Thursday, 26 January 2012

காவிரிக் கரையில் உள்ள திருச்சியில் குடிநீர்ப் பிரச்சினை


காவிரி ஆறே கரை புரண்டு ஓடினாலும், காவிரிக் கரையில் இருக்கும் திருச்சி மக்களுக்கு மட்டும் குடிக்க  தண்ணீர் சரிவர கிடைக்காது. திருச்சி நகரத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சியின் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் இன்னும் குடங்களை வைத்துக் கொண்டு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது.

             ( படம்: திருச்சி காவிரிப் பாலம் ( கூகிளுக்கு நன்றி! )

தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சி காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு அமைதியான நகரம். வட கரையில் ஸ்ரீரங்கம் இருக்கிறது. ஒரு காலத்தில் திருச்சி நகராட்சியாக இருந்தபோது மக்களுக்கு குடிநீரை காலை மாலை இரண்டு வேளையும் தந்தார்கள். நகரம் வளர வளர மாநகராட்சி ஆன பின்னர் ஏதேனும் ஒரு வேளை தந்தார்கள். இப்போது சில மணி நேரங்கள் மட்டுமே வழங்கப் படுகிறது. கருணாநிதி நகர், அய்யப்ப நகர், எடமலைபட்டி புதூர், ஏர்போர்ட், கிராப்பட்டி, அரியமங்கலம், பொன்மலைபட்டி போன்ற புறநகர்ப் பகுதிகளில் காவிரிநீர் சரியாக வருவதில்லை.  பல வீடுகளில் உள்ள குழாய்களில் காற்றுதான் வருகிறது. இன்னும் சில இடங்களில் மோட்டார் வைத்து வருகின்ற தண்ணீரும் உறிஞ்சப்படுவதாகச் சொல்கிறார்கள்.. 

குடிநீர் பிரச்சினையைப் பயன்படுத்தி திருச்சியின் பல இடங்களில் மினரல் தண்ணீர் வியாபாரம் படு ஜோராக உள்ளது. திருச்சியில் பல அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத நிறுவனங்கள் மினரல் தண்ணீரைத்தான் குடிக்க விலைக்கு வாங்குகிறார்கள். அந்த மினரல் தண்ணீரும் பூச்சி மருந்து வாடையினால் குடிப்பதற்கே யோசிக்கும் நிலைமையில் உள்ளது இன்னும் சில இடங்களில் தண்ணீர் எடுத்து விற்பவர்கள் பிளாஸ்டிக் குடம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள்.


இங்கு இவ்வாறு திருச்சி மக்கள் குடிநீருக்காக அல்லாடிக் கொண்டு இருக்கும்போது, திருச்சி காவிரி ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பிற மாவட்ட மக்களுக்கு “ ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் “ என்ற பெயரில் கொண்டு செல்லப் படுகிறது. இந்த திட்டம் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு குழாய் மூலம் காவிரி நீர் கொண்டு செல்லப் படுகிறது. மேலும் செல்லும் வழியில் சில இடங்களில் இந்த குழாயிலிருந்து திருட்டுத்தனமாகவும் தண்ணீர் எடுக்கிறார்கள். அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பது போல திருச்சி அரசியல்வாதிகள், அடுத்தவர்களுக்கு த்ண்ணீரை தானம் செய்து விட்டு திருச்சி மக்களை தாகத்தில் விட்டு விட்டார்கள். புறநகர் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டினாலும் தரப் போவது காவிரிநீர் கிடையாது. போர்வெல் தண்ணீரும் காவிரி தண்ணீரும் கலந்த ஒன்றுதான். சுத்தமான காவிரி தண்ணீர் இல்லை..


யார் ஆட்சியில் இருந்தாலும், திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கும், வி.ஐ.பிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லாரிகள் மூலம் நல்ல காவிரி தண்ணீர் தாராளமாக வழங்கப்படுகிறது. திருச்சி பொதுமக்கள்தான் பாவம் ! வரியையும் கட்டிவிட்டு, ஓட்டுப் போட்ட பாவத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளாலும் குடிநீருக்காக எப்போதுமே அலையவிடப் படுகிறார்கள்.









