நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு பழைய தமிழ் திரைப்படம். டைரக்டர் ஸ்ரீதரின்
இயக்கத்தில் கல்யாண்குமார் – தேவிகா நடிப்பில் உருவான படம். போன ஜென்மத்தின் போது தனது பண்ணையில் வேலை
செய்யும் பண்ணையாள் மகளை (தேவிகா) அந்த ஜமீனின் ஜமீன்தார் மகன் (கல்யாண்குமார்)
காதலிக்கிறார்.
அழகுக்கும்
மலருக்கும் ஜாதியில்லை நெஞ்சில்
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை
ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
இரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த
ஏழையின் காதலில் பாபமில்லை
-
(பாடல் : கண்ணதாசன்)
என்று பாடித் திரிகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் (நம்பியார்) காதலர்கள்
இருவரும் குதிரை வண்டியில் தப்பும்போது, அந்த பெண்ணை தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு
கொன்று விடுகிறார். அவள் இறந்த சோகத்தில் ஜமீன்தார் மகனும் இறந்து விடுகிறார்.
அப்போதைய வெள்ளைகாரர்கள் அரசு
ஜமீன்தாருக்கு தண்டனை தந்து அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறை தண்டனை
முடிந்து வந்த அந்த ஜமீன்தார் தனது அரண்மனையில் மறைந்து வாழ்கிறார். காதலர்கள்
இருவரும் . அடுத்த ஜென்மத்தில் பிறக்க விதி வசத்தால் அவர்கள் காதல் தொடருகிறது.
நெஞ்சம்
மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை - (பாடல் : கண்ணதாசன்)
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை - (பாடல் : கண்ணதாசன்)
இதனை அறிந்த, (அவர்களது
அடுத்த ஜென்மத்திலும் உயிரோடு இருக்கும்) 109 வயதுள்ள கிழட்டு ஜமீன்தார் “ இந்த ஜென்மத்திலும் உங்களை சேர விடமாட்டேன்” என்று அந்த பெண்ணை சுடுவதற்கு தனது பழைய துப்பாக்கியை தூக்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக
ஜமீன்தார் புதை மணலில் சிக்கி இறக்கிறார். போன ஜென்மத்தில் சேரமுடியாத காதலர்கள்
இந்த ஜென்மத்தில் சேருகின்றனர். (கடைசி உச்சகட்ட (Climax) காட்சியில் நம்பியாரின் பயங்கரமான தோற்றம், ஆவேசமான
நடிப்பு இவைகளை மறக்க முடியாது.) இந்த படத்தில் காதலின் வலுவான சக்தி எது என்பதனை
ஸ்ரீதர் காட்டியுள்ளார்.
எட்டி மரம். அதன் அருகில் ஒரு முல்லைக் கொடி. அது ஒன்றினை பற்றிப் படரும்
இயல்புடையது. அந்த முல்லையானது எட்டிமரம்
என்று விலகுவதில்லை. அதன் மீது படரத்தான் நினைக்கிறது. இதனை மனோன்மணியம் இவ்வாறு
கூறுகிறது.
பருவம் வருதலாற் பற்றல்
விழைந்தனள்;
அருகுள து எட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்
அருகுள து எட்டியே யாயினும் முல்லைப்
படர்கொடி படரும்
(மனோன்மணியம் - முதல் அங்கம்: ஐந்தாம் களம்)
கவிஞர் கண்ணதாசன்
காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன. தாழையாம் பூ முடிச்சு என்று
தொடங்கும் பாடலில் கவிஞர்
மண் பார்த்து
விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
- பாடல் : கண்ணதாசன் ( படம்: பாகப்பிரிவினை)
என்ற வரிகளைச் சொல்லுகிறார். இன்னொரு இடத்தில்
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது
வேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே
- பாடல் :கண்ணதாசன் ( படம்: பாவமன்னிப்பு)
என்று பாடுகிறார்.
அவள் ஓர் செவிலித் தாய். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த அவளது பெண் தன் காதலனுடன்
சென்றுவிட்டாள். தன் மகளையும் அவளது காதலனையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள்.
எதிரே ஒரு ஜோடி. அந்த பெண் அவளது மகளைப் போலவே இருக்கிறாள். அருகில் சென்று
பார்த்தாள். அவள் வேறு ஒரு பெண். இது போல் பல ஜோடிகள். தேடித் தேடி அவளது கால்கள் நடை
தளர்ந்து விட்டன. கண்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்து ஒளி இழந்து விட்டன.
அப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. தனது மகளையும் அவளது காதலனையும் போன்று உலகில்
வானத்து நட்சத்திரங்களைப் போன்று அநேகர் என்று. ” இனி எங்கு தேடுவேன் ” என்று
அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு அந்த தாய்
திரும்பி விடுகிறாள்.
காலே பரிதப் பினவே
கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
- வெள்ளிவீதியார். ( குறுந்தொகை 44 )
பாரதியார் தனது குயில் பாட்டில்
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்
என்று கீதமிசைக்கிறார்.
பாரதிதாசன்
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.
- ( பாரதிதாசன் கவிதைகள் )
என்று பாடியுள்ளார்.
இப்படி மேற்கோள்கள் பலவர்றை சொல்லிக் கொண்டே போகலாம்.
காதல் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. இலக்கிய படைப்புகள்தான் எல்லா
மொழிகளிலும் இருக்கின்றன. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வது கிடையாது. அது ஒரு
இயற்கையான ஒன்று. இன்றைய சினிமாக்களிலும் சின்னத் திரைகளிலும் பழிவாங்கும்
வில்லத்தனமான கதைகளில் காதலை கொச்சைப் படுத்தி விட்டார்கள்.