ஒரு காலத்து நிகழ்ச்சிகளை வரலாறாக எழுதும்போது அப்போது எழுதப்பட்ட நூல்களையும் கட்டுரைகளையும் செய்தித் தாள்களையும் ஆவணங்களாக எடுத்துக் கொள்ளலாம். இது வலைப் பதிவர்கள் காலம். திருச்சியை மையப் படுத்தியே நிறைய பதிவுகளை ( கட்டுரைகள், கதைகள் ) திருச்சியைச் சேர்ந்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் (Retired Accounts Officer (CASH) BHEL Trichy அவர்கள் தந்துள்ளார். ( http://gopu1949.blogspot.in )
இதில் மிகைப் படுத்துதல் எதுவும் இல்லை. குறிப்பாக அறுபது, எழுபதுகளில் இருந்த அக்கால திருச்சியைப் பற்றி அவர் எழுதிய விதமே இதற்கு சாட்சி.
நடுத்தர மக்கள் நிலைமை:
மின்விளக்கே அதிகம் இல்லாத, அந்தக்கால திருச்சி வடக்கு ஆண்டார்தெரு.அங்கிருந்த பெரிய அரசமரம், எதிரில் உள்ள ராமா கபே, அருகில் உள்ள மதுரா லாட்ஜ் தொடங்கி, கீழ ஆண்டார் தெரு முடிய, மலைக்கோட்டை பகுதியில் நிறைய குடியிருப்புக்கள். எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்தவை. அங்கிருந்த ஒண்டு குடித்தனங்களை, குறிப்பாக நடுத்தர சமூக மக்களை நினைவில் வைத்து ‘’ மறக்க மனம் கூடுதில்லையே! ’’ என்ற கதையில் VGK அவர்கள் எழுதியுள்ளார்.. http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
// அப்போது எனக்கு அலைபாயும் 21 வயது. மணி, ராம்கி, மாது, ரத்தினம், சேகர், பாபு, வெங்கிட்டு என பல நண்பர்கள். தெரு விளக்கடியில் இரவு 10 மணிக்குமேல் கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்துவிட்டு பிறகே படுக்கச்செல்வோம்.
டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம். வாசக சாலையில் வாங்கி வரும் புத்தகங்கள், மைதானம் சென்று விளையாட்டு, ரேடியோ, சினிமா, சிலசமயம் சீட்டுக்கச்சேரி தவிர, இது போன்ற ஆருயிர் நண்பர்களின் நேருக்கு நேர் சந்திப்பு தான் மிகச்சிறந்த பொழுதுபோக்கு.
அவரவர் வீட்டின் ஆயிரம் சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றி அலசுதல், நடிகர்திலகம் சிவாஜி, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படங்கள் பற்றிய விமர்சனங்கள், இடையிடையே கட்டிளம் காளை வயதில் தானே வந்துபோகும் எங்களின் ஏக்கங்களும், ஒரு சிலரின் காதல் அனுபவங்களும் எனப்பேசப்பேச நள்ளிரவு வெகு நேரம் ஆகி பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று அவரவர் கூட்டை அடைவோம்.
.
எல்லோருமே படித்து, ஏதோ ஒரு கிடைத்த வேலையில் இருந்துகொண்டு, நிரந்தர வருவாய்க்கான வேலை வாய்ப்பைத்தேடி அலைந்த நேரம் அது. எல்லோருமே வறுமைக்கோட்டுக்கு கீழேயுமில்லாமல், மேலேயும் இல்லாமல் கோட்டை ஒட்டியேயுள்ள, ஓட்டு வீடுகளில் ஒண்டிக்குடித்தனமாக இருந்த நேரம் அது.
எங்கள் குடியிருப்பில் மிகச்சிறியதாக சுமார் ஐம்பது ஓட்டு வீடுகள். அவ்வாறான குடியிருப்புப் பகுதிகள் ஸ்டோர் என்று அழைக்கப்படும். எங்கள் வீட்டின் உட்புறத்தை விட அதிகமான புழங்கும் இடங்கள் எங்கள் வீடுகளைச்சுற்றி இருக்கும்.
நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு. பள்ளிக்கூடம், கடைத்தெரு, கோயில்கள், பொதுக்குழாயடி, பொதுக்கிணற்றடி, பொதுக்கழிப்பிடம் செல்லும் பாதை என பொதுவான இடங்களிலே தான், ஒருவரை ஒருவர் மின்னல் போல் பார்த்து மறைவோம்.
அதற்குள் பல பொதுமக்களின் கழுகுப்பார்வைகள் எங்களை நோட்டமிடும். இருப்பினும் அதில் ஒரு நொடிப்பொழுது, மின் அதிர்வுபோல ஒருவித சுகானுபவமும் ஏற்படுவது உண்டு.
பலர் வீடுகளில் மின் விளக்கே கிடையாது. கேஸ் அடுப்பும் வராத காலம் அது. சிம்னி, அரிக்கேன் லைட், திரி ஸ்டவ், பம்ப் ஸ்டவ், கரி அடுப்பு, விறகு அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு என்று அவரவர் ஏதேதோ உபயோகிப்பார்கள்.
ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருந்தது.
அந்த ஸ்டோரில் இறைக்க இறைக்க நீர் ஊறக்கூடிய, என்றுமே வற்றாத ஒரு பெரிய பொதுக்கிணறு. அந்தக்கிணற்றைசுற்றி பாறாங்கற்கள் பதிக்கப்பட்ட ஜில்லென்ற சமதரை. இரவுப்பொழிதில் கிணற்றடியிலும், கிணற்றைச்சுற்றியுள்ள சிமெண்ட் தரையிலுமாக, நிறைய ஆண்கள் கையில் ஒரு விசிறியுடன், துண்டை விரித்துப்படுத்திருப்பார்கள்.
இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது. திருடிச்செல்லும் அளவுக்கு விலை உயர்ந்த பொருட்கள் என்று எதுவும் யாரிடமும் கிடையாது. நிம்மதியான வாழ்க்கை.
இரவு நேரத்தில் கடும் குளிரோ, மழையோ வந்தால் மட்டுமே வீட்டுலுள்ள பெண்களுடன் ஆண்களும் கோழிக்குஞ்சுகள் போல அட்ஜஸ்ட் செய்து தங்கும்படியாக நேரிடும்.
இவ்வாறு கிணற்றடி போன்ற பொது இடங்களில் படுப்பவர்கள், விடிவதற்கு முன்பாக அனைவரும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து விடுவார்கள். அவர்களில் பலரும், அதிகாலையில் கிணற்று நீரில் குளித்துவிட்டு அவரவர்கள் பிழைப்புக்குச் செல்ல வேண்டும். //
மேலே, அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், (அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது) இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
திருச்சி நகரம்:
” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா ” என்ற கட்டுரையில் திருச்சி மலைக் கோட்டை பற்றியும் , அருகே உள்ள கடைத் தெருக்களைப் பற்றியும் கடைகளைப் பற்றியும் விவரிக்கிறார்.
// இந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.
//நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.
முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு. வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!
எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம். அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள். //
மேலும். திருச்சி மலை வாசலில் T.A.S ரத்தினம் பட்டணம் பொடிக் கடை என்று மூக்குப் பொடிக் கடை உள்ளது. சின்ன வயதில் அந்த பொடிக் கடைக்கு என்னை எங்கள் அப்பா அழைத்துச் சென்று இருக்கிறார். ஆசிரியர்கள், அரசாங்க அலுவலர்கள், மற்றவர்கள் என்று கடை வாசலில் எப்போதும் குறிப்பாக மாலை வேளையில் கும்பல் இருக்கும். அந்த பீங்கான் ஜாடிகளைப் பற்றியும், நீண்ட சிறிய கரண்டிகளைப் பற்றியும், அந்த கரண்டிகளில் ஒன்றில் ஓசிப் பொடி கொடுப்பதைப் பற்றியும் ” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ” என்ற கதையில் சுவையாகச் சொல்லுகிறார்.
