எம்ஜிஆர் என்றால் அவர் ஒரு ஹீரோ. அவர் நடித்த படங்களில் அவருக்கென்று ஒரு பாணி. அதாவது தனி ஸ்டைல். எம்ஜிஆர் ஸ்டைல்.அவரது காலத்தில் கதாநாயகனாக நடித்த எல்லோருமே வயதானவர்கள்தான். எல்லோருமே கதாநாயகனாக, கல்லூரி மாணவனாக, இளைஞனாக நடித்தனர். அவர்களில் அவர்களை விட இவர், அதாவது எம்ஜிஆர் கொஞ்சம் மூத்தவர் அவ்வளவுதான். ஆனாலும் அவரை எதிர் முகாமில் வயதான நடிகர் என்று கிண்டலடித்தனர்.
எனவே தனது தோற்றத்தை காட்டிக் கொள்வதில் தனி கவனம் செலுத்தினார். அதற்குத் தகுந்தாற் போல காட்சிகள் அமைக்கச் சொன்னார். உடைகள் அணிந்தார். மேக்கப் போடச் சொன்னார். பெரும்பாலும் அவரது பாடல்களில் அவர் அணியும் அரைக் கை சட்டை என்பது கைகளில் உள்ள முண்டாவைக் காட்டும். அவரது எந்த தனிப் பாடலை பார்த்தாலும் அவர் கைகளை வீசிக் கொண்டும், உயர்த்தி கொண்டும் வேகமாக ஓடி வருவதை நாம் காணலாம். (அச்சம் என்பது மடமையடா – மன்னாதி மன்னன் ; உலகம் பிறந்தது எனக்காக – பாசம் ; புதிய வானம் புதிய பூமி – அன்பே வா ; அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் & ஏன் என்ற கேள்வி – ஆயிரத்தில் ஒருவன் ) அதே போல திடீரென்று ஏதேனும் ஒரு கனமான பொருளை தூக்குவார் அல்லது நகர்த்தி வைப்பார். துள்ளி குதிப்பார். அவரது காதல் பாடல்களும் இதற்கு தப்பாது ( காற்று வாங்கப் போனேன் – கலங்கரை விளக்கம் ; நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் –அன்பே வா )
எம்ஜிஆர் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே இருந்தார். அவர்கள் இவரைவிட வயது குறைந்தவர்கள். கதாநாயகிகள் மாறிக் கொண்டே இருந்தாலும் இவர் என்றும் ஹீரோவாகத்தான் ( EVER GREEN HERO ) இருந்தார்.அதுதான் எம்ஜிஆர். ஆனால் அவருக்கு சிலை வைக்கும் அன்பர்கள் அவர் விரும்பிய ஹீரோ தோற்றத்தில் சிலை வைப்பது கிடையாது. அவரது வாழ்வின் பிற்பகுதியில் தொப்பியோடு இருந்த அவரது முதுமை தோற்றத்தையே வடிவமைக்கின்றனர். இது சரியா? எம்ஜிஆர் என்றால் இளமை – கம்பீரம் – புன்னகை என்று சிலை வடிவமையுங்கள்.