Thursday 26 July 2012

எனது பெயர் – பெற்றோர் வைத்த பெயர்தான்.

பெயரில் என்ன இருக்கிறது?  ( WHAT’S IN A NAME? )  இது ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஓரிடத்தில் வரும் வாசகம். எனது பெயரைச் சொன்னவுடன் நிறையபேர் கேட்கும் கேள்வி (புனைபெயரோ என்ற அர்த்தத்தில்) “நீங்களாகவே உங்கள் பெயரை மாற்றி வைத்துக் கொண்டீர்களா? என்பதுதான். இல்லை எனது அப்பா வைத்த பெயர்தான் என்று சொல்லி நான் சலித்துக் கொள்வதில்லை. சொல்ல வேண்டியது என் கடமை. எனது தந்தை தமிழார்வம் உள்ளவர். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கொள்கை கொண்டவர். வடமொழியில் இருந்த சண்முகம் என்ற தனது பெயரை திருமுகம் என்று தமிழில் மாற்றம் செய்து கொண்டவர். ஊர் பெயரினையும் சேர்த்து திருமழபாடி திருமுகம் என்றுதான் எழுதுவார். நான் பிறப்பதற்கு முன் நல்லபடியாக ஆக வேண்டும் என்று திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் ஈசனை வேண்டிக் கொண்டதாகச் சொல்வார். தமிழ், சிலப்பதிகாரம் என்பதனை கருத்தில் கொண்டு நான் பிறந்தவுடன் (01.03.1955) அவரே எனக்கு வைத்த பெயர்தான் தமிழ் இளங்கோ” . வித்தியாசமான பெயர்தான்.

எங்கள் உறவினர்கள் அனைவரும் என்னை இளங்கோ என்றுதான் அழைப்பார்கள். கிராமத்தில் எனது அப்பாயி (அப்பாவின் அம்மா), அம்மாச்சி (அம்மாவின் அம்மா) இருவரும் இளங்கோவே ….. என்றுதான் விளிப்பார்கள். சிலர் என்னை தமிழ் என்றும் அழைத்ததுண்டு.

எனது படிப்பு முழுதும் திருச்சியில்தான்.முதல் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய (ஆர்.சி நடு நிலைப் பள்ளி), 6.ஆம் வகுப்பு முதல் S.S.L.C முடிய (நேஷனல் உயர்நிலைப் பள்ளி), புகுமுக வகுப்பு (நேஷனல் கல்லூரி), பி.ஏ.- தமிழ் இலக்கியம் (பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரி). எம்.ஏ தமிழ் இலக்கியம் (நேஷனல் கல்லூரி). கல்லூரிப் படிப்பும் எனது  அப்போதைய விருப்பமாக தமிழ் இலக்கியமே அமைந்து விட்டது. எனவே, எனது படிப்பு முடியும் வரை எனது பெயர் பற்றி  கேட்பவர்களுக்கு விளக்கம் சொல்லி மாளாது. அதேபோல எனது பெயரில் உள்ள தமிழ் என்பதற்கு கல்லூரி அலுவலகங்களில் ஆங்கிலத்தில் எழுதும்போது TAMIL, TAMIZ , TAMIZH என்று இஷ்டத்திற்கு எழுதுவார்கள். நான் எனது பெயரை சரியாக THAMIZH ELANGO  என்றுதான் எழுதுவேன்.எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள் இரண்டு.  சிலப்பதிகாரம், கம்பராமாயணம் . இரண்டையும் முழுமையாக ஆர்வத்தோடு படித்து இருக்கிறேன். 


கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். முன்பெல்லாம் முதுகலை பட்டம் பெற்றாலே போதும். விரிவுரையாளர் ஆகலாம். நான் எம்.ஏ முடித்த நேரம் M.Phil படிப்பும் வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். வங்கித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று இருந்த படியினால் குடும்பச் சூழ்நிலை கருதி கிடைத்த வங்கி வேலையில் சேர்ந்து விட்டேன்.   

வங்கியில் வேலைக்கு சேர்ந்த புதிதில், எனது பெயரை வைத்து, நான் தீவிர தமிழ் பற்றாளனோ அல்லது ஏதேனும் கட்சிக்காரனோ, என்று என்னிடம் சிலர் நெருங்கிப் பழகாமல் எட்டவே இருந்தனர். நான் அப்படி இல்லாத படியினாலும், எல்லோரிடமும் நன்கு பழகியதாலும் அவர்கள் நண்பர்கள் ஆனார்கள். வங்கியில் சேர்ந்ததும், ஆரம்பத்தில் எனக்கு அரசாங்க சலான்களுக்குப் பணம் வாங்கும் ( GOVERNMENT CASH COUNTER) வேலை. எனது பெயர் நீண்டு இருப்பதால், ஆயிரக் கணக்கான சலான்களில் கையொப்பம் போட்டு போட்டு எனக்கென்று ஆரம்பத்தில் இருந்த கையொப்பமே மாறிவிட்டது.