//. “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன். அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.
சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு.
அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார். ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார்.
அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.
அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார். கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.
அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.
ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும். பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள். அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு, பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள். இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.//
திருச்சியில் உள்ள பள்ளிகளில் நேஷனல் உயர்நிலைப் பள்ளி பழமையான ஒன்று. தான் படித்த இந்த உயர்நிலைப் பள்ளி பற்றியும் மலரும் நினைவுகளாக. “ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) “ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இதில் அவர் படித்த காலத்தில் இருந்த பள்ளியின் சூழ்நிலை, ஆசிரியர்கள், நண்பர்கள் என்று நகைச் சுவையாகவும் அலுப்பு தட்டாமலும் விவரிக்கிறார். நானும் இந்த பள்ளியில்தான் படித்தேன்..http://gopu1949.blogspot.in/2012/03/1.html
// அந்தக்காலத்தில் நான் படித்த இந்த தேசியக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான், சேங்காலிபுரம் ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷதர், தூப்புல் ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், திருமதி சிவானந்த விஜயலக்ஷ்மி, திரு. கிருபானந்த வாரியார், புலவர் திரு. கீரன் போன்ற மிகப் பிரபலமான உபன்யாசகர்களால் புராணக்கதைகள் அடிக்கடி சொல்லப்படும். //
பள்ளிக்கூடத்து வாசலில் விற்ற தின்பண்டங்களைப் பற்றியும் ந்மது நாக்கு சப்பு கொட்டும் வண்ணம் சொல்கிறார்
//பள்ளிக்கூட வாசலில் குச்சி ஐஸ், எலந்தவடை, அரிநெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தைப்பழம், நவாப்பழம், கலாக்காய், கலாப்பழம், சுட்ட சோளக்கருதுகள், வேர்க்கடலை, பஞ்சு மிட்டாய் என என்னென்னவோ விற்பார்கள்.சற்று சுகாதரக்குறைவாக இருப்பினும் வசதியுள்ள பல மாணவர்களும் அவற்றை விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள்.
மற்றொருவர் ஒரு நாலு சக்கர சைக்கிள் வண்டியை நிறுத்தி வைத்துக்கொண்டு, அதைச்சுற்றிலும், சர்பத் பாட்டில்களாக அடுக்கி வைத்திருப்பார். மரத்தூளுடன் இருக்கும் பெரிய பாறை போன்ற ஐஸ்கட்டிகளை, தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு, அதை அப்படியே கேரட் சீவுவது போல அழகாகச் சீவி, சீவிய தூள்களை ஒரு கெட்டித்துணியில் பிடித்து சேகரித்து, அந்த ஐஸ் தூள்களை ஒரு கெட்டிக்குச்சியில் ஒரே அழுத்தாக அழுத்தி, கலர் கலராக ஏதேதோ சர்பத்களை அதன் தலையில் தெளித்து, கும்மென்று பெரியதாக பஞ்சுமிட்டாய் போல ஆக்கித் தருவார். //
திருச்சி கோயில்கள்:
திருச்சி ஒரு அமைதியான வரலாற்றுப் புகழ் உள்ள நகரம். ஊருக்குள்ளும் வெளியேயும் நிறைய கோயில்கள். அந்த கோயில்களைப் பற்றியும் நன்றாக எழுதியுள்ளார்.
திருச்சி தெப்பகுளம் அருகே வாணபட்டறை தெரு உள்ளது. ரொம்பவும் குறுகலான வளைந்த சாலைகள் கொண்டது. அந்த தெருவில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. ஆண்டுதோறும்
தேரோட்டம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியை தாயுமானவள் என்ற சிறுகதையில் அழகாகச் சொல்கிறார்.
//திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச்சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.
ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள்,கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! //
முன்பு சொன்ன ” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா ” என்ற கட்டுரையில் திருச்சி மலைக் கோட்டையில் உள்ள தாயுமானவர், உச்சிப் பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் கீழே உள்ள நந்தி கோயிலைப் பற்றியும் சொல்கிறார்.
// ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை. [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்// //
மற்றும் திருச்சி நகருக்கு வெளியே இருக்கும் கோயில்களைப் பற்றியும் , இந்த பதிவில் சொல்லுகிறார். “ ஏழைப் பிள்ளையார் “ என்ற பதிவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் பற்றியும், கீழே உள்ள வடக்கு ஆண்டார் தெரு, கிழக்கு ஆண்டார் தெரு, சின்னக் கடை வீதி, NSB ரோடு, நந்தி கோயில் தெரு என்று வலம் வந்து அங்குள்ள எல்லா பிள்ளையார் கோயில்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
//திருச்சியில் மிகப்பிரபலமான உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் மலையைச்சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் உண்டு. உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும்.
அந்த பிரதான நுழைவாயில், அந்த மிகப்பெரிய தெருவின் மத்தியில் அமைந்திருப்பதால், நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் வலதுகைப்பக்கத்தை [கிழக்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் சின்னக்கடை வீதி என்று அழைப்பார்கள், இன்று அங்கு சின்னக்கடைகளே ஏதும் கிடையாது என்பது போல உலக அளவில் பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையும், மற்றும் கோபால்தாஸ் போன்ற தங்க வைர நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளுமாக மாறிவிட்டது..
அதேபோல கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் இடது பக்கத்தை [மேற்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் (NSB) ரோடு என்று அழைப்பார்கள். இன்று அந்தத்தலைவரின் பெயர் சொல்லி யாராவது வெளியூர் ஆசாமிகள் விசாரித்தால், அந்தத்தெருவை அடையாளம் காட்டுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு “சாரதாஸ்” என்ற ஜவுளிக்கடலும், மங்கள் and மங்கள் என்ற நகை மற்றும் பாத்திரங்கள் கடலும், ரத்னா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய பாத்திர வியாபாரக்கடலும் தங்கள் கடல் அலைகளை தொடர்ந்து மோதிமோதி, கடற்கரை போல மக்களைக் கவர்ந்து இழுத்து வருகின்றன.
தேரோடும் தெற்கு வீதி [சின்னக்கடை வீதி மற்றும் NSB Road]
(1) உச்சிப்பிள்ளையார் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(2) கீழே ஸ்ரீ மாணிக்க விநாயகர் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(3) கிரிப்பிரதக்ஷணமாக வந்தால் தென் மேற்கு மூலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி [தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
தேரோடும் மேற்குவீதி
இந்த மேற்கு வீதி நந்தி கோயில் தெரு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான பிரும்மாண்ட நந்தியும், அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. பிரபலமான ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலின் ஒரு நுழைவாயிலும் இதே தெருவில் அமைந்துள்ளது. இந்தத்தெருவினில் நிறைய வணிக வளாகங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன.
(4) இந்த பிரும்மாண்ட நந்தி கிழக்கு முகமாக அமைந்திருக்க, அதன் வால்புறம் மேற்கு நோக்கி ஹனுமனுக்கும், பிள்ளையாருக்குமாக இரண்டு தனித்தனி கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இது தான் நாலாவது பிள்ளையார்.
தேரோடும் வடக்கு வீதி
இது “வடக்கு ஆண்டார் தெரு” என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குடியிருப்புகள் உள்ள பகுதி. இந்தத்தெருவில் மட்டும் நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள பிள்ளையார்கள்.
