப் படித்தேன்

// இதுதொடர்பாக வணிகர்களி டம் கேட்டபோது, "நாணயங்களைப் பராமரிப்பது மிக கடினம். ரூபாய் தாள்களாக இருந்தால் கவுண்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். ஆனால், நாணயங்களை அப்படி கணக்கிட முடியாது. மேலும், இந்த நாணயங்களை, வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால் வேறு வழியில்லாமல் நாங்களும் வாங்குவதில்லை" என்றனர்.// 

( நன்றி: தி இந்து (தமிழ்) தேதி டிசம்பர்,30,2016)

இங்கே இந்த வியாபாரிகள், தங்கள் சவுகரியத்திற்காக யார் மீது பழி போடுகிறார்கள் என்று பாருங்கள். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நாணயங்களை புழக்கத்தில் விடுவதுதான் வங்கிகளின் பணி. வங்கி வாடிக்கையாளர்கள் அந்த நாணயங்களை, மீண்டும் கணக்கில் கட்டினாலும், மீண்டும் புழக்கத்தில் விட வேண்டும். அதிக நாணயங்களை வங்கியில் இருப்பு வைத்து இருந்தால், ஏன் புழக்கத்தில் விடவில்லை என்ற கேள்வி வரும். செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே வங்கிகளில் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் என்பது பொருந்தும்.. ஆனால் யாரோ கிளப்பிய வதந்திக்கு அதிகாரப் பூர்வமான நாணயங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளூதல் என்பது நாணயப் புழக்கத்திற்கு தீர்வாகாது.

பத்து ரூபாய் நாணயம் செல்லும்

சம்பந்தபட்ட அதிகாரிகள் பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்த பிறகும் வாங்க மறுக்கிறார்கள். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும், ஐம்பது பைசா நாணயங்களை வாங்க மறுக்கும் நிலையில், கூடுதலாக இந்த பிரச்சினை

இது பற்றி இணைய தளங்களில் தேடியபோது, 10 ரூபாய் நாணயம் வெளியான அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, அது வெவ்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டது தெரிய வருகிறது.

(படம் மேலே) 1969 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1970 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 1972 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2005 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2006 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2008 இல் வெளியிடப்பட்டது.

(படம் மேலே) 2009 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2010 இல் வெளியிடப்பட்டவை.

(படம் மேலே) 2011 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2012 இல் வெளியிடப்பட்டவை 

(படம் மேலே) 2014 இல் வெளியிடப்பட்டது. 

(படம் மேலே) 2015 இல் வெளியிடப்பட்டவை

                                     (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

Thursday, 5 January 2017

ஃபேஸ்புக்கில் சின்னம்மா என்றதும் எனக்கு வந்த எச்சரிக்கை மணிபெரும்பாலும் என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரது பதிவுகளையும், செல்போனில் அல்லது கம்ப்யூட்டரில் பார்த்து விட்டு லைக் கொடுத்துவிடுவது எனது வழக்கம். சிலசமயம் கருத்துரைகளையும் எழுதுவேன். வலைப்பதிவர், நண்பர் எங்கள் ப்ளாக்  (http://engalblog.blogspot.com ) ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் அவர்கள் ஃபேஸ்புக்கிலும் எனக்கு நண்பர். அன்றும் (27 டிசம்பர் 2016) அப்படித்தான். அவர் ஒரு பதிவை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அதற்கு மற்றவர்களும் நானும் கருத்து தெரிவித்து இருந்தோம். அந்த பதிவு கீழே.

xxxxx
Sriram Balasubramaniam
இன்னுமா அந்த டிவி சேனல் பெயரை மாற்ற யாருமே முன்மொழியவில்லை!
LikeShow more reactions
Comments
Sridhar Ponneri Sasi TV?
Srinivasagopalan Madhavan That name is the 'TRUMP'(not US Presi) cardSee Translation
Bhanumathy Venkateswaran அதானே..!!!
Thamizh Elango T சின்னம்மா டி.வி
xxxx

மேற்படி சின்னம்மா டி.வி” என்ற எனது கருத்துரையை சாதாரணமாகத்தான் எழுதினேன். பின்னர் அதனை மறந்தும் விட்டேன். ஆனால் அடுத்தநாள் எனக்கு ஃபேஸ்புக்கிலிருந்து ஒரு செய்தி வந்து இருந்தது. இதற்கு முன்னர் இதுமாதிரி எனக்கு எந்த அறிவிப்பும் வந்தது கிடையாது. அந்த அறிவிப்பு இங்கே 

Privacy tip: who can see when you like or comment on a post
Thamizh Elango, you recently commented on a post by Sriram Balasubramaniam. We want to make sure you know who can see when you interact with posts. To learn more, check out Privacy Basics.
—The Facebook Privacy Team

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு பரிசோதனை முயற்சியாக எனது கருத்துரையை நண்பரின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து நீக்கினேன்; உடனே இந்த அறிவிப்பு மறைந்து விட்டது. நான் மறுபடியும் ”சின்னம்மா டி.வி” என்று அதே கருத்துரையை அதே பதிவினில் எழுதியுள்ளேன். இம்முறை எந்த அறிவிப்பும் எனக்கு வரவில்லை. 

இந்த அறிவிப்பு, சாதாரணமான ஒன்றா அல்லது எச்சரிக்கை மணியா அல்லது இதே போன்று எல்லோருக்கும் ஃபேஸ் புக்கிலிருந்து சொல்லி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.