வங்கியில் பணிபுரியும் போது கவியரங்கக் கூட்டம் ஒன்றில் வங்கி அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன். பெயர் கருப்பையா பாரதி. அவர் சொன்னார் இளங்கோ நானும் உங்களைப் போல பெயருக்கு முன்னால் தமிழ் சேர்த்து தமிழ் கருப்பையா என்று வானொலியில் கவிதை வாசிக்கச் சென்றேன். அங்குள்ள நண்பர் இப்போதெல்லாம் ( எமர்ஜென்சி நேரம்) பெயருக்கு முன்னால் தமிழ் போடாதீர்கள் என்று சொன்னார். எனவே நான்  கருப்பையா என்ற பெயருக்குப் பின்னால் பாரதியை சேர்த்து கருப்பையா பாரதி ஆனேன் “ என்று சொன்னார். எனக்கு இது மாதிரி பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவரிடம் மட்டுமல்லாது மற்ற நண்பர்களிடமும், எனது பெயரை நானாக மாற்றிக் கொள்ளவில்லை. அப்பா வைத்த பெயர்தான் என்று விளக்க வேண்டியதாயிற்று.

பெற்றோர் வைத்த எனது பெயரை மாற்றவோ அல்லது சுருக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் தமிழ் இளங்கோ என்றே இருக்க ஆசைப்படுகிறேன்.

கல்லூரி வாழ்க்கையின் போது மறக்க முடியாத இலங்கை வானொலி அப்போது ஒலி பரப்பக் கேட்ட ஒரு பாடல் இதோ.... ....

என்ன பேரு வைக்கலாம்?
எப்படி அழைக்கலாம்?
சின்ன சின்ன கண்ணைக் காட்டி
சிரிக்கும் எங்க பாப்பாவுக்கு
என்ன பேரு வைக்கலாம்?
அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கனும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கனும் அதனால்
என்ன பேரு வைக்கலாம்?
எப்படி  அழைக்கலாம்?
-         பாடலாசிரியர்: (தெரியவில்லை) படம்: எங்கள் செல்வி (1960)

இதில் ஒவ்வொரு பெயராகச் சொல்லி, பெயருக்கு ஏற்றாற் போல் ஆகிவிடும் என்று, அது வேண்டாம், இது வேண்டாம் என்று காரணம்  சொல்லி விட்டு , முடிவாக  குழந்தைக்கு தமிழ் செல்வி என்று பெயர் வைப்பார்கள். இந்த பாடல் மிகவும் நீண்டது.  எனவே பாடல் வரிகள் போதும்.




30 comments:

  1. பெயரில் ஒன்றும் இல்லை சார். மனது தான் முக்கியம்.

    இராஜபாளையம் அருகே உள்ள ஊரில் உங்கள் பெயரில் தான் என் ஆருயிர் நண்பர் இருக்கிறார். உங்கள் தளம் வந்தவுடன் அவர் ஞாபகம் வராமல் இருக்காது.

    நல்ல பாடல்.

    நன்றி. (த.ம. 1)

    ReplyDelete
  2. பெயர்க்காரணத்தை ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்..இன்று வரைக்கும் மாறுதல் செய்யாமல் அதே பெயரை பயன்படுத்தி வருகிறீர்கள் ஐயா..மகிழ்ச்சியாக உள்ளது..

    ReplyDelete
  3. தங்களின் பெயர் விளக்கமும், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு அனுபவங்களும், மிகவும் ரசனையுடன் எழுதியுள்ளீர்கள், ஐயா. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தங்களை பற்றி கொஞ்சம் அறிந்துகொன்டத்தில் மிக்க மகிழ்ச்சி! தொடருங்கள்!

    ReplyDelete
  5. REPLY TO திண்டுக்கல் தனபாலன் said...

    எனது பெயரும் உங்கள் நண்பரின் பெயரும் ஒன்று என்பதனைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.

    ReplyDelete
  6. சென்ற ஆண்டு, ”பெயர் காரணம்” என்ற தலைப்பில் பலரும் தொடர்பதிவுகளாகவே எழுதக் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

    நான் கூட என்னுடைய பெயர் காரணத்தை, நகைச்சுவை கலந்து இதேபோல எழுதியிருந்தேன்.

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

    அவசியம் படித்துவிட்டு கருத்துக்கூறுங்கள், ஐயா.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  7. REPLY TO …. மதுமதி said...
    கவிஞர் மதுமதி அவர்களே, பல பணிகளுக்கும் இடையில் எனது வலைத் தளம் வந்து தங்கள் கருத்தினை தந்தமைக்கு நன்றி!
    .

