படம் (மேலே) மாயாபஜார் படத்தில் எஸ்.வி.ரங்கராவ்
நாம் எப்போதும் சலிக்காமல் செய்யும் வேலை சாப்பிடுவதுதான். அதிலும் எதைச்
சாப்பிடுவது என்ற விஷயத்தில் மட்டும் சலிப்பு வரும். பல வீட்டில் ஒலிக்கும் குரல் இன்றைக்கும் இட்லிதானா? தோசைதானா? என்பதுதான்.
மற்றபடி மூன்று வேளையும் சாப்பிடும் தொழில் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும்
ஒருவர்
ஒருவேளையில் எவ்வளவு சாப்பிட முடியும்? எவ்வளவு பெரிய ஆளாக
இருந்தாலும், அவன் நாட்டுக்கே ராஜாவாக அல்லது மந்திரியாகவே இருந்தாலும்,
பணக்காரனாக இருந்தாலும் அல்ல்து ஏழையாக இருந்தாலும் அல்லது பிச்சைக்காரனாகவே
இருந்தாலும் வயிறு நிரம்பச் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட முடியாது. உணவின்
நிறம்,மணம்,ருசி என்பது அவரவர் வசதிக்கு ஏற்ப தொண்டை வரைக்கும்தான். அப்புறம் ஒன்றும் இல்லை. இதற்குத்தான் இவ்வளவு அடிதடி
சமாச்சாரம்.
இதே போலத்தான் ஆடை அணியும் விஷயமும். யாராக இருந்தாலும் அணிவது இரண்டு
ஆடைகள்தாம். ஒன்று மேலாடை. இன்னொன்று கீழாடை. ஆடைகளின் வடிவ அமைப்பினில்,
தரத்தினில், விலையினில் மட்டும்தான் வேறுபாடு. விழாக் காலங்களில் எல்லா தரப்பு
மக்களும் ஆடை எடுத்து மகிழ்கிறார்கள். ஆடை அணிவதில் மகிழ்ச்சி என்பது
எல்லோருக்கும் ஒன்றுதான்.
மற்ற விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் இதே போலத்தான் உள்ளது. மாட
மாளிகையில் இருப்பவன் பஞ்சணையில் அடையும் சுகமும், குடிசையில் இருப்பவன் பாயினில்
அடையும் சுகமும் எல்லாம் ஒன்றுதான். நுகர்வு (CONSUMPTION ) என்ற அடிப்படியில் நுகர்வோர் (CONSUMER) பயன்பாடு என்பது ஒரே
நிலைதான்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை
( - பாடல்:
வாலி படம்: படகோட்டி ( 1964 )
ஒரு நோய் வந்தாலும் அது இருப்பவனுக்கு ஒரு மாதிரியாக அல்லது இல்லாதவனுக்கு
இன்னொரு விதமாக வருவதில்லை. உதாரணத்திற்கு தலைவலி! வசதி படைத்தவனுக்கு ஒரு
மாதிரியாகவும் சாதாரணமானவனுக்கு ஒரு மாதிரியாகவும் தலை வலிப்பதில்லை. இயற்கையின்
அளவுகோல் ஒரே வலிதான். அவரவர் எடுக்கும் மருத்துவம் மட்டுமே அவரவர் வசதிக்கு ஏற்ப
மாறுபடுகிறது.
ஒருமுறை சேர மன்னன் அரசபைக்குச் சென்றிருந்த கம்பர், அங்கே நடந்த உரையாடலில்
அவனிடம் “ உலகத்தில் கவலையே இல்லாத மனிதர் எவருமில்லை. விஷயம்
பெரிதாயினும்,சிறிதாயினும், அதனால் விளையும் காரியமாகிய துக்கமோ அவரவர் தன்மையை
நோக்குமிடத்தில் ஒரே தன்மைதான்” என்று சொல்லி ஒரு பாடலையும்
பாடினார்.
பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும்
பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பில்லை என்பார்க்கும் முள்
குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே.
பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பில்லை என்பார்க்கும் முள்
குத்தித் தைத்த
காலுக்குத் தோல் செருப்பு இல்லை என்பார்க்கும்
கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும்
விசனம் ஒன்றே.