Monday, 16 January 2012

எனது தாத்தாவிடம் இருந்த தாழம்பூ குடை

எனது சொந்த ஊர் திருமழபாடி(அதாவது அப்பா ஊர்). இது கொள்ளிடத்தின் வட கரையில். இதன் தென்கரையில் எனது அம்மாவின் ஊர். இது திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி பக்கம், கொள்ளிடம், காவிரி என்ற இரண்டு ஆறுகளுக்கும் இடையில் அமைந்துள்ள புதகிரி என்ற கிராமம். அப்பா ரெயில்வேயில் வேலை பார்த்தது, நாங்கள் குடும்பத்தோடு வசித்தது, நான் படித்தது எல்லாமே திருச்சியில்தான். நான் சிறுவனாக இருந்தபோது, பள்ளி விடுமுறை நாட்களில் அம்மாவின் ஊருக்கு சென்று விடுவேன்.

அங்கு எனது தாத்தா ஒரு குடை வைத்து இருந்தார். தாழம்பூ குடை. நிறைய பேர் அதனை தாழங்குடை என்றே அழைத்தனர். அந்த குடை தாழம்பூ மடல்களால் செய்யப்பட்டது. தாழம்பூ வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த தாழம்பூ மடல்கள்,  பக்குவம் செய்யப்பட்டு வேயப்பட்டு, கைப்பிடி செருகப்பட்ட குடை. அது வெளுத்து இருக்கும். குடை பார்ப்பதற்கு கேரளா சாமிக் குடை போன்று இருக்கும். ஆனால் அந்த குடையைவிட இது சிறியது. இதனை மடக்க முடியாது. கேரளாவில் தாழங்குடைகள் அதிகம். பழைய - கறுப்பு வெள்ளை  படங்களில் இந்த குடையை பார்க்கலாம். என்னுடைய தாத்தா இந்த தாழங்குடையை அருகில் உள்ள  ஊரில் நடைபெறும் வார சந்தையில் வாங்கி வைத்து இருந்தார். அவர் எங்கு சென்றாலும், குறிப்பாக மழைக் காலங்களில் எடுத்துச் செல்வார். வயலுக்குச் செல்லும் போது களத்து மேட்டில் கட்டிலில் வைத்து விடுவார். பெரும்பாலும் அப்போது எல்லோர் வீட்டிலும் இந்த தாழம்பூ குடைதான். அதாவது தாழங்குடை.

சிறுவனான நான் அந்த ஊருக்குச் செல்லும்போது, தாத்தா வீட்டு திண்ணையில் இருக்கும் தாழங்குடையை எடுத்துக் கொள்வேன். அந்த குடையை சுழற்றியபடி கிராமத்து சிறுவர்களோடு விளையாடுவேன். சிறுவனாக இருந்தபடியினால் அது ரொம்பவும் கனக்கும். மழைக் காலங்களில் அதனை எடுத்துக் கொண்டு வெளியில் செல்லும் போது , குடையின் மீது பட்டு வழியும் மழைநீர் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். கொள்ளிட ஆற்று கரையில் மாடு மேய்க்கும் பெரியவர்கள் இந்த தாழங்குடையை பிடித்தபடி, வழி மாறி கொல்லைக் காட்டில் நுழையும் ஆடு மாடுகளை அதட்டிக் கொண்டு இங்கும்அங்கும் போவார்கள். சிலசமயம் கிராமத்து அக்கிரஹாரத்திலிருந்து வைதீக பிராமணர் யாரேனும் சட்டை போடாமல் இந்த தாழங்குடையை தலைக்கு மேலே ஒரு கையில் பிடித்துக் கொண்டு வருவார். அந்த காட்சி வாமன அவதாரம் எடுத்த,  ஓங்கி உலகளந்த பெருமாள்  தாழங்குடையோடு வருவது போன்று இருக்கும். மேற்கூண்டு இல்லாத மாட்டு வண்டியில் அந்த குடையோடு யார் போனாலும் வேடிக்கையாக இருக்கும். என்ன, பஸ்சில் மட்டும் அந்த குடையை எடுத்துச் செல்ல முடியாது.

 
இப்போது கால வெள்ளத்தில் அந்த தாழம்பூ குடை கிராமங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. முன்பு போல் கிராமங்களில் வாய்க்கால் வரப்பு ஓரத்தில் தாழம்பூ புதர்களை யாரும் வைப்பதில்லை. தாழம்பூ மணம் பாம்புகளை கவரும். எனவே, பாம்பு பயம் காரணமாக, நல்ல மணம் கமழும் அந்த தாழம்பூ புதர்களை கொளுத்தி விடுகின்றனர். தாழம்பூ குடைகளும் இப்போது கிடைப்பதில்லை. இருந்தாலும் கோயில்களில் இருந்து வரும் உற்சவர் ஊர்வலங்களில் இறைவன் மீது இருக்கும் சாமி குடைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனது தாத்தா வைத்து இருந்த தாழம்பூ குடைதான் நினைவுக்கு வருகிறது. தாத்தாவும் இப்போது நமக்கு சாமிதானே!