    ReplyDelete
  8. REPLY TO வலைஞன் said....
    உங்கள் அன்பான யோசனைக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. //சிலப்பதிகாரம், கம்பராமாயணம் . இரண்டையும் முழுமையாக ஆர்வத்தோடு படித்து இருக்கிறேன். //

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  10. //பெற்றோர் வைத்த எனது பெயரை மாற்றவோ அல்லது சுருக்கவோ எனக்கு விருப்பம் இல்லை. எனவே நான் தமிழ் இளங்கோ என்றே இருக்க ஆசைப்படுகிறேன்.//

    அதுதான் ஐயா நல்லது. இந்தப்பெயரே தமிழுடன் சேர்ந்து இருப்பதால் மிக அழகாகவே உள்ளது. ;)

    ReplyDelete
  11. REPLY TO …..வை.கோபாலகிருஷ்ணன் said... (1)
    VGK அவர்களுக்கு வணக்கம்! ஆரம்பத்தில் வலைப் பதிவில் என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்ள கூச்சமாகவும், பயமாகவும் இருந்தது. இப்போது உங்கள் பதிவுகளைப் படித்ததிலிருந்து அந்த கூச்சமும் பயமும் தெளிந்து விட்டன. எனவே எனது பெயர்க் காரணம் பற்றிய பதிவு வருவதற்கு நீங்களும் ஒரு காரணம். நன்றி!

    ReplyDelete
  12. //கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். //

    ஆஹா! நமது விருப்பம் போல என்றும் எதுவும் அமைவது இல்லை தான்.

    அமைந்ததையே கஷ்டப்பட்டு, விரும்பி ஏற்க வேண்டியதாக உள்ளது.

    உத்யோகம் மட்டும் அல்ல. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களுக்குமே இது பொருந்தும்.

    நல்லதொரு பதிவு தந்து, எண்ணங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி, ஐயா.
    vgk

    ReplyDelete
  13. தமிழ் இணைந்த இனிமையான பெயர்க்காரணம் அருமை..வாழ்த்துகள் !

    ReplyDelete
  14. இந்தப் பதிவைப் படிக்கும் வரை நானும்
    தங்கள் பெயர் புனைப்பெயர்தான் என நினைத்திருந்தேன்
    படிப்பில் தந்தையின் விருப்பம் தன்யன் விருப்பமாவதும்
    அதன் படி நடப்பதும் அபூர்வமே
    வேலியிலும் வாய்த்திருந்தால் இன்னும் சிறப்பாக
    இருந்திருக்கும் என நினைக்கிறேன்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. REPLY TO …. வை.கோபாலகிருஷ்ணன் said... (2,3,4,5 )

    VGK அவர்களின் மறு வருகைகளுக்கு நன்றி!
    நீங்கள் எழுதிய பேரைச் சொல்லவா என்ற பதிவை ஏற்கனவே படித்து இருக்கிறேன். திருச்சியைப் பற்றிய அந்த பதிவை மறுபடியும் படித்தாலும் திகட்டாது.

    கம்பராமாயணத்தின் முழுமையையும் பழைய உரையாசிரியர் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையுடன் படித்துள்ளேன். ( நேஷனல் கல்லூரியில் அப்போது சைவ சித்தாந்தத்தோடு, கம்பராமாயணம் முழுமையும் எம்.ஏ – தமிழ் இலக்கியத்தில் பாடம் அப்போது எனக்கு பேராசிரியர்கள் திருமேனி, ராதாகிருஷ்ணன், சத்தியசீலன்)

    /// ஆஹா! நமது விருப்பம் போல என்றும் எதுவும் அமைவது இல்லை தான். அமைந்ததையே கஷ்டப்பட்டு, விரும்பி ஏற்க வேண்டியதாக உள்ளது. உத்யோகம் மட்டும் அல்ல. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களுக்குமே இது பொருந்தும். ///

    நீங்கள் சொன்ன இவை மறக்க முடியாத, மறுக்க முடியாத வாசகங்கள்.

    ReplyDelete
  16. REPLY TO… // இராஜராஜேஸ்வரி said...

    சகோதரி இராஜராஜேஸ்வரியின் வருகைக்கும், அருமையான தமிழ் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  17. REPLY TO …. // Ramani said... //
    நீங்கள் மட்டுமல்ல நிறையபேர் எனது பெயரை புனைபெயர் என்றுதான் நினைத்தார்கள். நீங்கள் சொல்வது போல் வேலையும்
    அமைந்து இருந்தால் சிறப்பாகத்தான் இருந்திருக்கும். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...... ....
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  18. //தி.தமிழ் இளங்கோ said...
    REPLY TO …. வை.கோபாலகிருஷ்ணன் said... (2,3,4,5 )

    VGK அவர்களின் மறு வருகைகளுக்கு நன்றி!
    நீங்கள் எழுதிய பேரைச் சொல்லவா என்ற பதிவை ஏற்கனவே படித்து இருக்கிறேன். திருச்சியைப் பற்றிய அந்த பதிவை மறுபடியும் படித்தாலும் திகட்டாது.//

    ஐயா, தாங்கள் படித்துள்ளதாகச் சொல்லும் பதிவு வேறு. அது திருச்சி என்ற நம் ஊரைப்பற்றியது.

