ஒரு தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் வரிகள் இவை.
கேள்வி பிறந்தது அன்று – நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
- பாடல் கண்ணதாசன் (படம்: பச்சை விளக்கு)
அதுபோல சுமார் 35 வருடங்களுக்கு முன்னர், எனக்கு தெரியாத
கேள்வி ஒன்றிற்கு இப்போதுதான் சரியான பதில் கிடைத்தது. இந்த விடையைச் சொன்ன, வலைப் பதிவர் ஆசிரியர்
ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்களுக்கு முதலிலேயே நன்றியைச் சொல்லி
விடுகிறேன். விவரம் இதுதான்.
டெபாசிட் சேகரித்தல் (DEPOSIT MOBILIZATION)
என்னதான் விளம்பரம் செய்தாலும், துண்டுப் பிரசுரங்கள்
கொடுத்தாலும், பணம் வைத்து இருப்பவர்கள் வங்கியில் டெபாசிட் செய்ய முன் வர
மாட்டார்கள். அதிலும் சில பெரிய மனிதர்கள் “பூதம் காத்த புதையல்” போல வீட்டிலேயே வைத்து இருப்பார்கள். காரணம் வங்கியில்
டெபாசிட் செய்தால், அரசாங்கம் திடீரென்று எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற
பயம்தான். எனவே அவர்களின் பயத்தினைப் போக்கி, வங்கியில் டெபாசிட் செய்தால், பணம்
பாதுகாப்பாக இருக்கும், நாட்டு மக்களுக்கும் பயன்படும், நாட்டில் புதிய தொழில்கள்
தொடங்க உதவும், வட்டியும் கிடைக்கும் என்று நேரில் போய் சொல்ல வேண்டும். அதாவது
டெபாசிட் பிடிக்க வேண்டும். மேலும் எப்படி எப்படியெல்லாம் பிரித்து, டெபாசிட்
செய்தால ( கூட்டுக் கணக்குகள்) வரி பிடித்தம் இருக்காது என்றும் சொல்வோம்.
வங்கிக்கும் டெபாசிட் சேரும். இதற்கு வங்கியில் அனுமதி உண்டு.
அப்போதுதான் நான் வங்கியில் வேலைக்கு சேர்ந்து
இருந்தேன். (அப்போது வயது 23; இப்போது 60
முடியப் போகிறது) எங்கள் வங்கியிலிருந்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை, வைப்புத் தொகை (FIXED DEPOSITS) திரட்ட (Deposits
mobilization) காரில் கிளம்பினார்கள். அப்போது என்னையும் வரச் சொன்னதால்
நானும் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். எங்கள் வங்கியைச் சுற்றியுள்ள ஊர்களில்
இருக்கும் பெரிய தனக்காரர்களைக் கண்டு, எங்கள் வங்கியில் டெபாஸிட் செய்யச் சொல்லி
ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.
கேள்வி இதுதான்
(Picture
thanks to www.kathukutti.com/tamil/aathichudi
)
அன்று முதல் அந்த கேள்விக்கான பதிலை கேட்டு தெரிந்து கொள்ள
முயன்றேன். ஆலம்பட்டி புதூர் வழியே செல்லும் போதும், இந்த ”ஙப்
போல் வளை” என்ற ஆத்திச்சூடி
வரியைப் படிக்கும் போதும், இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும்.
பதில் கிடைத்தது:
ஆத்திச்சூடிக்கு பொருள் சொன்னவர்கள் கூட “ ங – போல வளைய
வேண்டும்” என்று
முடித்துக் கொண்டார்கள். ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்ததில் திருப்தியான
பதில் இல்லை. அபிதான சிந்தாமணியிலும் இதனைப் பற்றி ஒன்றும் இல்லை. கூகிளில் தேடிப்
பார்த்தும் ஒன்றும் ஆகவில்லை. அண்மையில் வலைப் பதிவர் ஆசிரியர்
ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) அவர்கள் பதிவு ஒன்றினை படித்தேன். ” யுரேகா” (EUREKA) என்று கத்த வேண்டும் போலிருந்தது.
ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக எந்த கேள்விக்கு விடை தேடி அலைந்தேனோ, அந்த கேள்விக்கு
அவர் தனது பதிவினில், விளக்கமாக அற்புதமாகச் சொல்லி இருந்தார். அவருக்கு மீண்டும்
மனதார எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைப் பதிவர் ஆசிரியர் ஜோசப் விஜூ
(ஊமைக் கனவுகள்) சொன்ன விளக்கம் இதுதான்.
// மெய்யின் வரிசையில், இருக்கும், ‘ங்‘ எனும் எழுத்தைத் தவிர, அதன் உயிர்மெய் வடிவங்கள்
பெற்று வரும் சொல்
ஏதும் தமிழில் இல்லை.
ங, ஙா, ஙி, ஙீ,…….
இந்த வரிசையில் இடம் பெற்ற எந்த எழுத்துகளைக் கொண்ட தமிழ்ச்சொல்
ஒன்றையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
( அங்ஙனம், இங்ஙனம், என்னும் சொற்களில் ங எனும்
எழுத்து வருகிறதே என்கிறீர்களா..? அது ஙனமா..கனமா என்ற விவாதமும் நடந்து வருகிறது என்பதால்
அதை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை )
ஆனால் இந்த ‘ங்‘ எனும் எழுத்தை விட்டுத் தமிழின் இயக்கத்தைக்
கற்பனை செய்ய முடியவில்லை. அவ்வளவு முக்கியமான எழுத்துத்தான் இது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்த ஒரு மெய்யெழுத்து மட்டுமே
பயன்படுகிறது. ஆனால் இதை விட்டுவிட முடியாததால், எந்தப்பயன்பாடும் இல்லாத, இதன் உயிர்மெய்
வரிசையையும், ( ங, ஙா, ஙி, ஙீ,……. ) சேர்த்து, இந்த ஓர் எழுத்திற்காகத் தமிழ் தனது எழுத்து
வரிசையில் வைத்திருக்கிறது.
அப்படியானால் “ங் போல் வளை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்? ஙப்போல் வளை என்றது ஏன்
என்கிறீர்களா?
முதல்காரணம்,
பழைய வாசிப்பில், ஙப்போல் இன்றிருப்பதை, ங் போல் என்றும்
படிக்கலாம். புள்ளி இருக்காது.
இரண்டாவது காரணம், தமிழ் மரபில் மெய்யெழுத்துகள், சொல்லுக்கு முதலில் வராது.
மூன்றாவது காரணம்,
அவ்வையார், உயிர்மெய்வரிசையில்
ஆத்திச்சூடியை அமைக்கும் போது, ங எனும் எழுத்தில் தொடங்கும் சொல்லைக் காணாமல், அவ்வெழுத்தையே பயன்படுத்தி விட்டது.
திருக்குறளில் சுற்றந்தழால், என்றொரு அதிகாரம் உள்ளது. அதன் பொருள், ஒருவன் தன்னுடைய சுற்றத்தை
நீங்காமல் தன்னோடு வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுதல்.
இதைத்தானே “ங்“ செய்து கொண்டிருக்கிறது?
“ஙப்போல் வளை“
ங எனும் ஓரெழுத்து தனது பயன்பாட்டினால், தன்னைச் சார்ந்த உயிர்
மெய்களையும் தன்னுடன் வைத்துக் காப்பது போல, ஒருவன் தன்னுடைய சுற்றத்தை அணைத்துக் காக்க
வேண்டும்.//
ஆசிரியர் அவர்கள் எழுதிய பதிவு இது
“கேள்வி பிறந்தது அன்று – நல்ல பதில் கிடைத்தது
இன்று” – என்ற பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப்
இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)
(ALL
PICTURES THANKS TO “GOOGLE”)