சுமார் 25 வருடங்களுக்கு முன்னர். எப்போதும் போல நான் பணிபுரிந்த வங்கிக்கு எனது வீட்டிலிருந்து மொபெட்டில் சென்று வந்து கொண்டிருந்தேன். திடீரென்று வலதுகால் சுண்டுவிரல் தொடங்கி வலது தோள்பட்டை வரை சிறிது வலியெடுத்தது. எல்லோரும் சதைப்பிடிப்பு , தைலம் தேய்த்தால் சரியாகி விடும் என்று சொன்னார்கள். எனவே தைலம் தேய்த்துக் கொண்டேன். இரண்டொரு நாட்களில் முதுகெலும்பு முழுதும் வலி (முதுகுவலி – Back pain) வர ஆரம்பித்து விட்டது. எனவே வேலைக்கு பஸ்ஸில் செல்ல ஆரம்பித்தேன். அதிகமாக வலியெடுக்க ஆரம்பித்தவுடன் வலி நிவாரண தைலத்தை தேய்த்துக் கொண்டேன். எல்லாம் கொஞ்சநாள் தான்.
முதுகுவலி வந்த
கதை:
ஒருநாள் வங்கியில்
பணிபுரிந்து கொண்டு இருந்தபோது மதியம் இருக்க இருக்க, வலி அதிகமானதோடு, வலது காலை
தூக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எனது கஷ்டத்தைப் பார்த்த என்னோடு
பணிபுரிந்த நண்பர்கள், என்னை
சிறப்பு மருத்துவரான டாக்டர் ஜான் கருப்பையா (ஆர்த்தோ) அவர்களிடம் ஆட்டோ ஒன்றில் அழைத்துச்
சென்றனர். இவர்
திருச்சியில் பிரபலமான நல்ல மருத்துவர்.
மருத்துவ மனையில் வழக்கம்போல
எக்ஸ்ரே முதலான சோதனைகள். எக்ஸ்ரேயில் இடுப்புக்கு மேலே முதுகெலும்பில் சிறிது
விரிசல் இருப்பது தெரிய வந்தது. எனவே டாக்டர் என்னிடம் ” என்றாவது மேலேயிருந்து அல்லது வண்டியில் செல்லும்போது
கீழே விழுந்து விட்டீர்களா?” – என்று கேட்டார். அப்போதுதான் அந்த சம்பவம்
நினைவுக்கு வந்தது.
ஒருநாள் நானும் என்னோடு
பணிபுரிந்த நண்பர் ஒருவரும் எனது
மொபெட்டில் சென்று கொண்டு இருந்தோம். நான் வண்டியை ஓட்டினேன். பின்னிருக்கையில்
அவர் இருந்தார். திருச்சி தெப்பக்குளம் (இது நெரிசலான பகுதி)
பக்கம் கடைவீதியில் வந்து கொண்டு
இருந்தபோது திடீரென குறுக்கே ஒருவர் சாலையைக் கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க
பிரேக் போட்ட போது இருவரும் கீழே விழுந்து விட்டோம். பெரிதாகக் காயம் ஏதும் இல்லை.
நண்பருக்கு ஏற்கனவே இதுபோல் அனுபவம் உண்டு. எனவே அவர் அவரது டாக்டரிடம் காண்பித்து
ஒன்றும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டார். நான் நமக்குத்தான் ஒன்றும் இல்லையே
என்று அசட்டையாக இருந்து விட்டேன். அதன் விளைவு இந்த முதுகுவலி.
சிகிச்சை முறைகள்:
எனது கதையைக் கேட்ட
டாக்டர் ஆறு மாதத்திற்கு வண்டி ஓட்டக் கூடாது, ஆட்டோவில் பயணம் செய்யக் கூடாது – என்று கூடாதுகள் - பட்டியல் ஒன்றைச் சொன்னார்.
மேலும் மாத்திரைகள், ETHNORUB என்ற
தைலம், சுடுநீர் பை (HOT WATER POUCH) ஆகியவற்றை எழுதிக் கொடுத்ததோடு தூங்கும்போது எப்படி தூங்க வேண்டும்
என்றும் சொன்னார். அப்படியும் சரியாகாமல் போனால் ஆபரேஷன் மூலம் முதுகில் இரும்புத்
தகடு (STEEL PLATE ) வைக்க வேண்டி
வரும் என்று எச்சரிக்கை செய்தார்.மேலும் ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார்.