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரம் இருக்கும்! 
தரம் இருக்கும்!
அது தாமதித்தாலும்
நிரந்தரமாக மணம் கொடுக்கும்!
நல்ல மணம் கொடுக்கும்!           

 - பாடல்: வாலி (படம்: தாழம்பூ)

( Pictures thanks to Google )
 


Saturday, 14 January 2012

பொங்கலோ பொங்கல் !


எட்டுத் தொகையிலும்
பத்துப் பாட்டிலும்
காப்பியங்கள் ஐந்திலும்
இலக்கியப் பொங்கல்!

கம்பனின் கவிதைகளில்
காவியப் பொங்கல்!

கலைஞரின் கடிதங்களில்
தமிழ்ப் பொங்கல்!

கண்ணதாசன் பாடல்களில்
கவிதைப் பொங்கல்!

வாலியின் நாடாக்களில்
வாலிபப் பொங்கல்!

புரட்சி நடிகரின் முகத்தினில்
புன்னகைப் பொங்கல்!

அம்மாவின் அரசியலில்
அதிரடிப் பொங்கல்!

தோழர்களின் கைகளில்
அறிக்கைப் பொங்கல்!

நண்பர்களின் இதயங்களில்
வாழ்த்துப் பொங்கல்!

அனைவருக்கும் சொல்லுகின்றேன்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
என்று உள்ளக் களிப்போடு!

(Photo: thanks to Peter Koellikers (Google)

Sunday, 8 January 2012

சிறுவாச்சூர் மதுர காளியம்மன்


திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். (சென்னையிலி ருந்து திருச்சிக்கு செல்லும்போது பெரம்பலூரைத் தாண்டி உள்ளது ) சாலைக்கு மேற்கே பிரசித்தி பெற்ற காளி கோயில் அமைந்துள்ளது. ஊர் பெயரையும் இணைத்து சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு கடைசியில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம். மேலே படத்தில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. நடக்க இயலாதவர்கள் இவைகளில் செல்லலாம்.
  

தல புராணம் :

காவிரிப்பூம்பட்டினத்தில் நன்கு வாழ்ந்த கோவலன் கண்ணகி தம்பதியினர் விதி வசத்தால், பிழைப்பைத் தேடி மதுரைக்கு செல்லுகின்றனர். அங்கு கோவலன் கள்வன் என குற்றம் சாட்டப்பட்டு பாண்டிய மன்னனால் இறக்கின்றான். செய்தி கேட்டு வெகுண்டெழுந்த கண்ணகி தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்ததோடு மதுரை பற்றியெரிய சாபம் தருகிறாள். பத்தினி சாபத்தால் மதுரை எரிந்தது. அப்போது மதுரா தெய்வம் கண்ணகி முன் தோன்றுகிறது. அது எல்லாவற்றிற்கும் ஊழ்வினை தான் காரணம் என்று கண்ணகியை அமைதிப் படுத்துகிறது. மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள். ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள்  மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள். சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன்  நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது.  சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். வெளியே சென்ற செல்லியம்மன் கோயிலில் எப்போதும் முதல் மரியாதை தனக்கு தரப்பட வேண்டும் என்றபடியினால்,  தீபாராதனை காட்டும் போது, செல்லியம்மன் இருக்கும் மேற்கு திசை நோக்கி முதலில் காட்டுகிறார்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த காளி, திங்கட் கிழமைதான் பக்தர்களுக்கு காட்சி தந்தாள். எனவே திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் கோயில் திறந்து இருக்கும். இப்போது ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, மற்றைய விழாக் காலங்களிலும், தமிழ் விசேட தினங்களிலும் கோயில் திறந்து வைக்கப் படுகிறது.

இன்னும் சிலர் கண்ணகி மதுரையை எரித்ததால், மதுரையை விட்டு வெளியேறிய மதுரா தெய்வம்தான் இவ்வாறு சிறுவாச்சூரில் அமர்ந்தது என்றும், அது முதலில் மதுரை காளி என்று அழைக்கப்பட்டு பின்னர் மதுர காளி ஆயிற்று என்றும் கதை சொல்லுவார்கள்.