( தனிப்பாடல் - கம்பர் பாடியது )
இப்பாடலில் கவலை என்று வரும்போது எல்லோருடைய மனநிலையும் ஒன்றுதான் என்கிறார்
கம்பர்.. ஒருவனுக்கு பாலுக்கு சர்க்கரை
இல்லையே என்று கவலை. இன்னொருவனுக்கு கூழுக்கு உப்பு இல்லையே என்று கவலை.
ஆகக்கூடி கவலை என்பது இல்லை என்ற ஒன்றுதான்.
எனவே கோடி கோடியாக சேர்த்து வைத்து இருந்தாலும் அவன் அனுபவிப்பது குறிப்பிட்ட
அளவுதான். இதனைத்தான் நாட்டுப்புற பழமொழி ஒன்றில் “ விளக்கெண்ணையை உடம்பு முழுக்க
பூசிக் கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் “ என்றார்கள். இரண்டு அரசியல்வாதிகள். பெயர் வேண்டாம். கோடிக்
கணக்கில் சொத்து. ஊரெங்கும் அடுத்தவர் பெயரில் வாங்கப்பட்ட இடங்கள். அத்தனை
இருந்தும் அவர்களால் ஆசையாக எதனையும் சாப்பிட முடியாது. வயிற்றில் தீராத புண். இறுதிக்காலம் வரை இப்படியே இருந்தார்கள். எத்தனை
இடங்களை வளைத்துப் போட்டாலும் அவன் தினமும் படுத்துக் கிடப்பதும் இறந்தபின்
படுக்கப் போவதும் ஆறடி நிலம்தான். அவன் எரிக்கப்பட்டால் அதுவும் இல்லை. அவன்
சேர்த்த அனைத்தும் உறவினர்களுக்கோ அல்லது பினாமிகளுக்கோ போய் விடுகின்றது. அப்புறம்
யாரும் அவனை நினைப்பதில்லை.
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம என்று பெயரிட்டு
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு
ஒழிந்தார்களே
--- திருமூலர் (திருமந்திரம்)
இவை எல்லாவற்றையும் உணர்ந்த சங்ககாலப் புலவர் நக்கீரனார் என்பவர் ஒரு பாடலை
பாடி வைத்து இருக்கிறார். ” அதனால் செல்வத்தின் பயன் என்பது ஈதல். நாம் மட்டுமே அனுபவிப்போம்
என்று கட்டி காத்தாலும் நம்மிடமே இருந்தும் நாம் அனுபவிக்காமலேயே நாம் இழப்பவை
அதிகம் “ என்கிறார்.
(அதற்காக எல்லாவற்றையும் யாரோ ஒருவனிடம் கொடுத்துவிட்டு போய் விட முடியுமா?
என்று கேட்காதீர்கள். தர்மம் செய்வதிலும் சில தர்மங்கள் இருக்கின்றன.)
படம் (மேலே) திருவிளையாடல் படத்தில்
சிவனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நக்கீரனாக ஏ.பி.நாகராஜன்
தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. - புறநானூறு 189
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. - புறநானூறு 189
( பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் )
இதன் விளக்கம்:
இந்த உலகம் முழுவதையும் ஒரு குடையின்கீழ் ஆளும் மன்னவனும், இரவு பகல் பாராது
தூக்கமின்றி கடுமையான விலங்குகளை வேட்டையாடும் ஒருவனும் உண்பது நாழிச் சோறு;
உடுப்பது மேலாடை கீழாடை என்ற இரண்டே ஆகும். மற்றவைகளும் இதே போலத்தான். நாமே
எல்லாவற்றையும் அனுபவிப்போம் என்றாலும் நமக்கு அனுபவிக்க கிடைக்காமல் போய்
விடுவதும் உண்டு. எனவே செல்வத்தின் பயன் என்பது ஈதல் ஆகும்.
(நாழி – என்பது (ஒரு படி) அந்தக் கால அளவு. ”குப்பனுக்கு தேவை சட்டிச்
சோறு” என்று ஒரு பழமொழியும் உண்டு. இப்போது ஒரு வேளைச் சாப்பாடு
(FULL MEALS) என்கிறோம்)
PICTURES THANKS TO GOOGLE