    நான் படிக்கச்சொல்லி அனுப்பியுள்ள இணைப்பு வேறு. அது என் “வை.கோபாலகிருஷ்ணன்” என்ற பெயரை மட்டும் பற்றியது. தயவுசெய்து இணைப்பின் மூலம் சென்று பாருங்கள், ஐயா.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  19. REPLY TO …. வை.கோபாலகிருஷ்ணன் said... (6)

    // ஐயா, தாங்கள் படித்துள்ளதாகச் சொல்லும் பதிவு வேறு. அது திருச்சி என்ற நம் ஊரைப்பற்றியது. //

    மன்னிக்கவும்! மாற்றிச் சொல்லி விட்டேன். ஆனாலும் அப்போதே நீங்கள் எழுதிய, உங்களுடைய ஊர், பேர் பற்றிய இரண்டு பதிவுகளையுமே படித்துள்ளேன். கருத்துரை மட்டும் தந்ததில்லை. அங்கு வருகின்றேன்

    ReplyDelete
  20. இனிய பெயர் விளக்கம். பதிவுலகில் முன்பு ஒரு பெயர்க்காரணம் பற்றி ஒரு தொடர்பதிவு வந்தது. பலரும் எழுதியிருக்கிறார்கள். நான் கூட எழுதி இருக்கிறேன் [http://venkatnagaraj.blogspot.in/2011/03/blog-post.html]...

    உங்களது பெயர் பற்றிய விளக்கங்கள் அருமை. தொடரட்டும் இனிய பகிர்வுகள். அதிலும் அந்த இலங்கை வானொலிப் பாடல் - அருமையோ அருமை. த.ம. 5

    ReplyDelete
  21. REPLY TO ….. // வெங்கட் நாகராஜ் said... //

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்கள் பெயர் பற்றிய பதிவில் எனது கருத்தினைப் பதிந்துள்ளேன்.

    ReplyDelete
  22. அருமையான பெயர் விளக்கம் தந்து பாடலுடன் முடித்தவிதம் அருமை.

    ReplyDelete
  23. REPLY TO ……. Sasi Kala said...

    சகோதரி கவிஞர் “தென்றல்” சசிகலாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. பெரும்பாலானவருக்கு விருப்பம் ஒன்றும் தொழில் ஒன்றுமாக அமைந்துவிடுகிறது.அமைவதை விரும்புவது அமைதியான வாழ்க்கைக்கு உதவும்.

    ReplyDelete
  25. REPLY TO ………T.N.MURALIDHARAN said...
    // பெரும்பாலானவருக்கு விருப்பம் ஒன்றும் தொழில் ஒன்றுமாக அமைந்துவிடுகிறது. அமைவதை விரும்புவது அமைதியான வாழ்க்கைக்கு உதவும். //

    வாழ்க்கை கடைசிவரை இப்படியேதான் போய்விடுகிறது. உங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  26. அன்பின் தமிழ் இளங்கோ - பெயர்க் காரணம் அருமை யான பதிவாக அமைந்துள்ளது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  27. REPLY TO … … cheena (சீனா) said...

    அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! நிறையபேர் என்னுடைய பெயரை புனைபெயர் என்று நினைத்து விட்டனர். அதனால்தான் இந்த பதிவு. தங்கள் பாராட்டிற்கு நன்றி!


    ReplyDelete
  28. அன்புள்ள ஐயா!
    முதலில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு வாழ்த்துகள்.வலைச்சரம் மூலமாகவே இந்தப் பதிவுக்கு வந்தேன்.

    உங்கள் பெயர் பற்றி எனக்கும் கூட சிறிய ஐயப்பாடு இருந்தது! இப்போது நீங்கி விட்டது!

    உங்கள் பாட்டிமார்கள் இருவரும் கூப்பிடும் 'இளங்கோவே...' பாணி மிகவும் பிடித்திருக்கிறது.

    மிகச் சிறந்த வாரமாக வலைச்சரம் அமைய வாழ்த்துகள்!

    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  29. மறுமொழி > Ranjani Narayanan said...
    // உங்கள் பெயர் பற்றி எனக்கும் கூட சிறிய ஐயப்பாடு இருந்தது! இப்போது நீங்கி விட்டது! //

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்து சொன்னமைக்கும் நன்றி!

    ReplyDelete