ஆதி சங்கரர் ஒருமுறை யாத்திரை செல்லும்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. அப்போது ஒரு மரத்தடியில் ஒரு சுனை நீர் தோன்றுகிறது. தாகம் தீர்த்துக் கொள்ளும் போது சுனை வடிவில் வந்தது நான்தான் என்று மதுரகாளியம்மன் காட்சி தந்துவிட்டு சிலையாக மாறி விடுகிறாள். ஆதி சங்கரர் வைத்து வழிபட்ட, அந்த மதுர காளியம்மன் சிலைதான் இப்போதுள்ளது என்றும் ஒரு கதை உண்டு.

நம்பிக்கைகள் :

இந்த கோயிலில் இருக்கும் கிணற்று நீரில் குளித்துவிட்டு, அங்கேயே மாவு இடித்து மாவிளக்கு, நெய்விளக்கு போடுவது சிறப்பு. கோயில் வளாகத்திலேயே மாவிடிக்க உரல்களும், உலக்கைகளும் இருக்கின்றன. முடியாதவர்களுக்கு மாவு இடித்துத் தர அங்கேயே கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.கோயில் வளாகத்தில் குளித்துவிட்டு துணிகளை மாற்ற வெளிப்புற மண்டபங்கள் உள்ளன.

செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள். அம்மன் என்றாலே மக்கள் வைத்திருக்கும் பொதுவான நம்பிக்கைகளும், வழிபாடும் உண்டு. இந்த கோயிலின் தல மரம் மருத மரம் ஆகும்.

கோயில் திருவிழாக்கள்:

சித்திரை மாதத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மலை வழிபாடு, திருக் கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், தேர் இழுத்தல் முதலிய சிறப்பம்சங்கள் நடைபெறும்.

அருகில் உள்ள கோயில்கள் :


மேற்கே செல்லியம்மன் கோயில், ஆத்தடி குருசாமி கோயில், கம்பப் பெருமாள் சன்னதி ஆகிவையும், வடக்கே ஆலயத்தின் முன்புறம் சோலைமுத்து அய்யனார் ஆலயமும், தெற்கில் ஊர்சுத்தியான் கோயிலும், மேற்புற மேட்டில் பெரியசாமி ஆலயமும் உள்ளன.

(மேலே உள்ள இரு படங்களும் சோலைமுத்து அய்யனார் கோயிலில் எடுக்கப்பட்டவை. கீழே உள்ள இரண்டு படங்களும் ஊர்சுத்தியான் கோயிலில் எடுக்கப்பட்டவை) 


தங்கும் விடுதிகள்:

சிறுவாச்சூரிலேயே இப்போது திருச்சி சென்னை சாலையில் தங்கும் விடுதிகள் உள்ளன. அருகிலுள்ள திருச்சி, பெரம்பலூர் ஊர்களில் தங்கியும் இங்கு வரலாம். இரண்டு இடத்திலிருந்தும் பஸ் வசதி அதிகம்.

( சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலுக்கு, இந்த ஆண்டு ( 2012 ) ஜனவரி முதல் தேதியன்று சென்றபோது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் மற்றும் பதிவு. மேற்கே வனப் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் அதனைப் பற்றி எழுதுகிறேன் )






Sunday, 1 January 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


எத்தனை ஆண்டுகள் வந்தாலும் போனாலும்
அத்தனை மாந்தரும் அகமகிழச் சொல்வது
புத்தாண்டு வாழ்த்தே!
சித்திரையில் பஞ்சாங்கம் படித்தாலும் 
தைதையென்று தரையினில் குதித்தாலும்
முத்திரை பதிப்பது இந்த புத்தாண்டு வாழ்த்தே!

ஆங்கிலப் புத்தாண்டு அவனியிலே
அனைவருக்கும் பொதுவாகிப் போனது!
இண்டர் நெட்டில், ஈமெயிலில், பேஸ் புக்கில்
எழுதும் கடிதத்தில், சிணுங்கும் செல்போனில்,
சிரித்த முகமாய் நேருக்கு நேராய் அனைவரும்
சொல்வது புத்தாண்டு வாழ்த்தே!

ஆங்கில வார்த்தை என்றாலும் அனைவரையும்
உற்சாகமாக்கும் “ஹேப்பி நியூ இயர் “
சொல்வதில் தவறில்லை!

மரபுக் கவிதை நானறிந்தாலும் -
வார்த்தைகளை மடக்கியும் நீட்டியும்
சொன்னேன்! - இது கவிதை இல்லை!
வசன கவிதைகளால் ஆகிப்போனது காலம்!


(Photo Thanks to Free-Press-Release)