பொதுவாக வட இந்திய அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து யார் வந்து டெல்லியில் நாட்டாமை செய்தாலும் அவர்களுக்கு பிடிக்காது.இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் திட்டிக் கொள்வார்கள்.ஆனால் ஊழல் குற்றசாட்டில் ”உள்ளே” பிடித்துப் போடும் அளவுக்கு பெரிதாக எதுவும் நடந்து விடாது.
ஒரு முறை கருணாநிதியிடம் நீங்கள் ஏன் பிரதமர் பதவிக்கு ஆசைப் படவில்லை என்று கேட்டபோது “என் உயரம் எனக்கு தெரியும்” என்று பதிலளித்தார்.இவ்வாறெல்லாம் உஷாராக இருந்தவர் டெல்லி அரசியலில் சிக்கியது வருத்தமான விஷயம்தான். பி.ஜே.பியும் சரி காங்கிரசும் சரி ஆட்சிக் கட்டில் ஆடாமல் இருக்க கருணாநிதியின் ஆதரவைத்தான் எதிர்பார்த்தனர்.உள்ளே நுழைந்து நாட்டாமை செய்வதை விரும்பவில்லை.ஆனால் கருணாநிதி சிலரை நம்பி டெல்லி அரசியலில் நுழைந்தது தப்பாக போய் விட்டது. கற்றுக் குட்டிகளுக்கு பெரிய பதவிகளை வாங்கிக் கொடுத்ததும் ஒரு காரணமாகிவிட்டது.அவர்கள் போனில் பேசக் கூடாதவர்களிடம் பேசி சிக்கலில் சிக்கிவிட்டனர்.
ஊழல் என்றால் “ஸ்பெக்ட்ரம்” மட்டும்தான் ஊழலா?வேறு எதிலும் ஒன்றுமே நடக்கவில்லையா?இதை இந்த அளவுக்கு ஊதிக் கொண்டே போகக் காரணம் இதில் இழுத்து விடப்பட்டவர்கள் தமிழ் நாட்டு அரசியலை விட்டு டெல்லி அரசியலில் மூக்கை நுழைத்தவர்கள்.முக்கியமான பதவிக்காரர்கள்.இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் அடிபட்ட பெயர் நீரா ராடியா.இவர் பல அரசியல் கட்சிகளுக்கு(எந்த ஆட்சி வந்தாலும்) நன்கு பரிச்சயமானவர்..இவரைப் பற்றிய பேச்சே இப்போது இல்லை.
மாநிலத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி மத்தியில் ஆதரவு மட்டும் என்ற நிலைப்பாட்டினை கலைஞர் கருணாநிதி எடுத்து இருந்தால் இன்றைய நிலைமை தி.மு.க வுக்கு வந்து இருக்காது.