(5) வடமேற்கு மூலையில் அரசமரத்தடியில் உள்ள வரஸித்தி விநாயகர்
(6) செல்வ விநாயகர்
(7) ஏழைப்பிள்ளையார் எனப்படும் ஸப்தபுரீஸ்வரர்
(8) ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்
தேரோடும் கிழக்கு வீதி
இது கீழாண்டார் தெரு (அல்லது கிழக்கு ஆண்டார் தெரு) என்று அழைக்கப்படுகிறது. இங்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் கோயிலின் இரண்டு மிகப்பெரிய தேர்கள் நிறுத்துமிடம் முதலியன உள்ளன.
(9) வடகிழக்கு மூலை அரசமர ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கி உள்ளார்)
(10) ஸ்ரீ முத்தாளம்மன் திருக்கோயில் வாசல் பிள்ளையார்
(கிழக்கு நோக்கியபடி)
(11) மேற்படி பிள்ளையாரைப் பார்த்தபடி இன்னொரு பிள்ளையார்
(மேற்கு நோக்கியபடி)
(12) தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கியபடி)
இவ்வாறாக திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையையும், மலையைச்சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளிலுமாகச் சேர்த்து மொத்தம் 12 விநாயகர்கள் மிகவும் பிரபலமாக, சிறிய கோயில்கள் கொண்டு உள்ளனர். தினமும் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடைபெறுகின்றன. சங்கடஹரசதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் எண்ணிக்கையில் ஏழாவதான [வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள] ஏழைப்பிள்ளையார் என்னும் ஸப்தபுரீஸ்வரர் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.
சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களை ஸப்த ஸ்வரங்கள் என்போம். ஸப்தகிரி என்றால் ஏழுமலை என்று பொருள். ஸப்தரிஷி என்றால் ஏழு முனிவர்கள் என்று அர்த்தம். “ஸப்த” என்ற வடமொழிச்சொல்லுக்கு ஏழு என்று பொருள். ஏழு என்பது முழுமையைக் குறிப்பதாகும். உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ‘ஏழாவது பிள்ளையார்’ சொல்வழக்கில் ”ஏழைப்பிள்ளையார்” ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும்.
ஏழை மக்களுக்கு அருள் பாலிப்பவராக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். ஸப்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிஸிக்க இயலாதவர்கள் இந்த ஏழைப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டாலே அது உச்சிபிள்ளையாரை தரிஸித்ததற்கு சமமாகும் என்றும் சொல்லுகிறார்கள். பக்தர்கள் முழுத்தேங்காய்களின் குடுமிப்பகுதிகளை கயிற்றால் கோத்து மாலையாக இந்த ஏழைப்பிள்ளையாருக்கு அணிவித்து மகிழ்கிறார்கள்.
இந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். //
”காவேரி கரை இருக்கு! கரைமேலே இருக்கு” என்ற பதிவில் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப் பெருமாள் என்ற கோயிலைப் பற்றி அழகிய படங்களுடன் விவரிக்கிறார். இந்த கோயில் காவிரியின் தென் கரையில், காவிரிப் பாலம் அருகே கிழக்கில் ஓடத்துறை என்னும் இடத்தில் உள்ளது. காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் கோயிலுக்குள் காவிரி வந்து விடும்.
முடிவுரை:
நான் எனது வலைப் பதிவைத் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது திருச்சியைப் பற்றி எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது திரு VGK அவர்கள் தனது பதிவுகளில் திருச்சியைப் பற்றி தனக்கே உண்டான பாணியில் சிறப்பாக சுவைபட சொல்லியிருந்தார். எனவே நான் அப்போது திருச்சியைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இருந்தாலும் அவரது கதை கட்டுரைகளில் தந்த செய்திகளை தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினேன். ஒரு ஆய்வுக் கட்டுரை போன்று எழுத முடியாவிட்டாலும், ஒரு வலைப் பதிவிற்கு தேவையான முறையில் தந்துள்ளேன்.