எல்லோரும் இன்புற்று இருக்கவே விரும்புகின்றனர். “ நல்லவன் வாழ்வான், கெட்டவன் அழிவான்” – என்பதும் “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்;” – என்பதும் கேட்பதற்கும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில்?
பல ஆயிரக் கணக்கான மனிதர்கள் ஒரு பெரிய திறந்த வெளியில் கூடியுள்ளனர். வெளியிலிருந்து ஒருவன் ஏதோ ஒரு வெறுப்பின் காரணமாக கூட்டத்தில் ஒரு கல்லை கோபமாக விட்டெறிகிறான். ஒருவர் தலையில் விழுந்து பெரிய காயத்தை உண்டு பண்ணி விடுகிறது. அந்த கூட்டத்தில் அவர் மட்டுமா இருக்கிறார்? கல்லை எறிந்தவன் இவரைப் பார்த்து வீசவில்லை. இருவருக்குமே ஒருவரை ஒருவர் தெரியாது. அத்தனை பேரையும் விட்டு விட்டு அந்தக் கல் அவர் மீது மட்டும் விழுவானேன்? யாரைக் காரணம் சொல்வது?
விடிந்தால் ராமனுக்கு முடி சூட்டு விழா! அயோத்தியா பட்டணமே ஆரவாரமாக இருக்கிறது. ஒரே இரவில் தசரதனிடம் கைகேயி பெற்ற வரத்தால் இந்த ஆரவாரம் போய் விடுகிறது. ராமன் கானகம் செல்ல பரதனுக்கு முடி சூட்ட முடிவாகிறது. இதனைக் கேட்ட லட்சுமணன் கொதித்து எழுகின்றான். லட்சுமணனின் கடும் கோபத்தைக் கண்ட ராமன் அவனை நோக்கி – “ தம்பீ! ஆறு என்றால் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது இயற்கை விதி! ஆனால் அந்த ஆறே வற்றிப் போனால் ஆற்றின் மீதா குறை சொல்ல முடியும். அது போலத்தான். இங்கு இது நிகழ்ந்தமைக்கு யாருடைய பிழையும் காரணம் இல்லை. விதியின் பிழைதான். இதற்காக நீ கோபம் கொள்ளலாமா? “ என்று ஆற்றுகின்றான். இதோ கம்பனின் பாடல்!
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
- கம்பராமாயணம் ( அயோத்தியா காண்டம் )
விதியின் பிழையை உணர்த்திய அதே கம்பனுக்கு சொந்த வாழ்க்கையிலும் அதனை சந்திக்க நேரிடுகிறது. கமபனின் ஒரே மகன் அம்பிகாபதி தன் அப்பனைப் போலவே நல்ல புலவன். ஆனால் சிருங்கார ரஸனை மிகுந்தவன். சோழ மன்னனின் மகள் அமராவதியை விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறான். மன்னன் இதனை விரும்புவானா? மன்னன் கோபம் கொண்டு அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கிறான். எவ்வளவோ முயன்றும் கம்பரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்நாள் இதுவிளையும் என்றெழுத்துத் தானிருக்க
என்னாலே ஆவதொன்று மில்லையே; - உன்னாலே
வந்ததுதான் அப்பா, மகனே, தவிப்பவர் ஆர்
முந்தையில்நீ செய்தவினை யே
- கம்பர் (தனிப் பாடல்)
என்று அவர் பாடும்போது நமது நெஞ்சம் கரைந்து விடுகிறது. கம்பன் மகன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அப்போது கம்பர் விதியை நொந்து பாடிய பாடல்.....
மட்டுப்படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாய் என்ன காதல் பெற்றாய் மதன்கை அம்பினால்
பட்டுப் பட்டாயினும் தேறுவை யேஎன்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே
- கம்பர் (தனிப் பாடல்)
”கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்“ , “ கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயங் களியாதே “ – என்று புகழப் படும் கம்பரின் வாழ்க்கையில் விதி விளையாடிய சோகம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?