பெரும்பாலும் நான்
எப்போதும் டாக்டர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றக் கூடியவன். எனவே முதுகுவலிக்கு
டாக்டர் ஜான் கருப்பையா அவர்கள் சொன்ன ஆலோசனைகளை அப்படியே பின்பற்றினேன். முதல்
வேலையாக இருசக்கர வண்டி ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்தேன். சரியாக நேரம் தவறாமல்
மருந்துகளை எடுத்துக் கொண்டேன். நகர் மத்தியில் இருந்த, நான் பணிபுரிந்த வங்கிக்கு
பஸ்ஸில் சென்று வந்தேன். என்னோடு பணி புரிந்த துணைநிலை ஊழியர் ஒருவர் தைலம்
தேய்த்து உதவினார். மாலையில் வேலை முடிந்ததும், துணைநிலை ஊழியர்கள்
ஓய்வறையில் எனது நடு முதுகில் மேலிருந்து கீழ் வரை ETHNORUB என்ற தைலத்தை அவர் நன்கு அழுத்தி தேய்த்து விடுவார்.
அப்போது சட்டை, பனியன் இல்லாமல் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு வெற்றுடம்போடு
இருப்பேன். அப்போது அங்கு வரும் சக ஊழியர்கள் என்னை “என்ன பயில்வான் வேலைக்கு
போகிறீர்களா?” என்று
கிண்டல் செய்வார்கள். வீட்டிற்கு வந்ததும் மாலையில் டாக்டர் சொன்னபடி வாங்கிய சுடுநீர் பையில்(HOT WATER
POUCH) மிதமாக வெந்நீர் நிரப்பி ஒத்தடம்
கொடுத்துக் கொண்டேன். இரவில் தூங்கும்போது இரண்டு தலையணைகளை ஒன்றின்மேல் ஒன்று
வைத்து உயரமாக்கிக் கொண்டு, அவற்றின் மேல் கால்களை வைத்துக் கொண்டு தலைக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல் தூங்கினேன்.
எல்லாம் சரியாகி குணமாகிக் கொண்டுதான் வந்தது. ஆனாலும் காலையில் எழுந்தவுடன் நடைப்
பயிற்சி (Walking) செல்லும்போது அதிக தூரம் செல்ல முடியவில்லை.
முதுகிலும் காலிலும் வலி எடுக்க ஆரம்பித்தது.
முதுகு
வலியிருந்து விடுதலை:
ஒருமாதம் கழித்து
டாக்டரை மறுபடியும் சென்று பார்த்தபோது இதனைச் சொன்னேன். அவர் உடனே என்னைப்
பார்த்து கேட்ட முதல் கேள்வி “ உங்களை யார் முதுகுவலியோடு வாக்கிங் போகச்
சொன்னார்கள்?” என்று கேட்டுவிட்டு மறுபடியும் ஒருமாதம்
கழித்து வரச் சொன்னார். நான் வாக்கிங் போவதை நிறுத்திக் கொண்டு மற்றவற்றை
தொடர்ந்தேன். முதுகுவலி போன இடம் தெரியவில்லை. ஒருமாதம் கழித்து டாக்டரிடம்
மூன்றாவது முறை சென்றேன். எக்ஸ்ரே மற்றும் மற்ற சோதனைகள் செய்துவிட்டு நான் முழு
குணம் அடைந்து இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்கு அப்படியே தொடர்ந்து
இருந்துவிட்டு சிகிச்சை முறைகளை நிறுத்திக் கொள்ளச் சொன்னார்.
முதுகு வலிக்காக அப்போது டாக்டரைப்
பார்த்ததுதான். இப்போது எனக்கு வயது அறுபது. கடந்த 25 வருடங்களாக எப்போதும் போல எனது மொபெட்டில்
வெளியே சென்று வந்தேன். இப்போது நான் முதுகுவலியிலிருந்து குணம் அடைந்து விட்டேன்.
மொபெட்டில் செல்வது எங்கள் ஏரியாவோடு சரி. வாக்கிங் அதிகதூரம் செல்வது இல்லை. இப்போதும் நான் தூங்கும்போது
பெரும்பாலும் கால்களுக்கு தலையணை போன்ற எதனையும் வைத்துக்
கொள்வதில்லை. இருந்தாலும் எப்போதாவது (அதிகம் பயணம் செய்தால்) முதுகுவலி எனக்கு
வரும். வெறும் கட்டாந்தரையில் பாய்போட்டு, தலைக்கும் கால்களுக்கும் தலையணை
ஏதுமின்றி மல்லாக்க நீட்டி படுத்து ஓய்வு எடுக்க சரியாகிவிடும்.
( குறிப்பு: எனக்கு
வந்த இந்த முதுகுவலி நீங்கிய அனுபவம், இதேபோல வலி
உள்ள மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம் என்பதால் இந்த பதிவு )
(ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES ”)